
நவீன வாகனங்கள் மற்றும் மனிதர்கள் சக்கரத்தில் பயணிப்பதைத் திரையில் பலமுறை கண்டிருக்கிறோம். ‘மார்டல் இன்ஜின்ஸ்’ எனும் படத்தில், அதற்கெல்லாம் அடுத்த கட்டமாக லண்டன் மாநகரமே சக்கரத்தில் பயணிக்கிறது.
‘மார்டல் இன்ஜின்ஸ்’ என்ற பெயரில் பிலிப் ரீவ் எழுதிய ஒரு நாவலை மையமாக வைத்து கிறிஸ்டியன் ரிவர்ஸ் இயக்கியுள்ள இந்த விஞ்ஞான நவீனம், லண்டன் நகரின் பின்னணியில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய ஒரு கற்பனைக் காவியம்.
‘கிங் காங்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ தொடர் படங்கள், ‘தி ஹாபிட்’ தொடர் படங்கள் போன்ற மகத்தான படைப்புகளைப் பிரம்மாண்டமான முறையில் உருவாக்கித் திரையில் உலா விட்ட பீட்டர் ஜாக்சன் இப்படத்தின் இணை தயாரிப்பாளர். 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞான ரீதியிலான சில நிகழ்வுகளின் விளைவாக, மனித குலமே உருமாறி பல மாறுதல்களை ஆரத் தழுவிக் கொண்ட ஒரு காலகட்டம். ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும், கொலை செய்தும் வாழ்கிற ஒரு சூழல். அப்பொழுது ஹெல்டர் ஷா என்கிற ஒரு பெண், எதிர்பாராத விதத்தில் அங்கு வந்து சேர்கிறாள். அந்தச் சூழ்நிலையைத் தன் ஆளுமைக்குக் கொண்டு வந்து வழி நடத்தவல்ல சக்தி அவளிடம் மட்டுமே உள்ளது. வெளி உலக அனுபவம் அதிகமில்லாத ஓர் அப்பாவி, 16 வயது நிரம்பிய டாம் நேட்ஸ்வொர்த்தி. லண்டனில் வாழ்பவன்.
ஒரு கட்டத்தில், ஹஸ்டரும் டாமும் சந்திக்க நேரிடுகிறது. ஹெஸ்டர், தனது தாயின் மரணத்திற்குக் காரணமானவன் எனக் கருதும் தேடஸ் வெலண்டின் என்பவனைக் கொல்ல முற்பட, சந்தர்ப்பவசத்தால், டாம் இடையில் வர, ஹெஸ்டரின் திட்டம் செயலிழந்து விடுகிறது. இவர்கள் இருவரும், ஆனா ஃபாங் எனும் தேடப்படும் ஒரு பெண் குற்றவாளியோடு இணைந்து, எதிரிகளைச் சமாளித்து வெல்ல புதியதொரு திட்டம் தீட்டுகிறார்கள். சக்கரங்களில் பயணிக்கும் லண்டனில், அவர்களது திட்டம் வெற்றி பெற்றதா என்பதே படத்தின் கதை.