Shadow

பூசாண்டி வரான் விமர்சனம்

பூச்சாண்டி எனும் தலைப்பு கிடைக்காததால், ஆனாலும் அத்தலைப்புத்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால், பூசாண்டியில் சமரசமாகியுள்ளது படக்குழு. மலேஷியாவில் எடுக்கப்பட்டுள்ள தமிழ்ப்படம்.

கதாபாத்திரங்கள் அனைவருமே பரிச்சயம் அற்ற முகங்கள் என்றாலும், பூச்சுகளற்ற இயல்பான மனிதர்களாய்த் திரையில் நடித்துள்ளதால், மனதோடு ஒட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் நேசத்துடன் பேசிக் கொள்வதும், அவர்களது விருப்பங்களும், ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதும் என நம்மில் ஒருவராக மாறி விடுகின்றனர். நாயகி ஹம்சினி பெருமாள் முதல் அனைவருமே சிறப்பாக நடித்திருந்தாலும், கதையை முன்னகர்த்துவதில் பெரும்பங்கு வகிக்கும் ஷங்கர் கதாபாத்திரத்தில் வரும் தினேஷ் சாரதி கிருஷ்ணன் பிரமாதப்படுத்தியுள்ளார். க்ளைமேக்ஸில் அவரெடுக்கும் முக்கியமான முடிவொன்று, அவரை எதிர்நாயகனாக்கினாலும், படத்தின் நாயகன் என்று குறிப்பிடும்படி சிறப்பாகத் தன் பங்கினைச் செலுத்தியுள்ளார். மாற்றுத் திறனாளியாக நடித்திருக்கும் லோகன் நாதன், நகைச்சுவைக்காகத் தொடக்கத்தில் பயன்படுத்தியது போலிருந்தாலும், க்ளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியில் ஊனமுற்றவரின் வலியைப் பேசி மனதைக் கனக்க வைக்கிறார். இயக்குநரின் கதாபாத்திரங்களுக்கான டீட்டெயிலிங் தான் நடிகர்களை நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் சாமானிய மனிதர்களாக மாற்றி மேஜிக் புரிகிறது.

ஷங்கர், குரு, அன்பு ஆகிய மூன்று நண்பர்கள், ஓயிஜா போர்டினில் பாண்டியர் கால நாணயம் ஒன்றினைப் பயன்படுத்தி, ஆவியுடன் பேச முயற்சி செய்கின்றனர். மல்லி எனும் ஆவி அவர்களைத் தொடர்பு கொள்கிறது. ஷங்கர் மல்லியிடம் பணமும், குரு தனது ஊனமுற்ற கால் சரியாகவேண்டுமெனக் கேட்க, அவர்களிடம் அந்த ஆவி சாமர்த்தியமாக ‘டீல்’ போடுகிறது. டீல் எல்லாம் சரிப்பட்டு வராது எனக் கடுப்பாகும் குரு, நாணயத்தை வீசியெறிய, அவன் அமானுஷ்ய முறையில் இறக்கிறான். நண்பனை இழந்தவர்கள், ஆவியுடன் பேசும் முயற்சியைக் கைவிடுவதோடு, அந்த வீட்டை விட்டும் வெளியேறி விடுகின்றனர்.

படத்தின் இடைவேளையின் பொழுது, ஒரு சுவாரசியமான திருப்பத்தில் மீண்டும் கதை சூடு பிடிக்கிறது. ஆவிக்கும் நாணயத்துக்கும் உள்ள தொடர்பைத் தேடி, ஷங்கரும் அன்பும் மீண்டும் ஆட்டத்தைத் தொடங்குகின்றனர். அது அவர்களைக் கண்ணுக்குத் தெரியாத நதிக்குக் கொண்டு செல்கிறது. அந்த நதி புதைத்து வைத்திருக்கும் மர்மம்தான் படத்தின் அட்டகாசமான க்ளைமேக்ஸ்.

பாண்டியர் கால நாணயத்தின் பின்புறம் பொறிக்கப்பட்டுள்ள திரிசூலம் ஏந்திய உருவம் பூச்சாண்டியைக் குறிக்கிறது. நதிக்குள் புதைந்திருக்கும் அமானுஷ்ய சக்திக்கும், பூச்சாண்டிக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுக்கடுக்கான சுவாரசியங்களுடன் படம் சொல்கிறது. திருநீற்றினைப் பூசிய ஆண்டி என்பதன் சுருக்கம் தான் பூச்சாண்டி (பூச்சு + ஆண்டி). தமிழகத்தின் இருண்ட காலமான களப்பிரர்களின் காலத்தில், திருநீற்று அணிபவர்களை யாரேனும் பார்த்தாலே, பார்த்தவர்களைத் தண்டிக்க உத்தரவிட்டுள்ளனர். திருநீற்றை நெற்றியில் அணிந்தவர்களைப் பார்த்தாலே தண்டனையா என்று உடல் முழுவதும் திருநீற்றைப் பூசி ஆண்டிகள் சிலர் புரட்சி செய்தனர். அந்த ஆண்டிகளே பூச்சாண்டி என அழைக்கப்பட்டதாக இயக்குநர் JK விக்கி சொல்கிறார். ஆனால் பொது நம்பிக்கையில், பூச்சாண்டி என்பவர் கன்னிப்பெண்களைக் கடத்திச் சென்று, அவர்களது பூப்புக்குருதியைக் குடித்து வழிபடும் மலையாள மாந்திரீகர்களைக் குறிக்கும். ஆனால் புனைவின் அழகே, இப்படியான விஷயங்களைக் கலைத்து அடுக்கிச் சுவாரசியப்படுத்திப் பார்ப்பதுதானே! (களப்பிரர்கள் மேல் தூக்கிப் பழியைப் போட்டாலும், வசனத்தில் ஓரிடத்தில் சமணராக இருந்து சைவத்துக்கு மாறிய பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் பெயரை மறவாமல் கொண்டுவந்துள்ளார் இயக்குநர். 😉 )

மலேஷியா (கடாரம்), களப்பிரர்கள், பாண்டியர்களின் நாணயம், ஓயிஜா போர்ட், அமானுஷ்ய சக்தி என திருப்பங்களுக்கும் சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லாத படம். மிகக் குறைந்த பட்ஜெட்டில் மிக நிறைவானதொரு முயற்சி.