Shadow

சில்லுக்கருப்பட்டி விமர்சனம்

sillu-karuppatti-review

இந்த உலகம் அன்பிற்கானது. இந்த மனிதர்கள் அன்பால் ஆனவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள். அன்பை அதிகாமாக வைத்திருப்பவர்களும் கூட என்பதைக் கவித்துவமாகச் சொல்லிச் செல்கிறது சில்லுக்கருப்பட்டி.

நான்கு கதைகளுக்குள் நான்கு வாழ்க்கையை வைத்து சில்லுக்கருப்பட்டியைத் திகட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

குப்பை மேட்டில் கிடைக்கும் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் ஒரு சிறுவன் கையில் கிடைக்கும் வைரமோதிரமும், அந்த மோதிரத்தைத் தொலைத்த பணக்கார வீட்டுச் சிறுமியும் எப்படி நட்பாகிறார்கள் என ஒரு கதை.

திருமணம் நிச்சயமாகி இருக்கும் வேளையில் கேன்சர் வந்த ஐடி இளைஞனும், அவனோடு ஓலா காரில் ட்ராவல் ஷேர் செய்து, பின் காதலை ஷேர் செய்யும் பெண்ணுக்கும் நடக்கும் சம்பவங்கள் ஒரு கதை.

முதிர்ந்த வயதிலும் காதல் வரும் என்பதையும், அந்தக் காதல் வருவதற்கான காரணத்தையும் அற்புதமாகச் சொல்லும் ஒரு கதை.

திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளைப் பெற்றபின் தொலைந்து போன அன்பை மீட்டெடுக்க முடியாமல் தவிக்கும் ஒரு இல்லற ஜோடிகளின் கதை.

நான்கு கதைகளுமே ஒரு தனிப்படமாக எடுக்கக் கூடிய அளவிற்குச் சிறப்பானவை. அதைச் சுருங்கச் சொன்னாலும் அருமையாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

படத்தின் ஆதார விசயமே அன்பு தான். அவ்வன்பை, படத்தின் மைய கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் இடங்கள் ஒவ்வொன்றும் கவிதை.

நான்கு கதைகளில் வரும் கதாபாத்திரங்களான சமுத்திரக்கனி, சுனைனா, மணிகண்டன், நிவேதிதா சதீஷ், லீலா சாம்சன், சாரா அர்ஜுன், க்ராவ்மகா ஸ்ரீராம், ராகுல் என அனைவருமே படத்தின் பெரும் தூண்கள். யார் நடிப்பிலும் துளியும் மிகையில்லை.

அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி யக்ன மூர்த்தி ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்களின் அரும் பணியும் படத்தின் தரத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பிரதீப் குமாரின் பின்னணி இசையும் க்ளாசிக்.

மனதிற்கு மதுரமான திரைக்கதையை அமைத்து, இந்த வருட இறுதியை தனது சில்லுக்கருப்பட்டியால் இனிமையாக்கியுள்ளார் இயக்குநர் ஹலிதா ஷமீம்.

– ஜெகன் சேட்