விசாரணையில் துவங்கும் படம், சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு விசயத்தை மீள் விசாரணை செய்வதாக முடிகிறது.
லிவிங் டுகெதரில் இருக்கும் ஒரு ஜோடியில், பெண் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவளின் காதலன், ‘கொலையை நான் தான் செய்தேன்’ என ஒப்புக் கொள்கிறான். ஆனால் கொலையை அவன் செய்யவில்லை. அந்தக் கொலையை யார் செய்தார் என்ற கேள்வியோடு படம் விரிகிறது.
யார் கொலைகாரர் என்ற கேள்வியில் பயணிக்கும் படத்தில் திருப்புமுனைகள் தான் பிரதானம். V1 படத்தில் அது திரும்பும் இடத்தில் எல்லாம் இருக்கிறது. அவையெல்லாம் நம்மை ஈர்ப்பதற்கான திருப்புமுனைகளையே ஒழிய லாஜிக் ரிதீயான திருப்புமுனையாக இல்லை. இதுதான் இப்படத்தின் சறுக்கல்.
நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோ சிரமம் இல்லாமல் நடிக்க வேண்டிய இடங்களில் எல்லாம் சிரமப்பட்டிருக்கிறார். நாயகி விஷ்ணுபிரியா ஓரளவு அவரின் காதாபாத்திரத்திற்குரிய நியாயத்தை நடிப்பில் சேர்த்துள்ளார். லிஜீஸ் நடிப்பு மட்டுமே கச்சிதம்.
படத்தில் கவனம் ஈர்ப்பது கிருஷ்ணசேகர் T.S. ஒளிப்பதிவும், ரேனி ரபேலின் பின்னணி இசையும் தான். ஒரு க்ரைம் த்ரில்லர் படம் என்பதற்கான சாட்சியாக இந்த இரண்டு டிப்பார்ட்மென்ட்டும் விளங்குகின்றன.
ராட்சசன் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார் இயக்குநர் பாவேல் நவகீதன். ஆனால் அதற்கு திரைக்கதை உருவாக்கத்தில் ராட்சச உழைப்பைப் போட்டிருக்க வேண்டும். ஆனாலும் படம் பெரிதாக சோர்வடையச் செய்யவில்லை. ஒன் டைம் வாட்சபள் என்பது இப்போது அதிகமாய் உபயோகிக்கப்படும் ட்ரெண்டான வார்த்தை. அதை V1 படத்திற்கும் பயன்படுத்தலாம்.
– ஜெகன் சேட்