நடிகர், பாடகர், பாடலாசிரியர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட சிம்பு, “என் ஆளோட செருப்பக் காணோம்” படத்தின் மூலம் 100 பாடல்கள் பாடிய பெருமையைப் பெற்றிருக்கிறார். 1999இல் வெளியான “மோனிஷா என் மோனோலிசா” படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாமல் சக ஹீரோக்கள், வளரும் நடிகர்களின் படங்களிலும் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பதுதான் இதில் சிறப்பம்சம்.
100 பாடல்கள் என்ற மைல் கல்லை எட்டியிருக்கும் சிம்பு அதைப் பற்றிக் கூறும்போது, “பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம். என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. நான் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களைப் பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன். எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த மற்றும் பெரிய புரிதலைக் கொடுத்திருக்கிறது. எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. என்னைப் பொறுத்த வரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர் தான். ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. எனக்கானத் தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன்” என்றார்.