Shadow

சிIII விமர்சனம்

Singam 3 review in Tamil

சிங்கம் மூன்றாம் பாகத்தின் தலைப்பு செல்லமாகச் சுருங்கி “சி3” ஆகிவிட்டது.

ஆந்திரக் கமிஷ்னர் கொல்லப்படுகிறார். புலனாய்வு செய்ய தமிழகத்தில் இருந்து டி.சி.பி. துரைசிங்கம் ஆந்திர அரசால் அழைக்கப்படுகிறார். கமிஷ்னரைக் கொன்றவர்களை நூல் பிடித்துப் போனால், ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு பெரும் வில்லன் கிளம்புகிறார். பணம் சம்பாதிக்கும் போதையில் தெரிந்தே தவறு செய்யும் வில்லனை துரைசிங்கம் எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

அப்படியொரு வேகம் கதையின் நகர்வில். இடையில், சம்பந்தமில்லாமல் சூரி செய்யும் அசட்டுக் காமெடிகளால் நியாயமாகப் பார்வையாளர்கள் கொலைவெறி ஆகவேண்டும். ஆனால், நின்று நிதானித்து மூச்சு விட சூரியே உதவுகிறார். இரண்டாம் பாதிக்கு பின் தான் விட்டல் எனும் வில்லனைச் சேர்ந்தாற்போல் திரையில் 30 நொடிகளுக்கு மேல் பார்க்க முடிகிறது. முதல் பாதியில், எக்சர்சைஸ் செய்கிறார்; தனி விமானம் சள்ளெனத் தரையிறங்குகிறது; ஃபோன் செய்கிறார்; எப்பவும் ரெஸ்ட்லெஸாகவே உள்ளார்.

இரண்டு பாகங்களில் கல்யாணம் செய்து கொள்ளாமல் அனுஷ்காவைக் காக்க வைத்த சூர்யா, ஒரு மின்னல் ஃப்ளாஷ்-பேக்கில் அவசர கதியில் அவரைக் கல்யாணம் செய்துகொள்கிறார் இம்முறை. முதல் பாகத்தில், சொந்த ஊருக்குப் போகலாமென்ற முடிவிலிருக்கும் சூர்யாவின் மனநிலையில் ஓர் அழகான ட்ரான்ஸ்ஃபர்மேஷனை அனுஷ்கா உருவாக்குவார். இரண்டாம் பாகத்தில், அண்டர் கவர் ஆப்ரேஷனில் என்.சி.சி. ஆஃபீசராகப் பணியாற்றி, கலவரம் உருவாகும் சூழலில் டி.எஸ்.பி.யாக ட்ரான்ஸ்ஃபார்ம் ஆவார். ஆனால், இப்படத்தில் முதல் காட்சியில் இருந்தே ஆந்திரப் புழுதி பறக்க வெளுத்து வாங்கிக் கொண்டே இருக்கிறார் சூர்யா. யாரை எதற்கு ஓங்கி அடித்தாரென யோசிக்கும் முன்பே, மேலும் பலரைப் பறக்க விடுகிறார் வேறு மாநிலத்தில் டூட்டியில் இருக்கோம் என்ற அசெளகரியத்தின் காரணமாக என்னவோ, இம்முறை என்கவுன்ட்டரைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

இவ்வளவு பரபரப்பிலும், வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளைக் குப்பைத் தொட்டியாக உபயோகிக்கும் அவலத்தை அழுத்தமாகப் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ஹீரோயிசம் முதலிரண்டு பாகங்களிலேயே உச்சம் தொட்டுவிட்ட நிலையில், இப்படத்தில் புதிதாக ஒன்றுமில்லை என்றே சொல்லவேண்டும். நிதின் சத்யா போன்ற ஹேக்கர் உடனிருந்தால், சூரி கூட ‘சூப்பர் காப்’ ஆக உச்சம் தொடலாம் (சூர்யா என்னெவ்வோ செய்கிறார்; ஆனால், நிதின் சத்யாவை ஏமாற்றிய டெலிகாம் நிறுவனத்தின் ஆர்கனைஸ்ட் வொயிட்-காலர் ஊழலைத் தடுக்க முடிந்திருந்தால் ‘மக்களின் காப்’ என அன்போடு அழைக்கப்பட்டிருப்பார்).

முந்தைய பாகங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்தாண்ட விதம் ரசிக்க வைக்கிறது. மனோரமாவின் மரணத்தையும் அழகாகக் கதையோடு இயைந்துள்ளனர். ஐய்யோ பாவமென அனுஷ்காவை சூர்யாவிடம் இருந்து தூர வைத்து விட்டு, பத்திரிகையாளர் அக்னியாக வரும் ஸ்ருதி ஹாசனுடன் நாயகனைப் பழக விட்டுள்ளார் இயக்குநர். இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்டாமாம். அறை எண். 406, இந்தியா சைக்கிள்ஸின் கெஸ்ட் ரூமெனக் கூட இன்வெஸ்டிகேட் செய்யாமல் எழுதும் கிசுகிசு நிருபர். இரண்டு நாயகிகள் ‘மஸ்ட்’ என்ற டோலிவுட் இலக்கணம் சரியே, ஆனால் கச்சிதமாய்த் திணித்திருக்கலாம் இயக்குநர் ஹரி. எனினும், சோர்வோ சலிப்போ இல்லாமல் 2 மணி நேர 36 நிமிடங்களைப் பார்வையாளர்கள் மின்னற்கணமாகப் பொழுதுபோக்க இயக்குநர் ஹரி பொறுப்பேற்பது சிறப்பு.

விட்டல் பிரசாதாக வரும் தாகூர் அனூப் சிங், ஃபோனில் பேசிப் பேசியே மாய்கிறார். எனினும் சிங்கத்தின் கர்ஜனை முன் எல்லாம் நிசப்தமாகிவிடுகிறது.