Shadow

“சிவாஜியும் இளையராஜாவும் கவுண்டமணியின் ரசிகர்” – இயக்குநர் பி.வாசு

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. சமகால அரசியலை நகைச்சுவையாகச் சொல்லியுள்ள இந்தத் திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும் குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.ஈ. ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது.

இயக்குநர் பி.வாசு, “நானும், கவுண்டமணியும் இணைந்து பணியாற்றிய பல படங்களின் வெற்றி விழாவில் சந்தித்திருக்கிறோம். ஆனால் முதல்முறையாக அவர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ பட விழாவில் நான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் ராஜகோபாலுக்கும், தயாரிப்பாளர் ரவி ராஜாவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கவுண்டமணியின் காமெடி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அவரை நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய முதல் நன்றி. கவுண்டமணியைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. முதலில் அவருக்கு மேனேஜர் என்று யாரும் கிடையாது. அவரிடம் டிரைவரும் கிடையாது. அவரிடம் டைரியும் கிடையாது. அனைத்தையும் மனதில் குறிப்பாக எழுதி வைத்துக் கொள்வார். இதைப் போன்ற எளிமையான, தயாரிப்பாளர்களுக்குச் சௌகரியமான நடிகர் தமிழ்த்திரையுலகில் வேறு யாரும் இல்லை. அந்த அளவிற்கு அவர் ஒரு பர்ஃபெக்ட்டான நடிகர்.

கவுண்டமணி அதிகம் நடித்தது என்னுடைய இயக்கத்தில் உருவான படங்களில்தான். இதுவரை 24 படத்தில் நானும் அவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம்.‌ அந்த 24 படங்களில் 20 படங்கள் ஹிட். பின்னணி இசை அமைக்கும்போது இளையராஜா கவுண்டமணியின் வசனங்களைக் கேட்டும் நடிப்பைப் பார்த்தும் ரசிச்சு சிரிப்பார். அவர் கவுண்டமணியின் மிக தீவிரமான ரசிகர்.

நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை என்னிடம், ‘கவுண்டமணி போன்ற நடிகர்கள் நம்மிடம் இருப்பது நாம் செய்த பாக்கியம்’ எனச் சொல்லியிருக்கிறார். தமிழ்த் திரையுலகில் உள்ள பெரும்பாலான முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கவுண்டமணியின் ரசிகர்கள்தான். மொழி தெரியாத நபர்களையும் சிரிக்க வைக்க கூடியவர் கவுண்டமணி” என்றார்.