Search

சிவி – 2 விமர்சனம்

ஷட்டர் (2004) எனும் தாய்லாந்து படத்தை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு சிவி எனும் படத்தை, கே. சுந்தர் தயாரிப்பில், கே.ஆர்.செந்தில்நாதன் இயக்கினார். மீண்டும் 15 ஆண்டுகள் கழித்து, Gonjiam: Haunted Asylum எனும் கொரியன் தொடரை மையப்படுத்தி சிவி – 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் கே.ஆர்.செந்தில்நாதன். ஆர் மாஸ் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக லலிதா கஸ்தூரி கண்ணன், சிவி-2 திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

‘சிவி’ படத்தில் பேய் செய்த கொலைகளையும், அக்கொலைகள் நிகழ்ந்த மூடப்பட்டிருக்கும் ஷைன் மருத்துவமனையில் நிலவும் அமானுஷ்யத்தையும் வெளிக்கொணர சில கல்லூரி மாணவர்கள் நெமிலிச்சேரி செல்கிறார்கள். யூ-ட்யூப்பில் லைவாக ஒளிபரப்பி, பார்வையாளர்களை அமானுஷ்யம் இருப்பதாக நம்ப வைத்து சம்பாதிப்பதுதான் அவர்களது திட்டம். ஆனால் சிவியின் முதல் பாகத்துப் பேயான நந்தினி மீண்டும் சார்ஜ் எடுத்துக் கொள்ள, மாணவர்களின் கதி என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாகத்தின் தொடர்ச்சி என்றாலும், முதல் பாகம் பார்க்காதவர்களும் கதையைப் புரிந்து கொள்ள ஏதுவாக எடிட்டிங் செய்துள்ளனர். குறைந்த பட்ஜெட்டில், ‘கோ ப்ரோ (Go Pro)’ கேமிராவை உபயோகித்தே ஒளிப்பதிவாளர் பி.எல்.சஞ்சய் படப்பிடிப்பை முடித்துள்ளனர். ‘சிவி’ படத்தில் பயன்படுத்திய எஃபெக்ட்களையே பயன்படுத்தி திகில் காட்சிகளுக்கு உபயோகப்படுத்தியுள்ளது இயக்குநரின் சாமர்த்தியம்.

கேமிராக்களில் இருந்து வீடியோ ஃபூட்டேஜ்களை மீட்கும் ஹலீஃபா எனும் பாத்திரத்தில் சாம்ஸ் நடித்துள்ளார். பேயின் கோட்டையாய் மாறிவிடும் ஷைன் மருத்துவமனையில் என்ன நடந்தது என தனது வீட்டில் வீடியோக்களை ஓட விட்டுப் பார்க்கிறார். அவரைச் சுற்றியும் அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழத் தொடங்குகிறது. அந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறையினரும் அமானுஷ்யத்தால் பாதிப்படைகின்றனர்.

மாணவர்களை ஒன்றிணைத்து ப்ராஜெக்ட்டைத் தலைமை தாங்குபவராகத் தேஜ் சரண்ராஜ் நடித்துள்ளார். மாணவர்கள் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் முகம் மனதில் பதியாததால், கதையோடு அவர்கள் எப்படி அசோஷியேட் ஆகிறார்கள் எனத் தெரியவில்லை. கூட்டமாகச் செல்கிறார்கள் என்றளவில் இருப்பதால், அவர்கள் பாதிப்படையும்போது பெரிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தவில்லை. படத்தின் நாயகனாகத் தேஜ் சரண்ராஜைச் சொல்லலாம். திரைக்கதையில், இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, பார்வையாளர்களையும் அமானுஷ்யத்தை உணரச் செய்திருக்கலாம். மாணவர்களின் ப்ராஜெக்ட் என்பதாலோ என்னவோ, கேண்டிட் (candid) ஒளிப்பதிவில் ஆட்டம் காண்கிறது திரைக்கதை. மாணவர்கள் பத்திரமாகத் திரும்பவேண்டும் என்ற எண்ணத்தைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்த இயக்குநர் தவறிவிடுகிறார். அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பேய், இலக்கற்று இரைச்சலுடன் பார்வையாளர்களை அலைக்கழிக்கிறது.