Search

தானா சேர்ந்த கூட்டம் விமர்சனம்

TSK movie review

நீரஜ் பாண்டேயின் ஸ்பெஷல் 26-ஐத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தகுதி இருந்தும் லஞ்சம் கொடுக்காத காரணத்தால், நச்சினார்க்கினியனுக்கு சி.பி.ஐ.-இல் வேலை கிடைக்கவில்லை. அந்தக் கோபத்தை, ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு எப்படிப் போக்கிக் கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை.

அனிருதின் இசையில், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில், பாடல்கள் அனைத்தும் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. குறிப்பாக, ‘சொடுக்கு’ பாடல் திரையரங்கைக் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறது. ஆனால், கதையைத் தூக்கி நிறுத்துமளவுக்கு பின்னணி இசையில் போதுமான கவனம் செலுத்தியாதகத் தெரியவில்லை. சுவாரசியத்தைப் படம் முழுக்கத் தக்க வைக்க ஸ்ரீகர் பிரசாதின் படத்தொகுப்பு உதவியுள்ளது. ஆனாலும், காட்சிகளுக்கு இடையேயான ‘ஜெர்க்’கும் அவசரமும், கோர்வையின்மைக்கு வழி வகுத்துள்ளது.

ஜான்சி ராணியாகவும், அழகு மீனாவாகவும் ரம்யா கிருஷ்ணன் மிக நன்றாக நடித்துள்ளார். கதாபாத்திரத்தை உள் வாங்கி நடித்த ஒரே பாத்திரம் என்று கூட அவரைச் சொல்லலாம். ஜான்சி ராணியாக அவர் காட்டும் ஆவேசமும், ஏழு “மதி”களின் அம்மா அழகு மீனாவாக அவர் காட்டும் அக்கறையும் பாசமும் அற்புதம். சி.பி.ஐ. உயரதிகாரி குறிஞ்சிவேந்தனாக நடித்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக்கை, இயக்குநர் விக்னேஷ் சிவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சில நடிகர்கள் சிலரின் இயக்கத்தில் பூரணமாய் ரசிக்க வைப்பார்கள். நானும் ரெளடிதான் படத்தில் ஆனந்த்ராஜை அப்படி உபயோகித்து இருப்பார் விக்னேஷ் சிவன். இப்படத்திலும், அரசியல்வாதி குத்தலிங்கமாக ஆனந்த் ராஜ் வரும் காட்சிகள் அசத்தல் ரகம். அவர் வாயாலேயே உளறிச் சிக்கிக் கொள்ளும் காட்சி ரசிக்க வைக்கிறது. சி.பி.ஐ. அதிகாரி உத்தமனாக சுரேஷ் மேனனும் தானேற்ற பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். நிறைய பேசும் பல்லாவரம் பரஞ்சோதி பாண்டியனாக வரும் RJ பாலாஜி, சுரேஷ் மேனனுடன் செய்யும் லந்து நன்றாக உள்ளது.

கண்டதும் காதல் என்பதையும் கவித்துவமாகக் காட்டாமல், வசனங்களாகச் சட்டென்று கடந்தது ஒட்டவில்லை. இந்தக் கதைக்கு நாயகி இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகமாகிவிடாது. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூர்யாக்குக் கூட்டாக வரும் சத்யன், செந்தில், சிவசங்கர் மாஸ்டர் ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர்.

அந்தக் கால படங்களில் வருவது போல சூர்யா அடிக்கடி, ‘இது தானா சேர்ந்த கூட்டம்’ எனத் தலைப்பினைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், கதைப்படி, அப்படி யாரும் சேருவதில்லை. வேலையும் பணமும் உண்டெனச் சொல்லி முதலில் நால்வரைச் சேர்க்கிறார், பின் நிறைய பணப்புழக்கம் வந்ததும் சூர்யா வேலையில்லாதவர்களை அழைத்து உதவுகிறார். ஆக, பணத்திற்காகக் கூடிய கூட்டம் என்பதே பொருந்தும். பாட்ஷா அளவுக்கும், ரமணா அளவுக்கும் பயங்கரனாக ஃபீல் பண்ணி இருந்தாலும், இயல்பாய் அந்தப் புள்ளியினைத் தொட விக்னேஷ் சிவனால் இயலவில்லை.

முந்தைய படத்தில் தனக்குப் பெயரை ஈட்டிக் கொடுத்த இரட்டை அர்த்த வசனங்களை, எப்படியாவது படத்தில் உபயோகப்படுத்தி விட வேண்டும் என்ற விக்னேஷ் சிவனின் ஆவல் அசூயை அளிக்கிறது. “வாயில வை” என்ற பதத்தை அவர் உபயோகிக்கக் காட்டிய ஆர்வத்தைக் கதையைச் செம்மைப்படுத்துவதில் காட்டியிருக்கலாம். படம் போரடிக்காமல் இருந்தாலும், க்ளைமேக்ஸில் கூட ஓர் அவசரத்தன்மை தெரிகிறது. காட்சிகளாகவும், தனியே வசனங்களாகவும் ரசிக்கும்படி இருந்தாலும், அவற்றை இணைக்கும் கண்ணியில் கோட்டை விட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.