Search

கதைகள் சொல்லும் சுண்டைக்காய்

ஏழு கடல், ஏழு மலை தாண்டியிருக்கும் வியாசபுரியை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும். அந்நாட்டில், கற்றல் என்பது கதைகளைப் படிப்பது மூலமாக மட்டுந்தானாம். அதாவது பள்ளிகளில் கதைகளை மட்டுமே சிலபஸாக உடைய நாடு அது. வாவ்!

அந்நாட்டின் இளவரசன் ஒரு சாபம் காரணமாக சுண்டைக்காயாக மாறி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தமிழகத்துச் சிறுவன் சூர்யா கையில் சிக்குகிறான். ‘சுண்டைக்காய் இளவரசன்’ எனும் சிறுவர் நாவலின் கதைக்கரு இதுதான். கதைக்குள் கதையென, சூர்யாவிற்கு இளவரசன் மூன்று மாயாஜாலக் கதைகளைச் சொல்கிறான்.

Sundaikkaai ilavarasan

இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்கு வாங்கித் தருவதில் ஒரு சின்ன சிக்கலுள்ளது. இளவரசன் அறிமுகமாகித் தன்னைப் பற்றிச் சூர்யாவிடம் சொல்லி முடித்ததும், அவனது நண்பர்கள் “வெடி தேங்காய்” பற்றிச் சொல்லி, அதன் செய்முறையையும் சுவையையும் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார்கள். படிக்கும் எவருக்கும் எச்சில் ஊறச் செய்யும். சிறுவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுப்பவர்கள், வெடி தேங்காய் செய்யப் பழகிக் கொள்வது நலம். திசை திருப்பும் வெடி தேங்காயைத் தாண்டி, உட்கதைக்குள் சென்றுவிட்டால் மங்களபுரியிலும் இரத்தினபுரியிலும் சிறுவர்கள் தங்களை மெய்மறப்பது உறுதி. பிறகு, வெடியாவது தேங்காயாவது!

மங்களபுரியில் ஒரு கரடி உள்ளது. அதனை கரடிக் குல மாணிக்கம் எனலாம். வஞ்சகத்துக்கு அடி பணியாத அக்கரடி, கடுப்பாகி ஒருவன் நாக்கில், நதுஇ என எழுதி விடுகிறது. அவன் வாயைத் திறந்தால், ‘நதுஇ’ தவிர வேறு வார்த்தை ஏதும் வராமல் போய்விடுகிறது. கரடியின் அந்த மூன்றெழுத்து பன்ச், சிறுவர்கள் மனதில் மிக அழகாய்ப் பதியும். ‘நதுஇ’ என்றால் என்னவென்று அறிந்தால் பெரியவர்களும் அர்த்தமாய்ப் புன்னகைப்பர் என்பது திண்ணம்.

இரத்தினபுரியில் நடக்கும் கடைசிக் கதை சற்றே பெரியது. அவ்வொரு கதை, பின் பாதி நாவல் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்கிறது. இந்தக் கதையில் வரும் நதி மிகச் சுவாரசியமான கற்பனை. சண்டி, குபா, சுனாவ் என அற்புதமான கதாபாத்திரங்கள் கதையில் வருகின்றனர். அம்மூவரூக்கும் சிறுவனான மணிசேகரன் தன் உணவைப் பகிர்ந்தளிக்கிறான். அம்மூவரும் யார், அவர்கள் எப்படி “ஏன்” மணிசேகரனுக்கு உதவுகின்றனர் என்பதுதான் கதை. அந்த ‘ஏன்’ என்பது ஒரு விஷயத்தை மிக அழுத்தமாகச் சிறுவர்களுக்குச் சொல்லும். நட்பு பாராட்டும் அன்பென அதைச் சுருங்கச் சொல்லலாம் என்றாலும், எவ்விடத்தில் எவருடன் மணிசேகரன் நட்பு வளர்த்துக் கொண்டான் என்பதைக் கதை படித்துத் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

சுண்டைக்காய் இளவரசன்இந்நாவலில் அட்டகாசமான 21 முழுப் பக்க படங்கள் உள்ளன. ‘என்னுரை’யில் நாவலாசிரியர் பாலபாரதி குறிப்பிட்டிருப்பது போல், ஓவியர் பிள்ளை கதையின் உயிரோட்டத்தை அதிகப்படுத்தியே உள்ளார். அட்டைப்படம் சுமார் தானெனினும், அதே ஓவியத்தை கதைக்கு நடுவில் கருப்பு வெள்ளையாகப் பார்க்கும் பொழுது மிகச் சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு ஓரிடத்தில், சூர்யா தனது புல்லட்டை உதைத்து ஸ்டார்ட் செய்கிறான். அது, ‘டுட்.. டுட்..’ எனக் கிளம்புகிறது. அவ்வளவுதான் பாலபாரதி சொல்கிறார். அப்படிச் செய்யும்பொழுது, சிறுவனான சூர்யாவிற்கு எவ்வளவு மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் இருக்குமென்பதை அவர் வார்த்தைப்படுத்தவில்லை. ஓவியர் பிள்ளையோ, சிறுவனின் அச்செய்கைக்கு அழகாக உயிரளித்துள்ளார். அதே போல், வீட்டை விட்டு வெளியேறும் மணிசேகரனின் உணர்ச்சிகளை எப்படி மாறுகின்றன என அவன் முகத்தைக் (ஓவியங்கள்) கொண்டே துல்லியமாக உணர்த்துகிறார்.

இந்த ‘க்ரெளன் சைஸ்’ நாவலில் மொத்தம் 10 அத்தியாயங்கள். அதை எண்களாகப் போடாமல், யெஸ்.பாலபாரதி கையாண்டுள்ள ‘க்ரியேட்டிவ்’ யுக்தி சிறுவர் நாவலைப் பரிபூரணமாக்கியுள்ளது.

– தினேஷ் ராம்