Shadow

பலம் விமர்சனம்

Balam movie review

காபில் என்ற ஹிந்தி வார்த்தைக்குத் ‘திறமையுள்ள’ அல்லது ‘சாதித்து முடிக்கக் கூடிய’ எனப் பொருள் கொள்ளலாம். தமிழில், ‘பலம்’ என்ற தலைப்பில் டப் செய்து வெளியிட்டுள்ளனர்.

ரோஹன் பாண்டியராஜ்க்கும், சுப்ரியாவுக்கும் கண் பார்வை இல்லையெனினும், முதல் சந்திப்பிலேயே சுப்ரியா மீது காதல் வயப்படுகிறார் ரோஹன். திருமணம் ஆன இரண்டாவது நாளே அவர்கள் வாழ்வின் போக்கையே இரண்டு நபர்கள் சீர்குலைக்கின்றனர். விவேகத்தையும் நம்பிக்கையையும் மட்டுமே துணையாகக் கொண்டு வாழும் ரோஹன், தன் வாழ்க்கையை அழித்தவர்களை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.

உறுத்தாத டப்பிங் மிகப் பெரிய ஆறுதல். சில இடங்களில் கைதட்டலும் பெறுகிறது. ரோஹன் தன் மனைவி சுப்ரியாவிடம் ரஜினி குரலில் பேசும் காட்சியை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். படத்தின் நாயகனான ரோஹனும் டப்பிங் ஆர்டிஸ்ட் தான்; அதுதான் அவன் பலமும். ஒட்டுமொத்த படமும் ஒரு மென்கவிதை போல் பயணிக்கிறது. ராஜேஷ் ரோஷனின் பின்னணி இசை அதற்கு உதவியுள்ளது. படத்தின் கலர் டோன், பிரதான கதாபாத்திரங்களுக்கு விதிக்கப்பட்ட நிரந்திர இருளைப் பிரதிபலிக்காமல், அவர்களின் பாசிட்டிவான மனநிலையைக் காட்டும் வகையில் மிக வண்ணமயமாக உள்ளது.

ரோஹனாக ஹ்ரிதிக் ரோஷன்; சுப்ரியாவாக யாமி கெளதம். இவர் ஏற்கெனவே தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தில் நாயகியாக நடித்தவர். நாயகியின் காஸ்ட்யூம் டிசைனர், யாமியைப் பூங்கொத்து போல் படத்தில் உணரச் செய்கிறார். ஹ்ரிதிக்கை திருமணம் செய்து கொள்ள யாமி முடிவெடுக்காத சமயத்தில், ஹ்ரிதிக் அவரை நடனமாட அழைக்கிறார். கொஞ்சம் தயக்கத்தோடு நடனமாடச் செல்லும் யாமிக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அந்தக் காட்சியை, இயக்குநர் சஞ்சய் குப்தா மிக ரசனையோடு எடுத்துள்ளார். இருளில் தான் வாழ்க்கையென முடிவாகிவிட்ட பின், எவர் துணையுமில்லாமல் வாழ முடிந்த தனக்கு ஏன் துணை என நினைக்கிறார் யாமி. வெளிச்சமாக இல்லாவிட்டாலும், இருளில் ஒரு நல்ல துணையாகத் தன்னால் இருக்கமுடியுமென யாமிக்கு உணர்த்துகிறார் ஹ்ரிதிக். நாயகனின் குரல் பரிச்சயமற்று இருப்பதால், வசனங்கள் படம் பார்க்கும்பொழுது பெரிதாக ஈர்க்கவில்லை. எனினும், படத்தின் பலங்களில் ஒன்றாக வசனமும் உள்ளதென்பது நிதர்சனம்.

ஹ்ரிதிக் நன்றாக நடித்துள்ளார். சிறு ஓசையைக் கொண்டே ஆளிருக்கும் திசையை உணர்ந்து அவர் அடி வெளுக்கிறார் என்பதால், ஷூவைக் கழற்றி விட்டு பூனை போல் பின்னால் வந்து அடிக்கப் பார்க்கிறார் வில்லனொருவர். சுதாரித்துக் கொள்ளும் ஹ்ரிதிக், ‘நீ ஷூ போட்டுட்டு வந்திருந்தால் கூடக் கண்டுபிடிச்சிருக்க மாட்டேன். ஆனா, உன் சாக்ஸ் நாத்தம் செத்தவனைக் கூட எழுப்பி விட்டுடும்’ என வில்லனை வீழ்த்தி விட்டு ஹ்ரிதிக் சொல்லும்பொழுது, பார்வையாளர்களின் கைதட்டல் திரையரங்கை நிறைக்கிறது. முழுப்படமுமாக சுவாரசியப்படுத்தவோ ஈர்க்கவோ தவறிவிடுகிறது.

யாமி கெளதம் மீது ஹ்ரிதிக்கிற்கு முதல் சந்திப்பிலேயே காதல் எழுகிறது. முதல் பார்வையில் காதல் வந்தால் அது ஆச்சரியமான விஷயமில்லை. உண்மையாகவே நாயகியின் அகத்தை உணர்ந்ததால் நாயகனுக்குள் மலரும் காதல். அதை இன்னும் கூட அழுத்தமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கலாம். யாமியின் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஹ்ரிதிக், திடீரென வரும் கூட்டத்தால் தள்ளப்பட்டு இருவரும் பிரிகின்றனர். மீண்டும் பார்க்கும்போது, ‘அழுதியா?’ என ஹ்ரிதிக்கைக் கிண்டலாகவும் காதலுடனும் யாமி கேட்பது அழகாய் உள்ளது. அதற்கு ஹ்ரிதிக்கின் பதில் அதை விட அட்டகாசம். ‘வாழ்க்கை முழுவதும் தனிமையில்தான் இருக்கேன். எப்பவும் பயந்ததில்லை. ஆனா, முதல் முறையாக இந்த சில நிமிடங்கள் தனிமை என்னைப் பயமுறுத்திடுச்சு’ என்கிறார்.

ஆனால், படம் ஆக்‌ஷன்-த்ரில்லர் வகையைச் சார்ந்தது. இரண்டாம் பாதி முழுவதும் திட்டல் தீட்டல்; பழிவாங்கல் தான். அமித் சிந்தா, மாதவராஜ் சிந்தா என சகோதர வில்லன்களாக, சகோதரர்களான ரோஹித்தும் ரோனித்துமே நடித்துள்ளார்கள். நரேந்திர ஜா இன்ஸ்பெக்டர் சுப்புராஜாகக் கவர்கிறார்; ஆனால் அவரது ‘பேட்ச்’சில் ஹிந்தி மூலத்தில் வரும் பெயர் இருக்கிறது.  வில்லன் திடீரென திருநெல்வேலி தமிழ் பேசுகிறார்.

நாயகன் என்றால் ஜெயித்துவிடுவான் என மேலோட்டமாக கதையும் திரைக்கதையும் இருந்தாலும், டெலிஃபோன் பூத்தில் முடியும் க்ளைமேக்ஸ் ஒரு நல்ல சர்ப்ரைஸ்.