Shadow

“இது மாதிரி ஒரு கதை கேட்டதே இல்லை” – நடிகர் சுனில் | Indra movie

ஜே.எஸ்.எம் மூவி புரொடக்‌ஷன்ஸ், எம்பெரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக், இர்ஃபான் மாலிக் தயாரிப்பில், இயக்குநர் சபரீஷ் நந்தா இயக்கத்தில், வசந்த் ரவி, மெஹ்ரீன், சுனில் நடிப்பில் மிரட்டலான த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படத்தின் பெயர் ’இந்திரா’ ஆகும். சீரியல் கொலை பின்னணியில் மிரட்டலான திரைக்கதையில் பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தனியார் மாலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தினை டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அஜ்மல், “இந்தப் படத்தின் கதை சொன்னபோதே சவாலாக இருக்கும் என்று தோன்றியது. ஷூட் முடித்துத் தந்த போது, எல்லோருடைய நடிப்பு, தொழில்நுட்பக் குழுவின் உழைப்பைப் பார்த்த போது, அட்டகாசமாக இருந்தது. நாமும் நிறைய உழைக்க வேண்டும் என்று தோன்றியது. ‘உயிரே’ பாடல் எனக்கு மிகப் பிடித்த பாடல்” என்றார்.

நடன இயக்குநரும் நடிகருமான கல்யாண் மாஸ்டர், “டான்ஸ், நடிப்பு இரண்டுமே எனக்குப் பிடித்த விசயம். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் சபரீஷ், ‘இந்தப் படத்தில் நீங்க நடிக்கணும். நல்ல ரோல்’ என்றார். உண்மையிலேயே மிக நல்ல ரோல். இதில் நடித்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. இந்த ‘இந்திரா’ படத்தில் எனது கதாபாத்திரம் சுவாரசியமானது. வழக்கமாக ஹீரோதான் வில்லனைத் தேடிப் போவார். ஆனால் நான் இதில் ஹீரோவைத் தேடிப் போகிறேன்” என்றார்.

நாயகி மெஹ்ரீன், “நான் மும்பையிலிருந்தபோது, சபரீஷ் சார் ஃபோன் செய்து, முழுக் கதையையும் சொன்னார். அவர் அறிமுக இயக்குநர், ஆனால் அவரிடம் பெரும் தெளிவு இருந்தது. மிக அழகாகக் கதை சொன்னார். அதே போல் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார். இப்படத்தில் நடித்தது மிக மிக சுவாரசியமாக இருந்தது. கயல் கதாப்பாத்திரம் மிகச் சவாலாக இருந்தது. எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான ரோல். வசந்துடன் வேலை பார்த்தது மிக இனிமையான அனுபவம். அவர்தான் டயலாக் எல்லாம் சொல்லித் தந்தார். அவர் இயற்கையாகவே மிக நல்ல நடிகர்” என்றார்.

நடிகர் ராஜ்குமார், “த்ரில்லர் படம்தான். ஆனால் அதிலும் வித்தியாசமானது. 100 ஆவது நாள் இன்டர்வெல் க்ளைமேக்ஸ் மாதிரி இருக்கும். அதே போல் இந்தப் படம் பரபரப்பாக இருக்கும். தியேட்டரில் எல்லோரும் பயந்து கொண்டு படம் பார்ப்பார்கள். ஷூட்டிங் மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருந்தது” என்றார்.

நடிகர் சுனில், “வணக்கம் தமிழ்நாடு. எனக்குப் பெரும் ஆதரவு தருகிறீர்கள். சபரீஷ் முதலில் கதை சொன்னபோது, நான் வாழ்க்கையில் அது மாதிரி கேரக்டரே கேட்டது இல்லை. டப்பிங்கின்போது எனக்கே பயமாக இருந்தது. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 1000 படங்களுக்கு மேல் பார்த்துள்ளேன். ஆனால், இது மாதிரியான ஒரு கதையைப் பார்த்ததே இல்லை. இது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. வசந்த் ரவி மிக இனிமையாகப் பழகினார். வித்தியாசமான படங்கள் மட்டும்தான் செய்கிறார். இப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் சபரீஷ், “11 வருடங்கள் முன்பு ஒரு படம் செய்ய ஆசைப்பட்டேன். அப்போதிலிருந்து இந்தப் படத்திற்காக உழைத்து வருகிறேன். ஆகஸ்ட் 22 அன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. இப்படத்திற்காக எல்லோரும் உழைத்திருக்கிறோம். நான் த்ரில்லர் பட ரசிகன். அதனால்தான் த்ரில்லர் படம் செய்தேன். வசந்த் ரவி சார் திரில்லர் படத்தில் நடிப்பதில்லை எனும் மூடில் இருந்தார். ஆனால் என் கதையைக் கேட்டு நடிக்க வந்தார்” என்றார்.

நடிகர் வசந்த் ரவி, “இந்த ‘இந்திரா’ படம் ஒவ்வொரு நொடியும் உங்களை மகிழ்விக்கும். என் படம் என்பதால் சொல்லவில்லை, உண்மையிலேயே மிக வித்தியாசமான படம். சபரீஷ் கதை சொன்ன நொடியிலிருந்து படம் முடித்து வரும்வரை, படத்தில் உழைத்த அனைவரும் ஒரே உணர்விலிருந்தோம். படம் மிக அழகாக வந்துள்ளது.

மெஹ்ரீன் நிறையத் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இந்தக் கேரக்டர் அழுத்தமானது. எப்படிச் செய்வாரோ என்று நினைத்திருந்தோம். ஆனால், மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். சுனில் சார் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர் தெலுங்கில் பண்ணாத ரோலே இல்லை. ஆனால், இது கண்டிப்பாக அவருக்கு வித்தியாசமான ரோலாக இருக்கும். அவர் மாதிரி ஒரு ஹம்பிளான மனிதரைப் பார்க்கவே முடியாது. அவர் மாதிரி இந்த ரோலை யாருமே செய்திருக்க முடியாது.

என் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் இருக்க வேண்டும் என நினைத்துத்தான் செய்கிறேன். தரமணி, ராக்கி, ஜெயிலர் மாதிரி இந்த ‘இந்திரா’வும் எனக்கு ஒரு முக்கியமான படமாக இருக்கும். இது தமிழ் சினிமாவில் மிக முக்கியமான த்ரில்லராக இருக்கும்” என்றார்.

தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் பேசுகையில், “பொதுவாகக் கதை சொன்னால் அடுத்துக் கூப்பிடுகிறோம் என்றுதான் தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். ஆனால், சபரீஷ் கதை சொல்லி ஒரு வாரத்தில் நாங்கள் ஷூட்டிங் போய்விட்டோம், அந்தளவு இந்தப் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. சபரி, இர்ஃபான் எல்லோருமே முழு உழைப்பைப் போட்டுள்ளார்கள். எல்லோருமே தங்கள் படம்போல உழைத்துள்ளனர். எல்லோருமே நேசித்து உழைத்துள்ள படம். இந்தப் படம் கண்டிப்பாக உங்களை ஏமாற்றாது. அந்த உறுதியை என்னால் தர முடியும்” என்றார்.