32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நாளை நமதே விமர்சனம் | Naalai Namadhey review

Dinesh R சேலம் Published: 08/08/2025 2 நிமிட வாசிப்பு Updated: 23/09/2025 இது புதிது
எழுத்து அளவு:

நந்தன் பேசிய அரசியலை, அதை விடச் சிறப்பாகவும் அழுத்தமாகவும் இப்படம் பேசியுள்ளது. நந்தன் படத்தின் போதாமையாக, பலவீனமான கதாபாத்திர வார்ப்பு அமைந்திருந்தது. இப்படத்தின் பலமாக இருப்பதே, யதார்த்தமான அழுத்தமான கதாபாத்திரங்களின் வார்ப்புதான்!

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிவதாணுபுரம் எனும் கிராமத்தைத் தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாதென மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகியான, அமுதாவின் தாத்தாவைத் தேர்தலில் நிற்கும்படி கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் நிர்பந்திக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் செல்லும் வழியில், அமுதாவின் தாத்தாவையும், அவருடன் சென்றோரையும் வெட்டிக் கொல்வதோடு மட்டுமல்லாமல், தன் சாதியைச் சேர்ந்தவரையும் கொன்றெரித்து, ஊர்க்கலவரமாக அதைத் திரிக்கின்றனர். தாத்தாவின் மரணத்தையும், குறிக்கோளை அடையத் துணிந்து அறவழியில் போராடவேண்டும் என்ற அவரது போதனையையும் மறக்காத வளர்ந்து இளம்பெண்ணாகிவிடும் அமுதா, சிவதாணுபுரம் மீண்டும் தனித்தொகுதியாக அறிவிக்கப்படும்போது உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறார். அமுதாவை வாபஸ் வாங்க வைக்க, சாதிப்பெருமிதத்தில் மிதமிஞ்சி ஊறிப்போனவர்கள் என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

கிராமத்திற்குள் மதபிராச்சாரம் செய்யும் பாதிரியார் பாத்திரத்தைக் கிண்டலாக அறிமுகப்படுத்தி, அமுதாவிற்குத் தேர்தலில் உதவுபவராக மாற்றி ரசிக்க வைத்துள்ளனர். குறிப்பாக மேடை போட்டு, நடனமாடி, ஓடந்துறை சண்முகம் அவர்களின் முயற்சியால் உருவான முன்மாதிரி கிராமத்தின் ஆவணப்படத்தை மக்களுக்குப் போட்டுக் காட்டுகிறார். அரசின் நிதியை 100% முழுமையாகப் பயன்படுத்தினால், ஒரு கிராமம் எப்படியெல்லாம் மாறும் என்பதற்கு ஓடந்துறையே சாட்சி!

அமுதாவாக மதுமிதா நடித்துள்ளார். ஊரிலுள்ள நால்வரைத் தவிர, அமுதாவின் அம்மா முதற்கொண்டு அனைவருமே அமுதாவைத் திட்டி வாபஸ் வாங்கச் சொல்கின்றனர். கற்களால் அடிக்கின்றனர், சாணியைக் கரைத்து ஊற்றுகின்றனர், கழுத்திலேயே மிதித்துக் கொல்லப் பார்க்கின்றனர். கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதென்றால் என்னவென்று தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டிக் கொண்டிருக்கும் அமுதாவின் அம்மா, மகளுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கும் தருணத்தை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

முற்றிலும் புதுமுகங்கள். அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் கலக்கியுள்ளார். ‘உனக்கான அரசியலை நீ பேசாவிட்டால், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்’ எனும் லெனினின் வாசகத்தை இப்படத்தின் கருவாக்கியுள்ளார் வெண்பா கதிரேசன். ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரின் கை பெருமையாக ஓங்கும் காலகட்டத்தில், இன்றளவும் இங்கு எதுவும் மாறவில்லை என்ற நிதர்சனத்தைப் பதிந்து, சமத்துவம் என்பது சட்டரீதியான போராட்டத்தால் மட்டுமே சாத்தியமாகும் எனும் எதார்த்தத்தைப் படம் அழுத்தமாகச் சொல்லியுள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.