Shadow

சூப்பர் டீலக்ஸ்: மிளிரும் காலி பெருங்காய டப்பா – 4

Jigina-work-Super-Deluxe-4

தியாகராஜன் குமாரராஜாவின் உலகத்தில், வேம்பு, ஷில்பா, துளசி, லீலா என 4 பெண் கதாபாத்திரங்கள் பிரதான இடம்பெறுகின்றனர். படைப்பாளன் அவர்களுக்கு அளித்துள்ள குணம் (!?- குற்றம்), வாழ்விடம், தண்டனை குறித்து நான்-லீனியரில் அடுக்கினால், படைப்பாளனின் அரசியலைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

குணவார்ப்பு:

வேம்பு, தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்கிறார். ஷில்பா சர்வைவலுக்காகப் பிச்சை எடுக்கிறார், பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார், குழந்தைகளைக் கடத்தி விற்கிறார். ஜோதி – நெருப்பு; பதிவிரதை; படி தாண்டாப் பத்தினி. லீலா, பார்ன் (Porn) படங்களில் நடித்து லீலைகள் புரிந்தவர்.

வாழ்விடம்:

வேம்பு – நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர். லிஃப்ட் வசதி உள்ள குடியிருப்பில் வசிப்பவர். ஷில்பா – சமூகத்தை விட்டு ஓடிப்போனவர். ஜோதி – பாரம்பரியமான வீட்டில். லீலா – குடிசை மாற்றுக் குடியிருப்பில்.

இனி தான் சூப்பர் டீலக்ஸின் விளையாட்டு ஆரம்பமாகிறது. இந்த விளையாட்டைப் புரிந்து கொள்ள, அடிப்படையான அரசியல் ஒன்றைப் பற்றிய பிரக்ஞை மிக அவசியம். அது, மீன் விற்கும் ஒருவர், யாருக்கு மீன்காரியாகவும், யாருக்கு மீன்காரம்மாவாகவும் தெரிவார்கள் என்ற புரிதல். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, பார்த்துப் பார்த்து இழைத்துள்ள சூப்பர் டீலக்ஸ் எனும் உலகில், அவர் தனது கதாபாத்திரங்களை அணுகியுள்ள விதம் கொண்டு அவரது அரசியலைத் தெள்ளத்தெளிவாக உணரலாம்.

தண்டனை:

முதலில், நான்கு வித சட்டகங்களுக்குள் நால்வரையும் அடுக்கிவிடலாம். அனைவருக்கும் ஒரு வர்ணம் உண்டு என்பதுதான் இங்கே குறியீடு.

1. பதிவிரதை ஜோதி
2. ஒருமுறை தவறி மீளும் வேம்பு
3. பார்ன் படங்களில் நடித்த குற்றவுணர்வில்லா ஷீலா
4. சமூகத்திற்கு உள்ளேயே வராத ஷில்பா

ஷில்பாவை மட்டும் ஷில்பாம்மாவாகப் படைப்பாளன் பார்த்திருந்தால் இந்தப் படத்தின் பரிணாமமே வேறு தளத்தில் இருந்திருக்கும்.

ஆனால், திருநங்கைகள் பற்றிய அவரது பார்வையும் புரிதலும் வேறாக இருப்பதால், ஷில்பாவின் மீது குழந்தைக் கடத்தல் முத்திரையை அளிக்க அவருக்கு மனம் வருகிறது. அந்தக் குற்றத்திற்காகப் பெர்லினின் முன் மண்டியிடச் செய்து விடுகிறார். அந்தக் காவல் நிலைய காட்சியில் வரும் டீட்டெயிலிங்கும், நீளமும் அருவருப்பின் உச்சம். ஒரு படைப்பாளனுக்கு ஒரு காட்சியை எப்படி வடிவமைக்கவேண்டும் என்ற உரிமை உள்ளது. அதில் தான் அவரது கலைத்தன்மையும் அரசியலும் வெளிப்படும்.

ஆடுகளம் படத்தில், பேட்டக்காரர் காவல்நிலையத்திற்குள் செல்வார். எந்த டீட்டெயிலிங்கும் இல்லாமல், கேமிராவில் மனிதர்களையே காட்டாமல், உள்ளே பேட்டக்காரருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நாசூக்காக, அதே சமயம் மிக அழகாக உணர்த்தியிருப்பார் வெற்றிமாறன். அக்காட்சி ஏற்படுத்தும் அதிர்வு மறைய சில கணங்கள் ஆகும். ஆனால், தியாகராஜன் குமாரராஜா, டீட்டெயிலிங் என்ற பெயரில், ஷில்பாவைக் கேமிரா கோணங்களாலேயே அருவருத்தக்க வகையில் தண்டனை வழங்கியிருப்பார். துளசி முன் புடவை கட்டும் காட்சியில் கூட, அவர் கொசுவத்தைச் சொருகி முடிக்கும்வரை அக்காட்சி நீளும். அனைவரும் அமர்ந்திருக்கும் ஹாலில், அவர் முந்தானை சரியும். ஷில்பாவை வழுக்கையாகக் காட்டியதும் கூட, படைப்பாளனால் ஒரு திருநங்கையை ஷில்பாம்மாவாககவோ, ஷில்பாக்காவாகவோ பார்க்க முடியாததன் குறியீடு தான். விளிம்பு நில வாழ்க்கை வாழக் கூட அனுமதியில்லாத திருநங்கைகளைக் கரிசணத்தோடு அணுக ஏன் முடியவில்லை என்பதற்கு, அவர்களை அவர் எங்கிருந்து எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் அவரது அரசியலை தீர்மானிக்கிறது. அது வெளிர் aesthetic நிறத்தைக் கொண்டுள்ளது என்றால் அது மிகையில்லை.

ஜோதி குளித்துவிட்டுப் பாவாடையுடன் வரும் ஒரு காட்சியும் படத்தில் உண்டு. மிகச் சில நொடிகளே! ‘அய்யோ படி தாண்டாத உத்தமியைத் தவறான கோணங்களில் காட்டினால் லென்ஸ் வெடித்துவிடும்’ என்ற பதற்றத்தோடு அக்காட்சிகளைச் சுருக்கமாக முடித்து வயிற்றில் பாலை வார்த்திருப்பார். கேமிராவின் கோணம், ஒரு பெண்ணிடம் கண்ணியமாகவும், இன்னொரு பெண்ணிடம் taken for granted ஆகவும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. முன் ஜென்மத்தில் பாவம் செய்ததால் தான் திருநங்கையாகப் பிறந்துள்ளார்; பிறந்ததுதான் பிறந்துவிட்டார், மீண்டும் குழந்தைகளைக் கடத்திப் பாவம் செய்யலாமா? அவரது புற உருவம் கூட அவர் செய்த பாவத்தின் குறியீடு; அவரை அணுகும் கேமிராக் கோணங்கள் அவருக்கான தண்டனையின் குறியீடு. எந்தத் தவறும் செய்யாத ஜோதிக்கு படைப்பாளன், தன் கேமிரா கோணத்தால் அனுகிரகம் செய்து விடுகிறார்.

‘குடிசை’ மாற்றுக் குடியிருப்பில் வாழும் ஷீலா, தன் மகனிடம், ” ‘மல்லு: அன்கட்’ படத்திலும் நான் தான் நடித்தேன், ‘சக்தி மேல் பக்தி வை’ படத்திலும் நான் தான் நடித்தேன். அந்தப் படம் பார்க்கிறவங்களுக்கு அப்படி; இந்தப் படம் பார்க்கிறவங்களுக்கு இப்படி. ஆனா நான் எப்பவும் ஷீலா” எனப் புன்னகைக்கிறார். காட்சி அதோடு நின்றிருந்தால், அதன் கனமும் அர்த்தமும் வேறு. அதன் பின், அவரது மகனும், அவனுடைய நண்பனும், ஷீலாவிற்கு ஒரு முத்திரையை அளிப்பதோடு அந்தக் காட்சி முடிகிறது. ‘அவர்கள் அப்படித்தான்’, எல்லாமும் அவர்களுக்குச் சகஜமென முடிக்கிறார்.

தவறுதல் சகஜம்தான், ஆனால் அதை உணர்ந்து மீண்டு விடவேண்டும். படத்தில் வேம்பு மட்டுமே நிகழ்காலத்தில் தவறு புரிபவராக வருகிறார். ஆனால் அவரிடம் உண்மையை ஒத்துக் கொள்ளும் ஒரு சத்தியம் உள்ளது. அந்தச் சத்தியம் அவரைப் பெர்லினிடமிருந்து காப்பாற்றுகிறது. ஆனால், கணவனுக்குத்த் துரோகமிழைத்ததால், ‘அது எவ்வளவு பெரிய தவறு. அது எங்குக் கொண்டு போய்விடும்’ என்று வாழ்நாளுக்கும் மறக்காத அளவு மனரீதியான தண்டனை பெறுகிறார். தவறை உணர்ந்து விடுவதால், கேமிராக் கோணங்கள் அவரைக் கண்ணியத்தோடு அணுகுகிறது. இல்லை, படைப்பாளர் அணுகுகிறார்.

முந்தைய வாழ்க்கைக்கான தண்டனையை பெர்லின் மூலம் அனுபவித்த விட்ட பின் மகனைத் தொலைத்துவிடும் ஷில்பா, தன் தவறை சப்-வேயில் உணர்ந்து பாவமன்னிப்பு கேட்ட பின், அவரையும் கேமிராக் கோணம் ஒழுங்காகவே அணுகும். தியாகராஜன் குமாரராஜாவின் அந்த நேர்மையும், துல்லியமான pattern-உம் மிகவும் வியக்க வைக்கிறது. ஆனால், இன்னும் தண்டனை தீர்ந்தபாடில்லை. ஜோதிக்குப் பேச்சுத்துணையாக, சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்த ஷில்பாவையும் கூண்டுக்கிளியாகச் சிறைப்படுத்தி விட்டிருப்பார். நவீன கருட புராணத்தில் அப்படித்தான் இருக்கிறதோ என்னவோ!

– தினேஷ் ராம்