
ஆறேழு கி.மீ. தள்ளிப் போய்க் குடித்துக் கொண்டிருந்ததற்கும், ஊர்க்குள்ளேயே டாஸ்மாக் கொண்டு வந்ததற்கும், என்ன வேறுபாடு எனப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது ‘குடிமகன்’ படம்.
ஒரு ஊருக்குள் டாஸ்மாக் வருகின்றது. குடிப்பழக்கமில்லாத கந்தனுக்கு குடியைப் பழக்குகின்றனர் அவன் நண்பர்கள். குஇப்பழக்கத்திற்கு அடிமையாகும் கந்தனின் குடும்பம் எந்தக் கதிக்கு உள்ளானது என்பதுதான் படத்தின் கதை.
விளையாட்டாய் நாயகனைக் குடிக்க வைக்கும் அவனது நண்பர்கள், நாயகனின் வீழ்ச்சிக்குச் சாட்சியாகிறார்கள். அரசாங்கமே மக்களின் குடிப்பழக்கத்தை நம்பித்தான் இயங்குகிறது என்னும் வாதம் எவ்வளவு அபத்தமானது? ஆபத்தானது? எத்தனையோ குடும்பத்தின் சிதைவிற்கு ஓர் அரசே காரணமாய் இருப்பதை விட மிகப் பெரிய கேவலம் வேறொன்று உண்டா?
படத்தின் தொடக்கமே ஒரு கவிதை போலுள்ளது. தன் மகன் ஆகாஷைச் சுமந்து கொண்டு கந்தன் செல்லும் அந்தக் கிராமத்துப் பாதை ரம்மியாக உள்ளது. சுட்டிச் சிறுவனான ஆகாஷ் அழகாக நடித்துள்ளான். ஆகாஷின் அம்மா செல்லக்கண்ணுவாக நடித்திருக்கும் ஜெனிஃபர் கொஞ்சம் அந்நியமாகத் தெரிந்தாலும், தன் நடிப்பால் அதை ஈடு செய்கிறார். கந்தனின் குடிப்பழக்கம், நேரடியாகப் பாதிப்பது வீட்டிலுள்ள செல்லக்கண்ணுவைத்தான். அதை அழகாக தன் நடிப்பில் பிரதிபலித்துள்ளார்.
சந்தர்ப்பவாத கவுன்சிலராகக் கிரண் நடித்துள்ளார் (இப்படத்துடன் ஒரே நாளில் வெளியான குப்பத்து ராஜாவிலும் அவருக்கு அதே கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது). பின்லேடனின் முகவரி கேட்கும் கிருஷ்ணமூர்த்தி, நாயகியின் அப்பாவாக வருகிறார். பாவா லட்சுமணனுடனான அவரது நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக ஒட்டவில்லை. குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டுவிடும் பாலா சிங் ஒரு முக்கியமான கெளரவக் கதாபாத்திரத்தில் வருகிறார். ஆனால், திரைக்கதை அவரை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்லை. ஐயாவாக வரும் எழுத்தாளர் பவா செல்லதுரையின் பாத்திரமும் அப்படியே!
கந்தனாக ஜெயகுமார் நடித்துள்ளார். ஊருக்கு ஒன்றெனில் முதல் ஆளாக ஓடும் கந்தனின் புற, அக வீழ்ச்சி தான் குடிமகன் படம் முன் வைக்கும் யதார்த்தம். கதை, திரைக்கதை, வசனமெழுதிப் படத்தை இயக்கியும் தயாரித்தும் உள்ளார் சத்தீஸ்வரன். சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாய் விளங்கும் குடிப்பழக்கத்திற்கு எதிரான படங்களின் வரிசையில் இப்படமும் அழுத்தமான இடத்தினைப் பெறும்.