32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“கேள்விகளுக்குப் பயந்த சூர்யா” – சிவகுமார்

Dinesh R சேலம் Published: 16/04/2022 7 நிமிட வாசிப்பு Updated: 23/04/2022 சினிமா
எழுத்து அளவு:

நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் ‘ஓ மை டாக்’ திரைப்படம் ஏப்ரல் 21ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. ‘ஓ மை டாக்’ படக்குழுவினருடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்த்து. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஊடகவியலார்ளகளைச் சந்தித்தனர். இதன்போது மூத்த நடிகர்கள் சிவக்குமார் மற்றும் விஜயகுமார், படத்தின் நாயகன் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் விஜய், 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், ஆர்.பி.டாக்கீஸ் எஸ். ஆர்.‌ ரமேஷ் பாபு, இசை அமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, கலை இயக்குனர் மைக்கேல் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டன்ட் சில்வா, ஆடை வடிவமைப்பாளர் விநோதினி பாண்டியன் மற்றும் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நடிகர் சிவகுமார் பேசுகையில், ”வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தில் ஏழெட்டு குழந்தைகளுடன் இயக்குநர் மிகவும் பொறுமையாகக் காத்திருந்து, காட்சிகளை விளக்கிச் சொல்லிப் படமெடுத்திருக்கிறார்.

எனக்கும், என்னுடைய நண்பர் விஜயகுமாருக்கும் இடையே 55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருக்கிறது. 1967 ஆம் ஆண்டில் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக வேடமிட்டேன். விஜயகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிவாஜி நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தில் பேபி முருகனாக வேடமிட்டிருக்கிறார். அப்போதே அவருக்கு சிவகுமார் என்று பெயர். நான் சிவக்குமார் என்பதால், அவர் தன் பெயரை விஜயகுமார் என மாற்றிக் கொண்டார். அதன் பிறகு ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தில் நாங்கள் இருவரும் கதாநாயகர்களாக நடித்தோம். அதன் பிறகு அவரும் நானும் தனித்தனி நாயகனாக நடித்து அவரவர் பாதையில் பயணித்தோம். பின்னர் தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘சொர்க்கம் நரகம்’ படத்தில் அவரும் நானும் சேர்ந்து நடித்தோம். கடைசியாக சத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம்.

‘ஓ மை டாக்’ படத்தின் சுவாரசியமான விசயமே தாத்தா, மகன், பேரன் என்ற மூவரும் இணைந்து நடிப்பதுதான். இது மிகவும் அபூர்வமான விசயம். சிவாஜி வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு இருக்கிறார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன் பிறகு அதனைப் போல் மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான். இதற்காக நான் விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு தமிழக அரசு, இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும், குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விசயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும் போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துரு அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது, என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் ஜெய்பீம் தான்.

எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், ‘இந்தப் பையன் (சூர்யா) என்ன ஆகப் போகிறான் என்று வருத்தப்பட்ட காலம் அது. ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம்தான்.

ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம் தான். இவனுக்குத் தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்குத் தப்பி விடுவான். பத்தாவது வரிசைக்குக் கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்து விடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும் போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்கு சென்று விடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன்.

அந்த பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்துப் பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பைத் தொடரச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர். நாங்களும் வேறு வழி இல்லாமல் செயின்ட் பீட்ஸ் என்ற பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம். அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்துத் திரைத்துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980-88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன். நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக் கொண்டே இருக்கிறான். இறுதியாக பள்ளிக் கூட முதல்வரைச் சந்தித்தேன். ‘நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக் கொள்வோம்’ என்றார்.

அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் கதறி அழுகிறான். அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என்று கதறி அழுகிறான். ப்எங்க அப்பாவை சாலையில் நிற்க வைத்து விட்டார்கள்’ எனக் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். அதன் பிறகு அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.

அதன் பிறகு கல்லூரிப் படிப்பிற்காக லயோலா கல்லூரிக்குச் சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், ‘என் பையனுக்கு காலேஜ் சீட் வேண்டும்’ என கேட்டேன். அதற்கு, ‘அவர் ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள்’ என்று சொன்னார். ‘நான் ஏன்?’ என்று கேட்டேன். நடிகர் பாலாஜி பையன், சிவாஜி பையன், கொட்டாரக்கரா பையன் என திரையுலகினர் யாரும் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை எனச் சொன்னார். ஆனால் என் பையன் நிறைவு செய்வான் என உறுதி கூறினேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார். ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் அரியர்ஸ் உயர்ந்தது. அப்போது அவனிடம் டிகிரியை முடிக்கவேண்டும் இல்லையென்றால் என கோபமாக சொன்னேன். அதன் பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான். அதன் பிறகு அவரிடம் எம் காம் என்று சொன்னேன். எனக்கு படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அதன் பிறகு படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான். அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்குச் செல்ல இருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார். என்னுடைய நண்பர் டாக்டர் ஒருவர், ‘அவர் சிவகுமாரின் பையன் சரவணன்’ என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு வாரம் கழித்து என்னைத் தொடர்புகொண்டு, ‘சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா?’ எனக் கேட்டார். அப்போது அவரிடம், ‘அவனுக்கு அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாட தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்க தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேசமாட்டான்’ எனச் சொன்னேன். ‘எனக்கும் இதுபோன்ற குணமான பையன் தான் வேண்டும்’ எனச் என்றார்.

டெஸ்ட் சூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக அழைத்துக் கொண்டு சென்றார். அப்போதும் கூட அவரிடம், ‘அவன் வாழ்க்கையே நாசம் செய்துவிடாதீர்கள்’ என்றுதான் அறிவுறுத்தினேன். பிறகு வசந்த் இயக்கத்தில் படம் நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார் தான் சென்று வந்தார். அந்தப் படம் வெளியானது. நான் அப்போது படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். இந்தப் படம் காசி திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், மிகுந்த பதட்டத்துடன் அங்கு நின்றிருந்தார். அங்கிருந்த ஒருவர் கைகொடுத்து கைகுலுக்கி ‘சூப்பராகச் சொதப்பி விட்டீர்கள்’ என விமர்சனம் செய்தார். அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

ஆறு மணி காட்சி, அதன்பிறகு இரவு காட்சி என அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் படத்தைப் பார்க்கிறான். அதன் பிறகு எனக்கு ஃபோன் செய்து, ‘அது நானாப்பா? நானா அப்பா அது? வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கலாம். டொரன்ட்டோவிலிருந்தும், வாஷிங்டனிலிருந்தும் போன் செய்தார்கள். பார்த்தேன் பல காட்சிகளில் நான் சிறப்பாக நடிக்கவில்லை.

திரையுலகில் ஒன்னுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவைச் செதுக்கினார்.

இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தைத் தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன் தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்தப் படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.