
சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இவ்விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக், ” ‘நாம நெனச்சது நடந்துருமா.. சிங்கம் மறுபடியும் திரும்புதும்மா.. முன்ன ஒரு கதை இருந்ததும்மா.. இப்போ உரு கொண்டு இறங்குதம்மா..’ சூர்யாவைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. சூர்யா சாருக்கு எப்போதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். நான் ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதினேன்.
சூர்யாவைப் பற்றி ஒரு பாடலில் சொல்ல வேண்டும், ஆனால் நேரடியாக சொல்லாமல் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ‘ஒரு தீயில சொல்லெடுத்து ஒளி போடுற கையெழுத்து’ எனச் சொல்லியாகிவிட்டது. ‘வீரனாம் கர்ணனுக்கே அவ அப்பன்..’ எனும் வரிகளை எழுதியது மறக்க முடியாது. கர்ணனின் அப்பா சூரியன். சூர்யா, கர்ணனை விடப் பெரிய வள்ளல் எனப் பொருள்பட எழுதியதில் பெரு மகிழ்ச்சி.
இந்தப் படத்தின் டீசரில் ‘பரிசுத்த காதல்’ வருகிறது. இந்தப் பரிசுத்த காதல் சந்தோஷ் நாராயணனின் பரிசுத்த காதலைக் சொல்கிறது. சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ். ‘கனிமா..’ படத்தின் பாடல் வெளியீட்டிற்கு முதல் நாள் தற்போது நீங்கள் கேட்கும் வரிகள் இல்லை. இசையும் இல்லை. கதாபாத்திரத்தின் நடன அசைவுகளுக்கு ஏற்ப இசையை மாற்றிப் பாடல் வரிகளையும் மாற்றி அமைத்தார். அந்த அளவிற்கு நுட்பமாகவும் நுணுக்கமாகப் பணியாற்றுபவர் தான் இந்த ஜீனியஸ். இந்தத் திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் நிறைய பாடல்கள் உண்டு. நான் மேலும் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். அந்த மூன்று பாடல்களும் மிகச் சிறப்பானதாக இருக்கும்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எங்களைப் போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவார். அவர் உருவாக்கிய கதை சூழல்தான் அற்புதமான பாடல்களாக மாற்றம் பெறுகிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ”முதல் முறையாக சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். சூர்யா நடித்த அன்புச்செல்வன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘பிதாமகன்’ பட சூர்யாவைப் பிடிக்கும். ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.
ரெட்ரோ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.