32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“சூர்யா ஒரு ஜென்டில்மேன்” – கார்த்திகேயன் சந்தானம் | RETRO

Dinesh R சேலம் Published: 20/04/2025 3 நிமிட வாசிப்பு Updated: 22/04/2025 சினிமா
எழுத்து அளவு:

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்தியேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ், ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ” ‘ரெட்ரோ’ திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 15 ஆவது படைப்பு இது. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் என் இனிய நண்பர். மூன்றாண்டுகளுக்கு முன் சந்தித்து இந்தக் கூட்டணியை உருவாக்கினோம். மார்ச் 2024 ஆம் ஆண்டில் உறுதி செய்து ஜூன் மாதம் படப்பிடிப்புக்குச் சென்றோம். கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக அந்தமானில் 36 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தினார். இதற்கு அவரது குழுவினரின் திட்டமிடல் தான் காரணம்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய தயாரிப்பில் உருவான ’36 வயதினிலே’ படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய நன்றிகள்” என்றார்.

ஸ்டோன் பென் பிலிம்ஸ் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், ”நான் வாழ்க்கையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அது என் மனைவியைக் காதலித்தது. அன்றைய தினம் விதைத்த விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்து மேடையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். அத்துடன் கார்த்திக் சுப்புராஜும் உறவினர் ஆனார். இது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம். ராஜசேகர் என் வாழ்வில் கிடைத்த மிக இனிமையான மனிதர். இந்தப் படத்தில் இருந்து நாங்கள் புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். சூர்யாவைப் போல் ஒரு ஜென்டில்மேன் ஆக இருக்க முடியுமா எனத் தெரியவில்லை. மக்கள் மீதும், ரசிகர்கள் மீதும், அவர் காட்டும் அன்பைப் போல் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருந்து பெற்ற ‘ஆரா (Aura)’ என் இறுதி மூச்சு வரை தொடரும். அவருடைய ‘அகரம்’ அலுவலகத்திற்கு ஒரு முறை தான் விஜயம் செய்தேன். எங்களால் என்ன செய்ய முடியும் என யோசிக்க வைத்தது அந்தச் சந்திப்பு. ஐ லவ் யூ சூர்யா சார். படத்தைப் பற்றி நாங்கள் எப்போதும் பேச மாட்டோம். படம் தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்கிறேன் சிறப்பான, தரமான, அழகான, அன்பான சம்பவம் இந்தப் படத்தில் இருக்கிறது” என்றார்.

ரெட்ரோ திரைப்படம், எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.