Shadow

திறமையான பாடகி வன்ஷிகா | கழிப்பறை திரைப்படம்

வன்ஷிகா மக்கர் ஃபிலிம்ஸ் சார்பில் ப்ரீத்தி அமித் குமார் தயாரிப்பில், இயக்குநர் கிஜு இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கழிப்பறை” ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவினில் இசையமைப்பாளர் தீனா, “தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பான படத்தைத் தர முன்வந்திருக்கும் அமித்குமார், ப்ரீத்தி தம்பதிகளுக்கு நன்றி. அவர்களது பெண் பிள்ளையை இந்தப் படத்தில் அருமையாகப் பாட வைத்துள்ளார்கள். நான்கு பாடல்களும் மிக அருமையாக உள்ளது. ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். கழிப்பறை மிக நல்ல கருத்து கொண்ட படம். உலகில் யாரும் உயர்ந்தவனில்லை, அனைவருமே நம் உடலில் கழிப்பறையை வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதைப் புரிந்து கொண்டு, அனைவரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பல கிராமத்தில் கழிப்பறை இல்லாத நிலை இருந்தது, அதை நம் பிரதமர் மோடி மாற்றி வருகிறார். கழிப்பறை இல்லாத வீடு இல்லாத நிலை இன்று வந்துள்ளது. இந்தக் கருத்தைப் பேசும் இப்படம் ஜெயிக்க வேண்டும்” என்றார்.

பாடகர் உன்னி கிருஷ்ணன், “இயக்குநர் கிஜு ஃபோன் செய்து, ஒரு டூயட் சாங் இருக்கு என்றார். அமீத் சார் பெண் தான் பாடப்போகிறார் என்றார். அவர் குரல் மிக அருமையாக இருந்தது. அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருந்தது. அவருக்காகத் தான் இந்தப் படத்தில் நான் பாடினேன். ஸ்ரீகாந்த் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார்” என்றார்.

தமிழ்நாடு சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் RK அன்புச்செல்வன், “விடாமுயற்சி எனும் பெயர் அமீத் சார், வன்ஷிகா, கிஜு ஆகியோருக்கு தான் பொருந்தும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். வன்ஷிகா மிக அருமையாகப் பாடுவார். என் மகளுக்காக நான் எதையும் செய்வேன் என்று சொன்னார் அமீத். இப்போது படம் எடுத்து அவர் மகளைப் பாட வைத்துள்ளார். கழிவறை இல்லாத வீடு இல்லை, கழிப்பறை இல்லாமல் வாழ முடியாது. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்” என்றார்.

பாடகி வன்ஷிகா, “என் குருவிற்கு என் முதல் நன்றி. தயாரிப்பாளர்கள் என் அம்மா அப்பாவுக்கு என் நன்றி. எனக்குப் பாட வாய்ப்பளித்த ஸ்ரீகாந்த் சார், கிஜு சாருக்கு என் நன்றி” என்றார்.

கழிப்பறை பட இயக்குநர் கிஜு, “கழிப்பறை, முதன் முதலில் இந்தப் படத்தின் கதையை அமித் சாரிடம் சொன்ன போது, பட்ஜெட் சின்னது தான், ஆனால் பட்ஜெட் தாண்டியும், சரி பார்த்துக் கொள்ளலாம் என ஊக்கம் தந்தார். வன்ஷிகா மக்கர் ஃப்லிம்ஸ்க்கு என் நன்றி. ஸ்ரீகாந்தன் என் இசையமைப்பாளர் மிக அருமையான பாடல் தந்துள்ளார். பாலமுருகன் என் நண்பர், செல்ஃபோனில் படமெடுத்த காலத்திலிருந்து அவர் தான் என் கேமராமேன். நான் என்ன படமெடுத்தாலும் அவர் தான் கேமராமேன். உன்னி சாரிடம் பாடல் பற்றிச் சொன்னேன். பாடல் பாடிவிட்டு, ‘பாட்டு நல்லாருக்கா?’ என என்னிடம் கேட்டார். இந்தப் பணிவால் தான் அவர் இந்தளவு வளர்ந்துள்ளார். வன்ஷிகா என்ன மாதிரி பாடல் என்றாலும், மிகத் திறமையாகப் பாடி அசத்திவிட்டார். தமிழ் சினிமாவில் பெரிய உயரம் தொடுவார்” என்றார்.