
தமிழ்நாட்டை விட சின்ன நிலப்பரப்பும், குறைவான மக்கள்தொகையும் கொண்ட தென்கொரியா, அதன் படைப்பாக்கத்தில் உலகை ஆள்கிறது. கொரியத் திரைப்படங்கள், இணைய தொடர்கள் ஹாலிவுட்டுக்கு இணையான புகழ்பெற்றவை. பல கொரியத் திரைப்படங்கள் தரத்தில், புதுமையான கதைக்களத்தில் ஹாலிவுட்டையே மிஞ்சி நிற்பவை. அப்படி ஒரு இணைய தொடர் தான் லைட் ஷாப். எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடர் மிகவும் சிக்கலான கதைக்களத்தைக் கொண்டது. நான்-லீனியர் திரைக்கதை மேலும் குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் கொஞ்சம் பொறுமையோடு பார்த்தால் நிச்சயம் மிகச் சிறப்பான, நிறைவான அனுபவத்தை வழங்கும். இந்தத் தொடரின் தாக்கம், பார்த்து முடித்த பல நாட்களுக்கு நீடிக்கும். அவ்வளவு கனம் மிகுந்த தொடர்.
கொரியர்கள் எந்த வகை ஜானர் படமென்றாலும் அதில் எமோஷனை, சென்ட்டிமென்ட்டைக் கலந்து விடுவார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் நம்மை அழக் கூட வைத்துவிடுவார்கள். அது அவர்களுக்கு கைவந்த கலை. இந்த இணைய தொடரை ஹாரர் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் மிக அழகாக ஃபேமலி சென்ட்டிமென்ட்டைக் கொண்டுவந்து அசத்தியிருந்தார்கள். கொரியன் கலாச்சாரம் நமது தமிழ்க் கலாச்சாரம் போலவே இருப்பதை பல இடங்களில் காண முடிந்தது.
கொரியர்களின் நம்பிக்கையில், ஒருவர் உயிரிழந்த பிறகு மூன்று நாட்கள் அவர்களின் ஆன்மா, நமது உலகத்துக்கும், மறு உலகத்துக்கும் இடையே அலைந்து கொண்டிருக்கும். அந்தக் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பிழைக்கும் வாய்ப்பும் உள்ளது. அது அவரவர் மன உறுதியைப் பொருத்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு நல்லடக்கம் செய்வார்கள். அதன் பிறகு அந்த ஆன்மா, பிரபஞ்சத்தில் கலந்துவிடும் என்று கொரியர்கள் நம்புகின்றனர். இந்த மறு உலக அனுபவமானது, விபத்தில் சிக்கி, கோமாவில் இருப்பவர்களுக்கு கூட ஏற்படும். அதிலிருந்து உயிர் பிழைத்து வந்த பிறகு, சிலருக்கு “மறு உலக அனுபவம்” ஞாபகமிருக்கும்.
என்னோட பாட்டி (அப்பாவின் அம்மா), அவரது சிறு வயதில் திடீரென பேச்சு மூச்சற்று கோமா நிலைக்குப் போயிருக்கிறார். சொந்தக்காரர்கள் அவர் இறந்து போனதாக நினைத்திருக்கிறார்கள். ஆனால் சில மணி நேரங்கள் கழித்து உயிர் பிழைத்திருக்கிறார். அது பற்றி என்னிடம் சொல்லும் போது, “நான் பேச்சு மூச்சற்று போன தருணத்தில் என்னை இரண்டு பேர் வந்து எங்கேயோ கூட்டிக் கொண்டு போனார்கள். ஒரு நீண்ட, இருட்டான பாதை. சாப்பிட கீரை கொடுத்தார்கள். தண்ணீர் தாகம் எடுத்தது. பிறகு திடீரென. ‘நீ திரும்பிப் போ’ என்று அனுப்பி விட்டுட்டாங்க” என்று சொன்னார். ஏறக்குறைய மரணத்துக்கு விளிம்பில் சென்று உயிர் பிழைத்தவர்கள் பலர் இதே போன்ற அனுபவத்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்.
உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் ஊசலாடும் கான்செப்ட்டை வைத்து லைட் ஷாப் கதையைக் கட்டமைத்திருப்பார்கள். ஒரு பேருந்து விபத்தில் சிக்கி மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பயணிகள், ஒரு மருத்துவமனையின் ஐசியுவில் அட்மிட் செய்யப்படுகின்றனர்.
அதில் சிலர் இறந்து போயிருப்பார்கள், பலர் கோமாவில் இருப்பார்கள். ஐசியுவின் நர்சிங் யூனிட் அவர்களைக் காப்பதற்காகப் போராடும். இறந்தவர்களின் ஆன்மாவும் கோமாவில் இருப்பவர்களின் ஆன்மாக்கள் இருண்மை நிறைந்த “வேறு உலகில்” அலைந்து கொண்டிருக்கும். அந்த வேறு உலகில், பல வகையான விளக்குகளை விற்கும் ஒரு லைட் ஷாப் இருக்கும். முற்றிலும் இருட்டான அந்த உலகில் அந்தக் கடையில் மட்டும் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டு பிரகாசமாக இருக்கும். அதில் இருக்கும் ஒவ்வொரு விளக்கும் ஒருவரின் உயிர். பிரகாசமாக எரிந்து கொண்டிருப்பவை உயிரோடு இருப்பதைக் குறிக்கும். மங்கிக் கொண்டிருக்கும் விளக்குகள், வேறு உலகில் அலைபவர்களைக் குறிக்கும். அணைந்து போன விளக்குகள் மரணமடைந்தவரைக் குறிக்கும்.
அந்த லைட்ஷாப்பை ஒருவர் நிர்வகித்து வருவார். அந்தக் கடைக்கு வந்து தனக்கான விளக்கை வாங்குபவர், உயிர் பிழைக்கிறார். விளக்கு என்பது ஒரு குறியீடு. மன உறுதியும், வாழவேண்டும் என்ற நம்பிக்கையும் இருப்பவர்களே மீண்டு வருகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
சுமார் பத்து கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இந்தப் பின்னணியில் மிகச் சிக்கலான கதையைப் பின்னியிருக்கிறார்கள். முதல் இரண்டு அத்தியாயம் குழப்பமாக இருக்கும், போர் அடிக்கும். ஆனால் அதற்குப் பிறகு ஓரளவுக்கு செட் ஆகிடும். கடைசி இரண்டு அத்தியாயங்களில் தான் அனைத்தும் தெளிவாகும்.
இந்த தொடரில், அன்பு, இழப்பு, குற்றவுணர்வு, விரக்தி, வெறுப்பு, இயலாமை, தியாகம் என்று எல்லா வகை மனித உணர்வுகளையும் கதாபாத்திரங்கள் வழியே வெளிப்படுத்தியிருப்பார்கள். இரவில் ஒரு நபரை தூங்க விடாமல் ஒரு நாய் கத்திக்கொண்டே இருக்கும். கடுப்பான அவர் அந்த நாயை விரட்டியடிக்க அந்த நாயைத் துரத்த ஆரம்பிப்பார். அவருக்கும், நாய்க்குமான பந்தம் மிகவும் நெகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அதே போல விபத்தை ஏற்படுத்திய குற்றவுணர்ச்சியில் ஒவ்வொருவரிடமும் மன்னிப்புக் கேட்டு அழும் பேருந்து ஓட்டுநர் கதாபாத்திரம் மிகச் சிறப்பானது. இரண்டு உலகங்களுக்கும் இடையே பரிதவித்து அலையும் ஆன்மாக்களைப் பார்க்கக் கூடிய சக்தி படைத்த ஐசியூவில் வேலை செய்யும் நர்ஸ் ஒருவரின் கதாபாத்திரம், “இவர்கள் அண்மையில் மரணித்தவர்கள்தான், இறந்தவர்கள் இல்லை (They are deceased, not dead)” என்று சொல்லி, சடலங்களுக்கு மரியாதை தரும் மார்ச்சுவரியில் வேலை செய்யும் டாக்டர் கதாபாத்திரம் என எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் நேர்த்தியான கேரக்டர் ஆர்க் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சீரிசை பார்த்து முடிக்கும் போது முழுமையான நிறைவு நிச்சயம் ஏற்படும்.
Verdict: Its not for everyone. Only those who are serious about films and interested in emotional stories may try watching this series.