32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

டென் ஹவர்ஸ் விமர்சனம் | Ten Hours review

Dinesh R சேலம் Published: 18/04/2025 2 நிமிட வாசிப்பு Updated: 19/04/2025 இது புதிது
எழுத்து அளவு:

ஒரு இளம்பெண் கடத்தப்படுகிறாள், மூன்று காவலர்களைக் காரில் செல்லும் ஒரு குழு சுட்டுக் கொல்கிறது, சென்னையில் இருந்து கோவை நோக்கிச் செல்லும் பேருந்தில் ஒரு இளைஞன் கொல்லப்படுகிறார், கள்ளக்குறிச்சி பை-பாஸ் பாலத்தினருகே சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் பிணம் கிடைக்கிறது. இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ, ஓரிரவில், பத்து மணி நேரத்திற்குள் இந்நான்கு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நேரடியாக முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்று, கதையை விட்டு அகலாமல் திரைக்கதை பயணிப்பது படத்தின் மிகப் பெரிய பலம். அடுத்து என்ன என்ற பதைபதைக்க வைக்கும் ஓர் இயல்பான ஓட்டம் திரைக்கதையில் இல்லாவிடினும், சுவாரசியத்தைத் தக்கவைக்கும் அளவுக்குக் காட்சிகளைக் கச்சிதமாக அடுக்கியுள்ளனர். எல்லாக் குற்றத்தையும் இணைக்கும் கனெக்டிங் டாட்ஸை மிக நேர்த்தியாகக் கோர்த்துள்ளனர்.

ஆம்னி பேருந்து நடத்துநராக வரும் முருகதாஸ் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளர். ஓர் அநீதியைக் கண்டால் சீறும் ராஜ் அய்யப்பாவின் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் அற்புதமான லைட்டிங்கால் படத்தில் மிகப் பெரிய பங்காற்றியுள்ளார்.

ஐயப்பன்க்கு மாலை போட்டுள்ள ஆய்வாளர் பாத்திரத்திற்கு சிபிராஜ் பொருந்துகிறார். வழக்கில் சுணக்கம் ஏற்படும் பொழுதெல்லாம், தன்னை ரீ-ஃப்ரெஷ் பண்ணிக் கொள்ள முகம் கழுவுவதும், நெற்றியில் திருநீற்றுப் பட்டை அடிப்பதுமாக இருக்கிறார். ‘இனிமே தான் என் ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க’ என பன்ச் டயலாக்கை ஓரிடத்தில் வம்படியாகத் திணித்துள்ளனர். முழு இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லராகப் படத்தை முடிக்க மனம் வராமல், இறுதியில், நாயகன் சட்டத்தைத் தன் கையில் எடுத்து, வீர வசனம் பேசி என்கவுன்ட்டர் செய்வதாக முடித்துள்ளனர். என்கவுன்ட்டரை நாயகத்துவமாகக் கட்டமைப்பதை எழுதி இயக்கியுள்ள இளையராஜா கலியபெருமாள் தவிர்த்திருக்கலாம்.

ஏமாற்றத்தை அளிக்காத த்ரில்லராக டென் ஹவர்ஸ் படம் உள்ளது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.