Search

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

terminator-dark-fate-review

தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து இயந்திரங்களால் பூமிக்கு அனுப்பப்படும் கொலை இயந்திரங்களே டெர்மினேட்டர்கள்.

1984 இல் தொடங்கிய ‘டெர்மினேட்டர்’ தொடரின் எல்லாப் பாகங்களுக்கும் அநேகமாய் ஒரே கதை தான். என்ன செய்தாலும் அழிக்க முடியாத டெர்மினேட்டர் எனும் அதி நவீன வில்லனுக்கும், என்ன செய்தாவது டெர்மினேட்டர் கொலை செய்ய நினைக்கும் டார்க்கெட்டைக் காப்பாற்ற நினைக்கும் எதிர்கால மனிதர்கள் அனுப்பும் கலப்பு (ஹைப்ரிட்) மனிதனுக்கும் இடையே நடக்கும் துவந்த சண்டையே படத்தின் கதை.

1991 இல் வந்த ‘ஜட்ஜ்மென்ட் டே’ படம் இன்று பார்த்தாலும் ரசிக்க முடியும். ஆனால், தொடர்ந்து எடுக்கப்படும் தொடர் படங்களில், கதையில் புதிய விஷயங்கள் ஏதும் சேர்க்கப்படாதது, இந்தத் தொடர்ப்படங்களின் மிகப்பெரிய பலவீனம். இப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆனால், இம்முறை ரேவ்-9 எனும் அதிநவீன டெர்மினேட்டரால் இரு உருவங்களாகப் பிரிந்து செயற்பட முடியுமென்பது ஒரு வில்லனின் அகிரேட் செய்யப்பட்ட அம்சங்களில் ஒன்று. ஆனால், அதனால் திரைக்கதையில் பெரிய திருப்பங்களோ சுவாரசியங்களோ இல்லை. விஷுவலிலும் ஒரு பிரம்மாண்டம் தெரியாமல், நலிந்த டெர்மினெட்டராய் உள்ளது.

ஹைப்ரிட் மனிதர் க்ரேஸாய் எதிர்காலத்தில் இருந்து வரும் மெக்கன்ஸி டேவிஸும், சாரா கானராக நடித்திருக்கும் லிண்டா ஹாமில்டனும், டேனியல்லாவாக நட்டாலியா ரீஸும் நடித்துள்ளனர். ‘நான் இனி வரமாட்டேன் (I wont be back)” எனச் சொல்லும் கார்லாக அர்னால்ட் ஸ்வார்செனேகர். T-800 ரக டெர்மினேட்டரான அவர், தனது டார்கெட்டான ஜான் கானரைக் கொன்ற பின், மேலும் கட்டளைகள் எதிர்காலத்தில் இருந்து வராததால், கார்ல் எனும் மனிதராக வாழ ஆரம்பிக்கிறார். பூமியில் மனிதரோடு வாழத் தலைப்படும் டெர்மினேட்டர் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள் என இத்தொடர் இது போன்ற பாசிபிளிட்டியை மையக் கருவாக எடுத்து மேலும் எக்ஸ்ப்ளோர் செய்யலாம்.

இதுதான் கதை எனத் தெரிந்து விடுகிறது. டெர்மினேட்டரை எப்படி அழிக்கின்றனர் என்பதில்தான் திரைக்கதையின் சுவாரசியத்தைக் கூட்டக் கூடிய ஒரே வாய்ப்பு. ஆக்ஷன் அதகளமும் கம்மி, எமோஷ்ணல் டச்சும் நிறைவாக இல்லை. ‘இருண்ட விதி’ என்ற தலைப்பிற்குத் தத்துவார்த்த பொருளும் நிரவப்படவில்லை.