

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தாய் கிழவி’ படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்துக் கட்டிக்காப்பவரைதான் அப்படிக் கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
பாடலாசிரியர் ஜெகன், “ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது” என்றார்.
நடிகர் பாலசரவணன், “மகிழ்ச்சியான, எனக்குத் தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ எனப் பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையைக் கேட்டுச் சிரித்தேன், அழுதேன். எனக்குக் கிடைத்த செல்வம்தான் இந்தக் கதாபாத்திரம். தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி” என்றார்.
நடிகர் சிங்கம்புலி, “பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.
நந்தன் பட இயக்குநர் இரா. சரவணன், “எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார்.
ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றிப் போட்டாலும் பத்தாது. அந்தளவுக்குச் சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜா, “இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களைக் கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்திச் சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும்” என்றார்.
இயக்குநர் சிவகுமார் முருகேசன், “பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்குக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன்” என்றார்.
நடிகர் சூரி, “படம் முழுக்க நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா ஞாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம்.
‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்தச் சமூகத்திற்குத் தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லாப் படங்களிலும் செய்து வருகிறார்” என்றார்.


