ஆண்டை கோப்புலிங்கத்திற்குப் பரம விசுவாசியாக உள்ளார் கூழ்பானை என்றழைக்கப்படும் அம்பேத்குமார். ஆதலால், தனித்தொகுதியாக்கப்படும் வணங்கான்குடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குக் கூழ்பானையைத் தேர்வு செய்கிறார். தான் ஆட்டுவிக்கும் பாவையாகக் கூழ் பானை இருப்பான் என்ற நம்பிக்கை சிதையும் வண்ணம், தங்களுக்கென ஒரு தனிச் சுடுகாட்டைத் தன்னிச்சையாக அரசாங்கத்திடம் கேட்டுப் பெறுகிறார் அம்பேத்குமார். அதனால் கோபமுறும் கோப்புலிங்கத்தின் எதிர்வினையும், அதை அம்பேத்குமார் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் முடிவு.
தனித் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்ற தலைவர்களை, சமூகத்தில் ஆழ வேரூன்றிவிட்ட சாதியக் கட்டமைப்பு எப்படி நடத்துகிறது என்பதுதான் படத்தின் மையக்கரு.
படத்தின் ஆகப் பெரிய பலவீனம் படத்தின் கதாபாத்திர வார்ப்புகளே ஆகும். என்ன சொல்லப் போகிறோம் என இயக்குநர் இரா. சரவணனுக்கு இருந்த தெளிவு, முதன்மை கதாபாத்திரங்களை உருவாக்குவதில் இல்லாமல் போய்விடுகிறது. கூழ்பானை என்பவர், முன்னாள் பிரஸிடென்ட்டான கோப்புலிங்கத்திற்குச் சேவகம் செய்யவே தான் அவதாரம் எடுத்துள்ளோம் என உளமார நம்புகிறார். எப்பவும் அழுக்கான ஆடைகளையே அணிகிறார். நாயகி சுருதி பெரியசாமி சொல்வது போல், முதுகெலும்பில்லாத மனிதராக உள்ளார் அம்பேத்குமார். தானொரு மனிதன் என்ற சராசரியான பிரக்ஞையே இல்லாத கூழ்பானையாக சசிகுமார் நடித்துள்ளார். ஆனால், அவர் எந்த இடத்திலும் சோடை போய்விடக்கூடாதென்ற அரசியல் புரிந்துணர்வோடு அவரது தாத்தா அம்பேத்குமார் எனப் பெயர் வைத்துள்ளார். படத்தின் நீளமான ஒரு மணி நேரம் ஐம்பது நிமிடத்தில், சுமார் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் கூழ்பானையாகவும், கடைசி பத்து நிமிடங்களுக்கு மட்டும் அம்பேத்குமாராக உள்ளார். அந்தக் கடைசி பத்து நிமிடங்கள், படம் தரும் உணர்வெழுச்சிக்காக சுமார் தொண்ணூறு முதல் நூறு நிமிடங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
படத்தின் முதல் சட்டகத்தில் இருந்தே கோப்புலிங்கமாக வரும் பாலாஜி சக்திவேல், ஆதிக்க சாதித்திமிரைப் பறைசாற்றுகின்றார். ஆனால், கூழ்பானை மட்டும் வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத அப்பாவியாக அவர் காலைச் சுற்றி வருகிறார். வாயால் சாதிய விஷத்தை மட்டுமே சுரப்பவராகவும், கோப்புலிங்கத்தின் தந்தையுமாக, படுத்த படுக்கையாக சீக்குப்பட்டுள்ளார் G.M.குமார். எதுவும் உரைப்பதில்லை கூழ்பானைக்கு. ஏன், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுக்கப்பட்டும், பள்ளியில் கொடி ஏற்றவிடாமல் அவமானப்படுத்தப்பட்டும், சுடுகாட்டில் இடம் மறுக்கப்பட்டும், பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டும், நடுத்தெருவில் நையப்புடைக்கப்பட்டுத் துகிலுரிக்கப்பட்டும் கூடப் பார்வையாளர்களைச் சோதிக்கிறாரே தவிர்த்து, அவரது கூழ்பானைத்தனத்தைச் சுலபத்தில் உதறமாட்டேங்கிறார். அவரது மனைவி போராடிப் பார்க்கிறார், BDO-வாக வரும் சமுத்திரக்கனி முயற்சி செய்கிறார், ம்ஹூம்.. இறுதியில் ஊரே திரண்டு வந்து தைரியம் அளித்த பின்பே கடைசி 10 நிமிடம் உணர்வெழுச்சி நடக்கிறது. சமுத்திரக்கனி வந்த பின்புதான் படம் ஆசுவாசமளிக்கும் எல்லைக்குப் படம் நகருகிறது. அதுவரை, சமூகத்தில் நிலவும் சாதிய கொடுமைகளைக் காட்டுகிறேன் பேர்வழியென இயக்குநர், கூழ்பானையை அளவுக்கு மீறிய அப்பாவியாகக் குனிய வைத்து, அவரைத் துன்பத்தில் சுகம் காணுபவராகச் (Masochist) சித்தரிக்கிறார்.
இறுதியில் ஒளிபரப்பாகும் ஆவண அசைவொளியில் காண்பிக்கப்படும் தனித்தொகுதி ஊர்த்தலைவர்களின் வேதனையிலும், குமுறலிலும் புரையோடிய சமூகத்தின் கோர முகம் பட்டவர்த்தனமாய்ப் பளீச்சிடுகின்றது.
அன்று,
இன்னல் தரும் இழிபிறப்பாகிய இது
இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை
வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே?
– திருத்தொண்டத்தொகை
என்று தனது பிறப்பை இழிவாகவும், இன்னல் தருவதாகவும் கருதினார் திருநாளைப்போவார் நாயனார் எனும் புலையர் குல நந்தனார். கோவில் வாசல்க்கு வெளியே நிற்கும் நந்தனார் தன்னைத் தரிசிக்கட்டும் என நந்தியை நகரச் சொன்ன சிவனால், நந்தனாரை அப்படியே தில்லையம்பதிக்குள் வரச் சொல்ல முடியவில்லை.
இன்று,
“ஆள்வதற்காகத்தான் அதிகாரம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவைப்படுகிறது” என நந்தனின் அண்ணன் அம்பேத்குமார்க்குக் காலம் கடந்த ஞானோதயம் எட்டுகிறது. அதுவரை கோயில் பிராகரத்திற்கு வெளியே நின்று, ஆண்டைகள் வீசியெறியும் மாலைகளைச் சுமப்பவராக உள்ளார். இந்த வசனத்துக்கு இருக்கவேண்டிய வீரியத்தை இரா. சரவணனின் சுமாரான திரைக்கதை நீர்த்துப் போகச் செய்துவிடுவது துரதிர்ஷ்டமே!