(தங்கலான் விமர்சனத்தில், ரஞ்சித்தின் அரசியலில் முரண் உள்ளதென்ற கூற்றுக்கு வந்த எதிர்வினையே இக்கட்டுரை.)
//தன் வரலாற்றை மறந்திருக்கும் போது, விவசாய நிலத்தின் மீதும், வரலாற்றை உணர்ந்ததும் தங்க பூமியின் மீதும் உரிமை கோருகிறான் நாயகன். இந்த முரணிலேயே படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியம் வடிந்துவிடுகிறது. இந்த முரண், ரஞ்சித் தீவிரமாகப் பேசி வரும் அரசியலையே சுய பகடி செய்கிறது. //
படத்தில், தங்கம் என்பது ஓர் உருவகமாகக் (Metaphor) கையாளப்பட்டுள்ளது. தங்கம் என்பது இங்கே பெளதீக வடிவத்தில் இருக்கும் உலோகத்தைக் குறிக்கவில்லை. மாறாக அது உரிமையைச் சுட்டுகிறது. வெறுமனே நிலத்தை அனுபவிப்பதற்கான உரிமை இல்லை, ஆள்வதற்கான உரிமையாக உருவகப்படுத்தியுள்ளார் ரஞ்சித்.
//விவசாய நிலத்தின் மீது உரிமை //
நிலத்தை ஆளும் உரிமை வைத்திருந்தவனை, அதிகாரவர்க்கத்துக்கு வரி கட்டிக் கொண்டு, நிலத்தை உழுது அனுபவிக்கும் உரிமையை மட்டும் கொடுத்து, அந்த உரிமையையே பெரிதென்று நினைக்க வைத்துவிட்டார்கள். பின்னாடி
வர்ணாசிரமத்தைக் கொண்டு வந்து, அந்த உரிமையையும் பறித்து, பூர்வகுடிகளை ஊரை விட்டு ஒதுக்கி வேப்பூர் பச்சேரியில் வாழவிட்டுவிட்டார்கள். எங்கேயோ ஒரு மூலையில் இன்னமும் ஆளும் உரிமையை வைத்திருக்கிற அவன் இனத்துக்காரனை அழித்து, அந்த நிலத்தைப் (KGF) பிடுங்க இவனையே ஆயுதமாக, அதுவும் அனுபவிக்கிற உரியைமையைத் தர்றேன்னு ஆசை காட்டிக் கூட்டிக் கொண்டு போய் சண்டை போட வைக்கின்றனர்.
அரசனுக்காக சண்டை போட்ட காடையன், ‘இழந்த அனுபவிக்கும் உரிமை திரும்பக் கிடைத்தால் உனக்காக சண்டை போடுகிறேன்’ என்கிறார்.
// தங்க பூமியின் மீது உரிமை //
தங்கலானோ, நிலத்தை அனுபவிக்கிற உரிமைக்காகவும், வெள்ளைக்காரன் சமமாக நடத்துவான் என்கிற நப்பாசையாலும் போகிறார். அங்கே போன பிறகு, அந்த தங்க வயலே, அதாவது ஆளும் உரிமையே தன்னுடையதுதான் என்கின்ற அறிவு கிடைத்ததும், அதிகாரம் செய்து கொண்டிருக்கு வெள்ளையனை எதிர்க்கத் தலைப்படுகிறார்.
முதல்ல வந்த எதிரி, ஆளும் உரிமை படைத்த ஆரனை அடிமையாக்கி, விவசாயத்தில் ஈடுபடுத்துகிறான். தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபடுகிறர்வர்கள், சொந்த நிலத்தில் விவசாயம் செய்வதுதான் உரிமை எனச் சுருங்கி விடுகிறார்கள். அப்படித் தலைமுறைகளாக விவசாயத்தில் பாடுபட்டு சொந்தமாக ஒரு காணி நிலத்தை அடைகின்ற நிலைமை வந்தபோது, பார்ப்பனீயம் வர்ணாசிரமத்தைப் பாய்ச்சி பிரம்மதேயத்தால் அவர்கள் நிலத்தைப் பிடுங்கிக் கொண்டு ஊருக்கு வெளியே துரத்திவிடுகிறது. இந்தத்
தலைமுறை, உழுது அனுபவிக்க நிலம் கிடைத்தால் போதுமென்று, ‘அதைத் தர்றேன்’ எனச் சொல்கின்ற அரசனோடு சேர்ந்து, ஆளும் உரிமையோடு இருக்கிற தன் இனத்து ஆட்களுடனாகவே சண்டை போட்டு உயிரை காடையனின் ஆட்கள் உயிரை இழக்கிறார்கள்.
அந்த மனப்பாங்கு, உழுவதற்கு நிலம் என்பதைத்தான் தங்கலானும் பிரதிபலிக்கிறார். உழுது கொண்டிருக்கிற நிலம் பறிபோனபோது, அது திரும்பக் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வெள்ளைக்காரனுடன் சேர்ந்து கொள்கிறார் தங்கலான். கடைசிச் சண்டையில் ஆரத்தியோட போதனைகள் புரிந்து, ‘நான் உழுது அனுபவிக்கிற குடியானவன் இல்லை. நிலத்தை ஆள்பவன்’ என உணர்ந்து, கூட்டிக் கொண்டு வந்த வெள்ளைக்காரனையே எதிர்த்து நிற்கிறார் தங்கலான். ஒவ்வொரு முறையும் ஆரத்தி ரத்தம் சிந்தின பிறகுதான் தங்கம் எதிரியின் கைவசமாகுது.
ரஞ்சித் தொடர்ந்து பேசிக் கொண்ட்டு வருகின்ற அரசியல் இதுதான். ஆளும் இடத்துக்கு வருவதுதான் தலித்துகளின் உண்மையான விடுதலை. மெட்ராஸ் படத்தில் அன்பு, கபாலி, காலா எனத் தொடர்ந்து அதிகாரத்தைப் பிடிக்கிறதுதான் அவரோட அரசியல்.
விவசாயக்குடியாக வாழ்வது என்பது திமுக, அதிமுக மாதிரி கட்சியில் ஒரு எம்.எல்.ஏ.வாகவோ, மாவட்ட செயலாளராவோ, அதிகபட்சம் மத்திய மந்திரியாவோ திருப்தியடையவது (அல்லது கூட்டணிக்கட்சியாக இணைந்து நாலு எம்.பி. சீட் ஜெயிப்பது). அதாவது தங்கலானுக்கு வெள்ளைக்காரன் கொடுத்த சட்டை பேண்ட், குதிரை போன்றவற்றில் தங்கலான் திருப்தியடைவது போன்றது. க்ளைமேக்ஸில், தங்கத்தைப் பூசிக் கொண்டு தலைமையாகிறது என்பது பகுஜன் சமாஜ் ஆட்சியைப் பிடிப்பது போன்றது. இது முன்னேற்றத்தை (Progressiveness) உணர்த்துகின்றதே அன்றி நிச்சயம் முரணை அல்ல.
ரஞ்சித்தின் அரசியல் சரியா, தவறா என்பதைப் பற்றியதல்ல இந்தக் கட்டுரை. தான் பேசுகின்ற, சொல்ல வந்த அரசியலைத் தெளிவாகவே சொல்லியிருக்கார் என்பதைப் பதிவதே இக்கட்டுரையின் நோக்கம்.