Shadow

சாலா விமர்சனம்

விட்னெஸ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களைத் தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரித்துள்ளது. ஒரு பாருக்கான (Bar) போர் என்பதுதான் படத்திம் டேக்-லைன். படத்தின் ஒரு வரிக்கதையும் அதுவே!

குணாக்கும் தங்கதுரைக்கும் இடையேயான தகராறில் ராயபுரம் பார்வதி பார் இழுத்து மூடப்படுகிறது. குணாவின் வளர்ப்புத் தம்பியான சாலா, பார்வதி பார் அண்ணனுக்குத்தான் என சபதம் எடுக்கிறார். இருபத்து மூன்று வருடங்களிற்குப் பிறகு, பார்வதி பார் ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் வென்றது குணாவா, தங்கதுரையா என்பதே படத்தின் முடிவு.

தங்கதுரையாக சார்லஸ் வினோத் நடித்துள்ளார். வில்லனாக அவர் தோளை உயர்த்தி நிமிரும் கணங்களில் எல்லாம் சாலாவால் மூக்கு உடைப்படுகிறார். தனது உயிரைக் காப்பாற்றிய சாலா, தாஸ் என இரண்டு சிறுவர்களை எடுத்து வளர்க்கிறார் குணா. குணாவாக அருள்தாஸ் நடித்துள்ளார். அவரது ஆகிருதிக்குக் கொடுக்கப்படும் வழக்கமான பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். தாஸாக நடித்திருக்கும் ஸ்ரீநாத் படத்தின் கலகலப்பிற்கு ஆங்காஙே உதவுகிறார்.

மதுக்கடைகளை மூடச் சொல்லிப் போராடும் சமூக ஆர்வலர் புனிதாவாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்துள்ளார். ஆசிரியையாகப் பணி புரியும் அவர், மதுவின் தீமைகளையும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றிப் பிராச்சாரம் செய்கிறார். மதுக்கடைக்கான போர் எனத் தொடங்கும் படம், ரேஷ்மாவின் தீவிரத்தால் மதுவிற்கு எதிரான படமாக மாறுகிறது. அதற்குக் கனம் சேர்ப்பது போல் உள்ளது பதறவைக்கும் க்ளைமேக்ஸ். கலை இயக்குநர் வைரபாலன், ஒளிப்பதிவாளர் ரவீந்தரநாத் குரு, படத்தொகுப்பாளர் புவன் ஆகியோர் இணைந்து க்ளைமேக்ஸை சிறப்பாக வடிவமைத்துள்ளனர்.

சாலாவாக தீரன் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். வலுவான உடற்கட்டு, உயரம், தாடி என ஒரு ஆக்‌ஷன் ஹீரோவிற்கான புற இலட்சணங்களுடன் உள்ளார். சண்டை இயக்குநர்கள் மகேஷ் மேத்யூ & ரக்கர் ராம், தீரனை நன்றாக உபயோகப்படுத்தியுள்ளனர். பாருக்குள் முப்பது பேரை தீரன் துவம்சம் செய்யும் காட்சியை நம்பும்படி காட்சியாக்கியுள்ளனர்.

பாரின் (Bar) பின்புலத்தில், குடியின் தீமையைப் பற்றி மிக அழகாக எடுத்தியம்பியுள்ளார் இயக்குநர் S.D.மணிபால். போலி மதுபானம் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் படம் தொட்டுச் சென்றுள்ளது.