Search

மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

the-bullet-vanishes-
(க்சியா ஷி டி சி டென் – The bullet vanishes (2012))

 

சீனாவின் ஷாங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களைத் திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான்.

முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பைச் சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்தப் பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்தத் துப்பாக்கி என்னைத் தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கியின் தோட்டா உண்மையிலேயே வெடித்து அவள் இறக்கிறாள்.

இது தவறிழைத்த அவளுக்கு கடவுள் தந்த தண்டனை என அறிவித்து, சடலம் அப்புறப்படுத்தப்படுகிறது. இப்படித் தான் இந்தப் படம் ஆரம்பிக்கிறது.

அதற்கடுத்து அந்தத் தொழிற்சாலையில் மேலாளர் அளவில் பணிபுரியும் சிலர் மர்மான முறையில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்களைச் சுட்ட தோட்டாக்களும் கிடைப்பதில்லை. தொழிலாளிகளிடையே இந்தக் கொலைகளை செத்துப் போன பெண்ணின் ஆவி செய்வதாக பீதி பரவுகிறது.

அந்தப் பகுதியில் இரண்டு போலிஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன், பூமியில் பதிந்த காலடி தடத்தை வைத்தே அந்தக் காலடிக்கு சொந்தமானவன் எவ்வளவு உயரம், என்ன வயது, எவ்வளவு எடை, அவனது நடைபழக்கம் ஆகியவற்றை ரொம்ப லாஜிக்கலாக, உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லக்கூடியவன். அந்த பிராந்தியத்திலேயே துப்பாக்கியை மிக வேகமாக உபயோகிக்ககூடியவன்.

மற்றொருவன், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட உடலுக்கும், கொலை செய்யப்பட்டு பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படும் உடலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அறிய தானே தன்னைத் தூக்கு மாட்டிக்கொண்டு, உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வழக்கின் உண்மைத்தன்மையை கண்டறியும் வீரியம் கொண்டவன். இவர்கள் இருவரும் தொழிற்சாலையில் நிகழும் தொடர்கொலைகளைக் கண்டறிய இணைகிறார்கள். பிறகு படம் அதிரிபுதிரி வேகத்துடன் செல்கிறது.

குறிப்பாக மாயமான தோட்டாக்கள் எப்படித் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராயும் முயற்சிகளும் பனிக்கட்டியினால் கூடத் தோட்டாவை மாதிரியாகச் செய்து பார்த்து அதனால் கொலை நிகழ்ந்திருக்குமா என யோசித்திருப்பார்கள். கடைசியில் உண்மையைக் கண்டுபிடிக்கும் போது ‘வாவ்’ என இருக்கும். அடுத்த முடிச்சு, துப்பாக்கி முதலாளி பயன்படுத்தும் போது வெடிக்காமல் குறிப்பிட்ட நபர் பயன்படுத்தும் போது மட்டும் வெடிப்பது. இதில் ப்ராபபிலிட்டி தியரியைத் தாண்டிச் செய்யப்படும் கோக்குமாக்கு வேலையைக் கண்டறியும் வித்தை, மிகச் சுவாரசியமாக விரிந்திருக்கும்.

இதே போல படம் முழுக்க சிலந்தி வலை போல பரவியிருக்கும் முடிச்சுகள். அதனை ஒவ்வொன்றாக விடுவிக்கப்படும் போது பெரிய காட்சி அனுபவத்தைத் தருகிறது. எல்லாமே சூப்பர் என்றாலும் எனக்குத் தனிப்பட்ட வகையில் இந்தப் படத்தின் கடைசி காட்சி பிடிக்கவில்லை. அதற்கு முன்பே இந்தப் படத்தை முடித்திருக்கலாம். கடைசிக் காட்சி சீன தேசத்தின் அதிகார மையங்களைப் பகடி செய்ய எடுக்கப்பட்டதாகவும் கருதமுடிகிறது.

படத்தின் அடுத்த கவனம், அதன் பிரசன்டேஷன். 100 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்தைப் பளிங்கு சுத்தமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார்கள். ஒவ்வொறு ஃப்ரேமும் அவ்வளவு அழகு, அற்புதம். இந்தப் படம் 2009 இல் வெளிவந்த ஷெர்லாக் ஹோம்ஸின் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். நிச்சயம் நம்ம ஊர் இயக்குநர்கள் போல ஈ அடிச்சான் காப்பி அடிக்கவில்லை. ஷெர்லாக் படத்தின் ப்ளாஷ்பேக் யுக்தி, வெடிக்கிடங்கில் இருந்து தப்பிப்பது, தன்னைத் தூக்கு மாட்டிக் கொண்டு அதன் விளைவுகளை ஆராய்வது என பல காட்சிகள் இந்தப் படத்திலும் இருந்தாலும் படத்தின் கான்டெக்ஸ்ட் முற்றிலும் வேறாகவே இருப்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை.

இந்த தசாப்தத்தில் வந்த மிகச் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்று இப்படம். குறைந்த பட்ஜெட்டில் மிக அதீத வெளிப்பாட்டைக் கொடுக்கும் இந்தப் படம், தொழில்நுட்பம், கதாபாத்திரத் தேர்வு என அனைத்திலும் ஆசிய சினிமா சோடை போகவில்லை என எடுத்துக் காட்டுகிறது. இதுபோன்ற படங்கள் தமிழில் எப்பவரும் என்ற எதிர்பார்ப்பை ஏக்கத்துடன் ஏற்படுத்துகிறது.

– ஜானகிராமன் நா