Shadow

The GOAT விமர்சனம்

The Greatest Of All the Time – எல்லாக் காலத்திலும் மிகச் சிறந்தவர். Goat of the SATS (Special Anti Terrorism Squad) என்றழைக்கப்படும் நாயகன், பயங்கரவாதத்திற்கான எதிரான நடவடிக்கைகளில் மிகச் சிறப்பாகச் செயற்படுகிறார் எனப் பொருள் கொள்ளலாம். ‘இனி நடிக்கப் போவதில்லை’ என்ற விஜயின் முடிவிற்குப் பிறகு வந்த படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கு எகிறியிருந்தது. இரண்டு விஜய் இணைந்து கலக்கும் டீசர் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது.

நாயகன் M.S. காந்தி ஜீவனைத் தொலைத்து விடுகிறார். பதினாறு வருட சோகத்திற்கும் குற்றவுணர்ச்சிக்கும் பிறகு ஜீவன் கிடைத்துவிட்டாலும், அதன் பின் கண் முன்னாலேயே நண்பர்களைக் காப்பாற்ற இயலாமல் இழந்து விடுகிறார் காந்தி. கடைசியில் வில்லன் ராஜிவ் மேனனின் சூழ்ச்சிக்கு பலியாகி, M.S.காந்தி தங்கப்பதக்கத்தினைப் பெறுவதுதான் படத்தின் கதை.

இளம் வயது ஜீவனாக நடித்துள்ள மாஸ்டர் அகில் கவருகிறார். அவரை இழந்ததும், அவர் குடியிருந்த கோயிலான சினேகாவும், விஜயும் உடைபடும் காட்சிகள் உருக்கமாக உள்ளன. ஆனால் பதினாறு வருடங்களுக்கு முன், மீண்டும் தாயும் சேயும் சேரும் காட்சியில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் தேமோவெனக் கடக்கின்றனர். 

M.S.காந்தியாகத் தளபதி விஜய், ஜீவனாக டீ-ஏஜிங் இளைய தளபதி நடித்துள்ளனர். டீ-ஏஜிங் விஜய் எப்படி இருப்பாரோ என்று ஐயத்துடன் சென்றால், அவர் பட்டையைக் கிளப்புகிறார். காந்தியோ பொருந்தாத மேக்கப்பில் பார்வையாளர்களைச் சோதிக்கிறார். விஜய்க்கு நல்ல ஹேர்-ஸ்டைலிஸ்ட்டோ, மேக்கப் கலைஞரோ அமையாதது மிகவும் துரதிர்ஷ்டம். நாயகனின் சால்ட் & பெப்பர் கெட்டப்பை ரசிக்க முடியும் என ரசிகர்களுக்கு உணர்த்திய வெங்கட் பிரபு, இம்முறை அதற்காக மெனக்கெடாமல் கோட்டை விட்டுள்ளார். இளைய தளபதியின் நக்கல், வில்லனிசம், ‘அட!’ போட வைத்தாலும், விநாயக் மகாதேவன் போல் இறவாப் புகழை எய்த மாட்டார். விநாயக் மகாதேவன் வில்லன் இல்லை. எதிர்நாயகன் மட்டுமே! பேராசைக்காரர்களுடன் இணைந்து, அவர்களைக் கொன்று சூதாட்டப் பணத்தைக் கையகப்படுத்துவார். ஜீவனோ கழுத்தை அறுக்கும் சைக்கோ. அவர் திரையில் தோன்றினாலே, GOAT, GOAT என யுவனின் பின்னணி இசை அலறுகிறது. இளம்பெண் என்று கூடப் பாராமல் கழுத்தை அறுக்கும் சைக்கோ கொலைகாரனை GOAT எனச் சிலாகிக்கும் இயக்குநருக்கும், இதில் நடிக்க ஒத்துக் கொண்ட விஜய்க்கும் கடும் கண்டனங்கள்.

இளைய தளபதி GOAT இல்லை, தளபதி தான் GOAT என எடுத்துக் கொண்டாலும், அதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை. ரா (R&AW) உளவுப்பிரிவுக்குக் கீழ் SATS இயங்குவதாக சிநேகாவிடம் சொல்வார் விஜய். ரா என்பது உளவு அமைப்பு. சத்தமில்லாமல் காரியங்களை முடிப்பதுதான் அவர்களது பாலபாடம். யுரேனியத்தைத் திருடப் போய் ஒரு ட்ரெயினையே வெடிக்க வைக்கிறார். அதாவது கொடுத்த வேலையைச் சொதப்பலாகச் செய்பவர். ஐந்து வயது மகனைத் தொலைப்பவர். பதினாறு வருடம் ஸ்குவாட்டை விட்டு விலகி இருப்பவர். தனது பாஸைக் காப்பாற்ற முடியாதவர். வில்லனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மகனை மீட்க முடியாதவர். இப்படியாக M.S. காந்தி, field அதிகாரியாக, தந்தையாக, கணவனாகத் தோல்வியுற்றவர். இவரையும் GOAT என அழைக்க முடியாது. அப்ப யார் தான் GOAT என மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்விக்கு, க்ளைமேக்ஸில் இருவரை GOAT எனக் குறிப்பால் உணர்த்துகிறார். ‘செய்றோம்’ என வெங்கட் பிரபு சொன்னதன் பொருளை உணர முடிந்தது. மற்றொரு காட்சியில், உளவு வேலையில் நிஜமான GOAT யாரென விஜய் ஹம் செய்து குறிப்பாலும் உணர்த்துகின்றார். 

சரி, விஜயைத்தான் செய்துள்ளார் எனப் பார்த்தால் சகட்டுமேனிக்கு அனைவரையும் செய்துள்ளார் வெங்கட் பிரபு. எப்படி சுறா படத்தில் விஜய் பாய்வாரோ, அப்படி பிரபு தேவா ஜீப்பில் இருந்து ட்ரெயினுக்குள் பாய்கிறார். SATS இன் உயரதிகாரி நஸீராக வரும் ஜெயராம், அதி முக்கியமான தகவலை காந்திக்குத் தெரியப்படுத்த டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டு வருகிறார். ஷ்ஷ்ப்பாஆ, உளவு அமைப்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள். மிஷன் நடுவில் ஏதேனும் முக்கிய தகவல் எனில் நேரில் போய் சொல்லிவிட்டு வருவார் போல! ஏன் VP ஏன்?

ஆண்கள் தங்கள் நண்பர்களுக்காகப் பொய் சொல்லிக் காப்பாற்றுவார்கள் என்ற பிரபலமான ரீல்ஸை, பிரஷாந்த், பிரபு தேவா, விஜய் ஆகியோரைக் கொண்டு மறு உருவாக்கம் செய்து பார்த்துள்ளார் வெங்கட் பிரபு. பொதுவாக இத்தகைய மறு உருவாக்கங்கள் சமூக ஊடங்களில் தான் பலமுறை மறு உருவாக்கம் செய்யப்படும். வெங்கட் பிரபு ஒரு மாறுதலுக்காகப் பெரிய திரையில், விஜயைக் கொண்டு மறு உருவாக்கம் செய்து அழகு பார்த்துள்ளார். யாரோ முகம் தெரியாதவர் ரீல்ஸையே ரசிக்கிறோம், விஜய் நடித்தால் ரசிக்க முடியாதா? ரசிக்க வைத்துவிடுகிறார் வெங்கட் பிரபு. ஆனால் அதற்கு விஜய் ஏன்? வைபவ் ரீல்ஸ் செய்தாலும்தான் பார்வையாளர்கள் ரசிப்பார்கள்.

மாநாடு மாதிரியான அற்புதமான திரைக்கதை கொண்ட படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, இப்படத்தில் திரைக்கதையை இரண்டாம்பட்சமாகப் புறந்தள்ளிவிட்டு, விஜயின் விசிறிகளை மகிழ்விக்க வேண்டுமென்ற ஒற்றைக் குறிக்கோளுடன் களமிறங்கியுள்ளார். வெங்கட் பிரபு நாயகனாக முன்னெடுத்துள்ள இந்த அசாத்தியமான மிஷனில் இலகுவாக பலிகடாவாகியுள்ளார் விஜய். படம் முடியும்பொழுது, ‘நான் ஹீரோ இல்லடா வில்லன்’ என நேர்மையாக உண்மையையும் ஒப்புக் கொள்கிறார் வெங்கட் பிரபு. க்ளைமேக்ஸ் பின்னணி இசை கூட முந்தைய படத்தில் இருந்து எடுத்தாளப்படும் தருணங்களாக மட்டுமே உள்ளன. M.S.தோனி, விஜயகாந்த், சிவகார்த்திகேயன் என எதிர்பாராத் தருணங்களில் தோன்றுகிறார்களே தவிர, கதைக்கு அதனால் எந்தப் பலனுமில்லை.

மங்காத்தா படம், தீம் மியூசிக் முதல் அஜித்தின் வில்லனிசம் வரை அனைத்துமே தனித்துவமாக இருக்கும் பக்கா கமர்ஷியல் பேக்கேஜ். கம்பீரமாக ராஜதுரை போல் நிற்க வேண்டிய GOAT படம் இரவல் வாங்கிய தற்காலிக பொலிவுடன் மட்டுமே ஜொலிக்கிறது.