
கடந்த பத்து ஆண்டுகளில் நான் பார்த்த படங்களிலேயே, என்னை மிகவும் பாதித்த, யோசிக்க வைத்த மிக முக்கியமான திரைப்படம் இது. இந்த ஸ்பானிய மொழி திரைப்படம், நெட்ஃபிளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
ஸ்பான்டேனியஸ் சாலிடாரிட்டி, அதாவது, பிரச்சனையின் போது மக்கள் இயல்பாகவே ஒற்றுமையாக, ஒன்று சேர்ந்து போராடுகிறார்களா அல்லது விட்டுக் கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அறிவதற்காக நடத்தப்படும் மிக அபாயகரமான சோதனை தான் இப்படத்தின் களம்.
இது தவிர, இந்தப் படம், மக்களாட்சித் தன்மையில் அதிகாரத்தில் இருப்பவருக்கும், அவருக்குக் கீழே அவனை நம்பி பிழைப்பு நடத்தும் எளிய மனிதனுக்கும் இருக்கும் தொடர்பு பற்றியும் யோசிக்க வைக்கிறது.
முந்நூறு அறைகளைக் கொண்ட செங்குத்து அபார்ட்மென்ட்டில், ஒவ்வொரு அறையிலும் இரண்டு பேர் இருப்பார்கள். அந்த அறைக்கு நடுவில், மேலே முதல் அறையில் இருந்து கீழிருக்கும் 300க்கும் மேற்பட்ட அறைகளுக்குச் செல்லும் மிகப் பெரிய லிஃப்ட்டுக்கான ஓப்பன் ப்ளாட்ஃபார்ம் இருக்கிறது.
அந்த அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் அனைவருக்கும் தினசரி உணவு, தேர்ந்த சமையல்காரர்களால், மிக மிக நுணுக்கமாக, அக்கறையுடன், கச்சிதத்துடன் உயரிய தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. ஒரு சிறு உணவுப்பொருளில் ஒரு சிறிய முடி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும். தலைமை சமையற்காரர், அங்கு வேலை செய்யும் நூற்றுக்கணக்கான சமையல்காரர்களையும் வரிசையில் நிற்கவைத்து கடுமையாகக் கண்டிப்பார். அந்த அபார்ட்மென்ட் வாசிகளுக்கு நல்ல உணவை உறுதி செய்வதில் அவ்வளவு ஸ்டிரிக்ட்.
இப்ப அபார்ட்மெண்ட்டுக்கு வருவோம். அங்கு வசிப்பவர்களுக்கு நான்கு கண்டிஷன்கள்.
1. தினமும் ஒவ்வொருவருக்கும் பிடித்த உணவு நேர்த்தியாகத் தயார் செய்யப்பட்டு ஒரு பெரிய மேடையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு மேலே முதல் மாடியில் இருந்து ஒவ்வொரு மாடியாக குறிப்பிட்ட நேரம் அந்த அறையில் இருப்பவர்கள் சாப்பிடுவதற்காக லிஃப்டில் அனுப்பப்படும்.
2. ஒவ்வொரு அறையில் இருப்பவர்களும் அந்த உணவை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், பிறகு சாப்பிட என உணவை எடுத்து வைத்துக் கொள்ளக் கூடாது.
3. ஒவ்வொரு அறையில் இருப்பவர்களும் மாதம் ஒரு முறை வேறு அறைக்கு மாற்றப்படுவார்கள். முதல் மாதத்தில் 10 வரை அடுக்கில் இருந்தவர் அடுத்த மாதம் 170 ஆவது அடுக்குக்கு மாற்றப்படலாம்.
4. ஒவ்வொருவரும் தாங்கள் அந்த அபார்ட்மென்டுக்கு வரும் போது தங்களுடன் ஏதாவது ஒரு பொருளை உடன் எடுத்துவர அனுமதி உண்டு.
அந்த அபார்ட்மென்ட் ஒரு வகையில் தண்டனைக்கான இடமாக இருக்கிறது. சமூகத்தில் கொலை, கொள்ளை செய்தவர்கள் சிறைக்குச் செல்லலாம். அல்லது இந்த அபார்ட்மென்டில் சில மாதங்கள் தங்கி விடுதலை அடையலாம். நமது படத்தின் கதைநாயகன், புத்தகம் படிப்பதற்காக விருப்பப்பட்டு இந்த அபார்ட்மென்ட் வந்து சேர்கிறான். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை வந்த முதல் நாளே தெரிந்து கொள்கிறான்.
ஒவ்வொரு நாளும், உணவானது முதல் இரண்டு அறைகளைத் தாண்டியதும் அலங்கோலமாகிறது. மொத்தமாக்க் கலைத்து, நசுக்கி அசுத்தப்படுத்தப்படுகிறது. 100ஆவது அடுக்கைத் தாண்டிய பிறகு யாருக்கும் உணவே கிடைக்காது. மேலே இருப்பவர்களின் மிதமிஞ்சிய நுகர்வு. அதனால் 100ஆவது அடுக்குக்கும் கீழே இருப்பவர்களிடையே வன்முறையும் கொலையும், அடுத்தவரை கொன்று அவரது உடலைத் தின்னும் கொடுமையும் கூட நிகழும்.
இந்தச் சூழலில் சிக்கும் நமது கதை நாயகன் இதற்குத் தீர்வு கண்டானா இல்லையா என்பதே திரைப்படம். கதைநாயகனும் அவன் சந்திக்கும் நான்கு கதாபாத்திரங்களும் மொத்த திரைப்படத்தைத் தாங்கி நிற்கிறது.
நமது சமூகம் பொதுவாகப் பேசும் அறவுணர்வு, அன்பு இவையெல்லாம், குறைந்தபட்ச தேவைகள் பூர்த்தியாகும் போது தான் வெளிப்படுத்தும். உயிரோடு இருப்பதே சவால் எனும் நிலையில் அறவுணர்வு, அன்பு எல்லாம் மொத்தமாகக் காணாமல் போய்விடுகிறது என்ற செய்தியை இப்படம் தாங்கி நிற்கிறது. 2004இல் சுனாமி வந்த போது பெண்கள், குழந்தைகள் அதிகம் பேர் இறந்தனர். ஒரே குடும்பத்தில் ஆண், உயிர் பயத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவரை விட்டுவிட்டு தப்பிச் சென்ற செய்தி நினைவுக்கு வந்தது.
அதே போல பழியுணர்வு மனிதனின் அடிப்படைப் பண்பு. சென்ற மாதம் 150 ஆவது அறையில் உணவே கிடைக்காமல் அல்லாடிய ஒருவன் அடுத்த மாதம் 10 ஆவது அறைக்கு வரும் போது, தனக்குக் கிடைத்த உணவை வீணாக்கி, மிகையாக உண்டு, கீழே இருப்பவன் உணவு கிடைக்காக கஷ்டப்படட்டும் என நினைத்துச் செயற்படுவான்.
மக்களாட்சியின் அபத்தம், மனிதனின் பேராசை, பழியுணர்வு, உயிர் காப்பதற்கான போராட்டம், மனித அறம் என பல அடுக்குகளில் நிறைய பேசுவதற்கு இப்படம் கன்டென்ட் கொடுக்கிறது.
அனைவருக்கும் ஏற்ற படமல்ல. நிறைய வன்முறைக் காட்சிகள் உள்ளன. ஆனால் உலகப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படம்.