Shadow

ரைட்டர் விமர்சனம்

காவல்துறையின் அசல் முகங்களை அப்படியே அப்பட்டமாகப் பதிவு செய்துள்ளது ரைட்டர்.

தன் சர்வீஸில் யாரையும் அடித்திராத நேர்மையான காவல்துறை எழுத்தர் சமுத்திரக்கனி. அவருக்கு இரு மனைவிகள். அவருடைய ஒரே லட்சியம் போலீஸ் யூனியன் அமைக்க வேண்டுமென்பதே. அதற்காகவே அவர் வெவ்வேறு ஸ்டேஷனுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். அப்படி அவர் மாற்றலாகிச் செல்லும் ஒரு காவல்நிலையத்தில் அப்பாவி இளைஞன் ஹரிக்கு ஓர் அநீதி இழைக்கப்படுகிறது. அதற்கு சமுத்திரக்கனியும் ஒரு காரணமாகி விட, அதை அவர் எப்படி சரி செய்தார் என்பதே ரைட்டரின் பயணம்.

தேவைக்கேற்ற தொந்தி, குற்றவுணர்வில் தடுமாறும் வார்த்தைகள் என சமுத்திரக்கனி சிறப்பாக நடித்துள்ளார். அதிகம் பேசாமல் இவர் நடித்திருக்கும் படம் என்பது கூடுதல் சிறப்பு. போலீஸிடம் மாட்டிக்கொள்ளும் அடிமட்ட இளைஞனாக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஹரி. ஓரிரு காட்சி என்றாலும் சுப்பிரமணிய சிவா அசத்தலாக நடித்துள்ளார். வடமாநில காவல்துறை உயரதிகாரியும், கவிதா பாரதியும் மிகச்சரியான தேர்வு. ப்ளாஷ்பேக்கில் வரும் இனியா நெகிழ்ச்சிக்குள்ளாக்குகிறார்.

படத்தின் முன்பாதியில் சிறிய தேக்கம் தெரிந்தாலும் பின்பாதி அதைச் சிறப்பாக சரி செய்துவிடுகிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்தை இயல்பாக எடுத்துச் செல்ல உதவியிருக்கிறது. ஒளிப்பதிவில் இருக்கும் எளிமையும் புதுமையும் படத்திற்குப் புத்துணர்ச்சி.

காவல்துறையைச் சார்ந்தவர்கள் எளியவர்களை வஞ்சிக்கிறார்கள் என்பதை அப்பட்டமாகக் காட்டியிருக்கும் இயக்குநர் பிராங்க்ளின், காவல்துறைக்குள் நடக்கும் ஆண்டான் அடிமை முறையையும் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார். மன அழுத்தத்தால் இளம் காவலர்கள் தற்கொலை செய்கிறார்கள் என்ற வேதனை நிறைந்த செய்திகளை இயக்குநர் மிகுந்த அக்கறையோடு பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் பிராங்க்ளினின் அழுத்தமான எழுத்து, பரியேறும் பெருமாள் படத்தினைப் போல் நீலம் ப்ரொடக்ஷன்ஸின் மற்றொரு பொக்கிஷமாக ரைட்டர் திரைப்படத்தை நிலைத்து நிற்கச் செய்யும்.

ஜெகன் கவிராஜ்