Search

நோய் முதல் நாடி #MeToo

Stop - Me Too India

முறைகேடான பாலியல் விழைவால் ஒரு தனிமனித அத்துமீறல் நடக்கிறது என்றால், அதற்கு முக்கிய தூண்டுதலாக இருப்பது மூன்று விஷயங்கள்.

தன்னை / தன் உடலை, தன் விருப்பத்திற்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்கிற புரிதல் இல்லாத விக்டிம்கள் (பாதிக்கப்பட்டவர்கள்). அடுத்து, இது ஓர் அத்துமீறல் என்கிற உணர்வே இல்லாது இருக்கும் சுற்றுப்புறத்திலிருப்பவர்கள். மூன்றாவதாக, தங்கள் வக்கிரத்தை மறைத்து, அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் கயவர்கள்.

தற்போது பெருகிவரும் பாலியல் குற்றசாட்டுகளை முன்னிறுத்தி, பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு அறிவுறுத்தல் நிகழ்வை (counseling session) ஒருங்கச் செய்திருந்தார். அப்போது நான், ‘பலருக்கும் எது அத்துமீறல் என்பதே புரியாது இருக்கும் நேரத்தில் இது போன்ற செஷன்கள் முக்கிய தேவை’ எனக் குறிப்பிட்டிருந்தேன். இது இருபுறத்தார்க்கும் பொருந்தும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்பது குறள். இன்று ஓரளவிற்குப் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மீதான அத்துமீறலை இனம் கண்டு குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அரசு, தனியார் நிறுவனங்கள் என எல்லா இடத்திலும் இது போன்ற அத்துமீறல்களுக்கான விதிகள், அதை எதிர்கொள்ளும் நடைமுறைகள், அதன் மேலான நடவடிக்கைகள் என முறைமைகள் இருக்கின்றன. அவை இயங்கிக் கொண்டும் வருகின்றன.

சென்னை மியூசிக் அகாதெமி போன்ற பாரம்பரிய நிறுவனங்களும், கண்டும் காணாது இருக்கும் போக்கை விட்டுவிட்டு, தங்களுக்கான பங்கை நிறைவேற்ற முன்வந்திருக்கின்றன. பலரால் குற்றம் சாட்டப்பட்ட பிரபல இசைக்கலைஞர்கள் எழுவரை தங்கள் அகாதெமியில் பாட அனுமதிக்கப் போவதில்லை என முடிவெடுத்து இருக்கின்றன.

ஆனால், விசாரணையும், அதன் மேலான நடவடிக்கைகளும் மட்டும் இத்தகைய நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டு வரப் போவதில்லை. பாலியல் அத்துமீறல் என்பது ஒரு மனநோய். அதற்கான முறையான கவுன்சிலிங்கும் அளிக்கப்பட வேண்டும்.

‘என் வயசென்ன, அனுபவமென்ன! தொடையைத் தட்டித் தாளம் போடச் சொல்லிக் கொடுத்தா, கம்ப்ளெய்ண்ட் எழுதினா எப்படி? என்ன எனக்கு பேத்தி வயசிருக்குமா அதுக்கு!?’

‘நடிக்க வரும்போதே எல்லாம் ஒத்துக்கிட்டுத்தானே வராளுங்க. கேக்காம கட்டிப்பிடிச்சா தப்பா?’

‘இதெல்லாம் ஒரு ஜோக்குதான? டபுள் மீனிங்ல சொன்னா என்ன கற்பு கெட்டுப் போச்சாமா? இவ ஆடின ஆட்டமெல்லாம் நமக்குத் தெரியாதா?’

தங்கள் செய்கைகள், சம்பந்தப்பட்டவரைப் பொறுத்தவரையில் அத்துமீறல்கள் என்பதையே உணராது அதை நியாயப்படுத்திக் கொண்டே போக, சிறிது சிறிதாக அவர்களைச் சுற்றி இருக்கும் சமூகமும், ‘அதானே’ என ஆமோதிக்கத் தொடங்க, மீண்டும் நிலை கொண்டு விடுவார்கள்.

இவர்களின் நடவடிக்கைகள் தங்களைப் பாதிக்கின்றன என குரல் கொடுத்த அப்பாவி பெண்களும், சிறார்களும்தான் பாவம். ஆரம்ப பரபரப்பு அடங்கிப் போக, நிலைகொண்ட செல்வாக்கானவர்களைத் தாண்டி முன்னேற முடியாமல் தவிப்பார்கள்.

சமூகமும், பெரு அமைப்புகளும் புறம் தள்ளிப் போக வேண்டிய விஷயம் மட்டுமில்லை இது. சிகிச்சை செய்யவேண்டிய விஷயம்.

சிறார்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பயிற்சி நிகழ்த்தும் நிறுவனங்களும், தங்கள் அமைப்பின் ஒரு பகுதியாக கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து, இது போன்ற குற்றசாட்டுகளை, ஐயங்களைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் சைக்காலஜிக்கல் கவுன்சிலிங் போக அறிவுறுத்தலாம். அப்படியான கவுன்சிலிங் நடந்ததற்கான அத்தாட்சிகளைக் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும்.

பெண்கள், சிறார்கள் மீதான அத்துமீறல்களை நிகழ்த்துபவரைக் காட்டிலும், அப்படியான குற்றத்தை கண்டும் காணாமலும் பொறுத்துக் கொண்டு போகும் சமூகம் ஆபத்தானது.

இப்பொழுதுதான் நம் சமூகம் மெதுவாக விழிப்படைந்து சில நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறது. இத்தோடு நிறுத்திவிடாது, இன்னமும் சரியான, தேவையான முறைமைகளை நடைமுறைப்படுத்தி ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிகோல வேண்டும்.

அதுதான் நம் வருங்கால சந்ததியினர்க்கு நாம் ஈட்டுத் தரும் மகத்தான செல்வம்.

– ஸ்ரீதர் நாராயணன்

(Image courtesy: YourOwnRoom.com)