Shadow

கூஸ்பம்ப்ஸ் 2: ஹாண்டட் ஹாலோவீன் விமர்சனம்

Goosebumps-2-movie-review

கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை.

சானியும் சாமும், பொக்கிஷம் எனக் கருதி ஒரு பெட்டியைத் திறக்க, ஒரு புத்தகம் கிடைக்கிறது. அதைத் திறந்ததும் ஸ்லாப்பி எனும் டம்மி பொம்மை திடீரென அவர் முன் தோன்றுகிறது. அதன் பாக்கெட்டில் உள்ள சிறு பேப்பரை எடுத்து, அதிலுள்ள மந்திரத்தை உச்சரித்து, தெரியாத்தனமாக ஸ்லாப்பிக்கு உயிர் கொடுத்துவிடுகின்றனர்.

உயிர் கிடைத்ததால் ஹேப்பியாகும் ஸ்லாப்பி, சானியிடமும், அவள் சகோதரி சாராவிடமும், தான் அவர்களது சகோதரன் என்றும், நாமெல்லாம் ஒரு குடும்பம் என்றும், அது தன் வீடு என்றும் சொல்கிறது. ஸ்லாப்பியின் மந்திர சக்தியும், அதை அது பயன்படுத்தும் விதத்தாலும் பயப்படும் சாரா, அந்த உயிருள்ள டம்மி பொம்மையை வீட்டில் இருந்து அகற்ற நினைக்கிறது.

ஸ்லாப்பியோ மீண்டும் தோன்றி, தனக்கு ஓர் அம்மா இல்லையே என்ற ஏக்கத்தில், சானியின் அம்மாவையும் டம்மி பொம்மையாக மாற்ற முயல்கிறது. அதோடு நில்லாமல், ஹாலோவீன் ஏற்பாட்டிற்காகத் தயார் செய்யப்பட்ட அத்தனை பொம்மைகளுக்கும் உயிரூட்டி விடுகிறது. பனி மனிதன், எலும்புக்கூடுகள், சூனியக்காரிகள், தலையில்லா மனிதன், அலங்காரத்திற்கு வைக்கப்படும், பூசனிக்காய்கள், கரடி பொம்மை வடிவில் இருக்கும் குட்டியூண்டு ஜவ்வு மிட்டாய்கள் என அனைத்தும் உயிர் பெற்று நியூ யார்கின் வார்டன்கிளிஃப் நகரத்தை நாசம் செய்கின்றன.

படத்தில் டெஸ்லா டவர் என்பது முக்கியமானதொரு கதாபாத்திரம். அந்த டவருக்கு, வார்டன்கிளிஃப் டவர் என்ற பெயரும் உண்டு. கதைக்களமாக, அந்நகரத்தைத் தேர்ந்தெடுத்து கதையோடு உபயோகித்துள்ளது சமார்த்தியமான செயல். ஸ்லாப்பி, டெஸ்லாவின் கனவான அந்தக் கம்பியில்லாச் செலுத்துதல் (Wireless Transmission) கோபுரத்துக்கு உயிர் கொடுத்து, அதன் மூலமாகத் தனது மேஜிக்கை ஊரெங்கும் பரப்பி, அந்த ஊரையே தன் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் ஸ்லாப்பியின் நோக்கம்.

ஊரையும், தன் அம்மாவையும் சானியும் சாமும் சாராவும் எப்படிக் காப்பாற்றுகின்றனர் என்பதுதான் படத்தின் கதை.

சானி க்வினாக ஜெரமி ரே டெய்லரும், சாரா க்வினாக மேடிசன் ஐஸ்மனும் தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். படம் நெடுகே வந்தாலும், சாம் பாத்திரத்திற்கு ஏற்றிருக்கும் கலியெல் ஹாரிஸ்க்குப் போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லை.

குழந்தைகளின் ஹாலோவீன் கொண்டாத்தை மேலும் குதூகலப்படுத்துவதற்காக எடுத்துள்ளனர். கூஸ்பம்ப்ஸ் வாசிக்கும் குழந்தைகளை மகிழ்விக்க முயன்றுள்ளார் இயக்குநர் ஆரி சண்டெல். அடுத்த பாகம், ஸ்லாப்பி எழுதிய புத்தகத்தின் கண்ணோட்டத்தில் விரிந்தால், அது கூடுதல் சுவாரசியத்தை அளிக்கும் என்று நம்பலாம்.