‘யுவர் வங்கி’க்குள் நுழைந்து துணிகர கொள்ளையில் ஈடுபடுகிறார் டார்க் டெவில் எனும் சர்வதேசக் குற்றவாளி. ஆனால் டெவிலின் நோக்கம், பணத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமன்று எனப் புரிந்து கொள்கிறார் டிஜிபி தயாளன். டார்க் டெவில் யார், அவரது நோக்கமென்ன என சுவாரசியமாகக் கதை சொல்லியுள்ளார் இயக்குநர் ஹெச். வினோத்.
பத்திரிகையாளர் மைபாவாக வரும் மோகனசுந்தரம் கலகலப்பிற்கு உதவியுள்ளார். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உதாசீனப்படுத்திவிட்டு, நொடியில் பத்து லட்சம் பணம் பார்க்கும் அவரது சந்தர்ப்பவாதத்தின் மூலமாக, மீடியாவின் இன்றைய போக்கை நயமாகக் கேலி செய்துள்ளார் இயக்குநர். வங்கியைக் கொள்ளையடிக்க இறங்கும் முதல் குழுவின் தலைவனாக ராஜதந்திரம் படத்து நாயகன் வீரா நடித்துள்ளார். வங்கிக்கு வெளியில் இருந்து அஜித்திற்கு உதவும் கண்மணியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். நாயகனுக்குச் சமமாகக் குண்டடிகள் பெற்றும், அதை மீறி சாகசம் செய்யும் நாயகியாக மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறார் மஞ்சு வாரியர். கான்ஸ்டபிள் ஆண்டனியாக வரும் மகாநதி சங்கருக்கு முக்கியத்துவம் மிகுந்த கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் வினோத். ஆனால், மகாநதி சங்கருக்கே உரிய தனித்துவமான அவரது கரகரப்பான குரல் படத்தில் மிஸ்ஸிங்.
ஒரு ஸ்டைலிஷான வங்கி கொள்ளை படமாகக் கவருகிறது படத்தின் முதற்பாதி. அதை, அப்படியே உல்டாவாக்கி, வங்கிகள் ஈடுபடும் நிதி மோசடிகள், சட்டத்திற்குட்பட்ட பொருளாதாரக் குற்றங்கள், மியூச்சுவல் ஃபண்ட் பித்தலாட்டங்கள், சாமானியனைச் சுரண்டிக் கொழிக்கும் வங்கிகளின் அடாவடித்தனமான விதிகள் என சீரியசான விஷயத்தை இரண்டாம பாதியில் கலகலப்பாகக் கொண்டு சென்றுள்ளார் வினோத். புலி வாலைப் பிடித்தது போல் கிரெடிட் கார்ட் பயன்படுத்திச் சிக்கியவர்கள், வறுமையில் சிக்கிச் சின்னாபின்னமாகும்போது மினிமல் பேலன்ஸ் பராமரிக்கவில்லையென வங்கியிடம் மிச்சசொச்ச கொசுறு பணத்தையும் இழந்தவர்கள் என அனைவராலும் படத்தின் பேசுபொருளை இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். ‘அடப்பாவிங்களா! உண்டியல்ல போட்டிருந்தா கூட காசு அப்படியே இருந்திருக்குமேடா?’ என வங்கி நிறுவநரிடம் அஜித் கேட்கிறார்.
இந்தப் படத்தின் மேஜிக் என்பது அஜித், அஜித், அஜித். “என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா?” என மிகக் கூலாக அவர் காட்டும் வில்லத்தனம் அசத்தலாக உள்ளது. எதிர் நாயகன் போல் அறிமுகம் செய்யப்பட்டாலும், ஒரு மிகப் பெரிய பொருளாதாரக் குற்றத்தைத் தடாலடியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் சூப்பர் ஹீரோவாகி விடுகிறார். அஜித் போன்ற மாஸ் ஹீரோவிற்குத் தீனி போடுமளவு ஒரு வில்லன் படத்தில் இல்லை. எனினும், இந்தப் படத்தில் நாயகன் எதிர்ப்பது கண்ணுக்குத் தெரியாத சூட்சம எதிரிகளை. அதாவது, சிஸ்டத்தை இயக்கும் பண முதலைகளையும், அவர்களுடன் கைகோர்த்து சாமானியர்களின் நலனைப் புறந்தள்ளும் அதிகார வர்க்கத்தையும். சூட்சமதாரிகள் எப்பொழுதும் ஆடுகளத்தில் நேரடியாக இறங்குவதில்லை. “நான் வங்கியைக் கொள்ளையடிக்கிறானா? இல்லை வங்கி மக்களிடம் கொள்ளையடிக்கிறதா?” என மக்களின் கவனத்திற்குப் பொருளாதாரக் குற்றத்தைக் கொண்டு செல்லும் அஜித்தைச் சாதுரியமாகக் கட்டம் கட்டுகின்றது ஆளும்வர்க்கம்.
அதனின்று, துணிவில்லாவிட்டால் மகத்துவமில்லை என பொங்கல் திருவிழாவைத் துப்பாக்கிக் குண்டுகளின் முழக்கத்தோடு ஆராவாரமாக்கியுள்ளார் அஜித்.