தொழிலதிபர் ராஜேந்திரன் பழனிச்சாமிக்கு, ஜெய், அஜய், விஜய் என மூன்று மகன்கள். தனது தொழில் வாரிசாக அவர் எந்த மகனை நியமிக்கப் போகிறார் என முடிவெடுக்கக் கதையில் எழு வருடமும், படத்தில் ஒரு மணி நேரம் பத்து நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறார் ராஜேந்திரன். ராஜேந்திரனின் மகுடம் அவரது இளைய மகன் விஜய் ராஜேந்திரனிடம் போகிறது. பிளவுப்படும் குடும்பத்தையும், ராஜேந்திரன் எழுப்பிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையும், விஜய் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை.
ஒரு நாயகன் மாஸாகவோ, பாஸாகவோ பரிணாமம் அடைய, வலுவானதொரு வில்லன் தேவை. படத்தில், சொல்லிக் கொள்ளும்படியான வில்லத்தனத்தை ஜெய், அஜயாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்தும் ஷாமுமே செய்து விட, தொழிலதிபர் ஜெயபிரகாஷாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜின் பாத்திரம் டம்மி வில்லனாகக் காற்று போன பலூனாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முன் விஜயே கடுப்பாகி, ‘கிளாப் அடிக்கிற மாதிரி ஏதாவது வில்லத்தனம் பண்ணுய்யா’ எனக் கெஞ்சாத குறையாகக் கேட்டுவிடுகிறார். ஆனால், வில்லன் அதற்கும் அசராமல் தத்தியாகவே தன் கெத்தை மெயின்டெயின் செய்கிறார். இன்வெஸ்டர் அஜய் மிட்டலாக வரும் எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான நடிப்பால் ரசிக்க வைத்தாலும், லாஜிக் கிலோ விலை எனக் கேட்கும்படியான பாத்திரத்தில் அவரைத் தூக்கிப் போட்டுள்ளனர்.
படத்தின் நாற்பத்தைந்தாவது நிமிடத்தில் அறிமுகமாகும் ராஷ்மிகா மந்தானாவைப் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். அந்தப் பாடல் காட்சிகளிலும், விஜய் ஸ்கோர் செய்துவிட, தெலுங்கு ரசிகர்களை உள்ளே வரவைக்கக் கூடிய தூண்டிலாக மட்டுமே அவரது இருப்பு சுருங்கிவிடுகிறது. ராஷ்மிகா – விஜய் காதல் (!?) காட்சிகளைச் சுவாரசியப்படுத்துவது, விஜயின் க்யூட்டான எக்ஸ்பிரக்ஷன்ஸும், யோகிபாபுவின் ரியாக்ஷன்ஸுமே!
கதைக்குள் செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல், மிக நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்கின்றனர். அதுவும் படத்தின் முதற்பாதியைத் தாங்கிப் பிடித்திருக்க வேண்டிய அம்மா – இளைய மகன் சென்டிமென்ட்டோ, தந்தை – இளைய மகன் சண்டையோ ஒட்டாமல் உள்ளது. இயக்குநர் வம்சி திரைக்கதையில் எதற்குமே மெனக்கெடவில்லை. இளைய மகனான விஜய் நீங்கலாக, செக்கச்சிவந்த வானம் படத்தின் மையச் சரடை அடியொட்டியே கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவராக அறிமுகம் செய்யப்படும் விஜய், தன் புஜபல பராக்கிரமத்தாலும், போர்ட் மீட்டிங்கில் ‘குட்டி’ ஸ்டோரி சொல்லும் திறமையாலுமே, மகுடத்தைத் தன் வசமாக்கிக் கொள்கிறார். மைண்ட் கேமோ, பவர் கேமோ இல்லாத தட்டையான வாரிசுப் போட்டியாக உள்ளது.
தனி நபர் மீது குடும்பம் ஏற்படுத்தும் சுமையையோ, வன்முறையையோ பொறுத்துக் கொண்டு, எது அந்நபரைக் குடும்பத்தோடு பிணைத்து வைக்கிறது எனும் கேள்விக்குப் பதில் காண முயற்சி செய்துள்ளார் இயக்குநர் வம்சி. தனி மனித சுதந்திரத்தை வாழ்க்கையின் முதன்மை லட்சியமாக வைக்கும் நவீன போக்கிற்கு மத்தியில், வாதையை அளித்தாலுமே, ‘பூரண நிறைவுடன் எந்தக் குடும்பமும் இருப்பதில்லை’ என அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார் வம்சி. சகோதரர்கள் கொல்லவே துணிந்தாலும், கணவன் வேறு பெண்ணுடன் நெருக்கம் பேணினாலும், இந்தப் பிறவியில் குடும்பம் எனும் அமைப்பிற்குள் அவர்கள் வந்துவிடுவதால், அவர்களுக்காகத் தோள் கொடுக்க வேண்டியது அவசியமாம். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ முதலிய படங்கள் எதைச் சுட்டிக் காட்ட முனைகிறதோ, அதை, திருமதி ராஜேந்திரனாக நடித்துள்ள ஜெயசுதா பாத்திரத்தின் மூலம் மகிமைப்படுத்தியுள்ளது படம்.
தொழிலதிபர் ராஜேந்திரனாகப் பிரமாதமான நடிப்பை வழங்கியுள்ளார் சரத்குமார். குடும்பத் தலைவனாகத் தோல்வியுற்றுப் பரிதவிக்கும் காட்சிகளில் அட்டகாசமாகத் தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். பெரும்பாலான பாத்திரங்களின் வார்ப்பு சரியாக வடிவமைக்கப்படாத பட்சத்தில், ராஜேந்திரன் பாத்திரம் மட்டும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் மாளிகையில் மாட்டப்பட்டிருக்கும் ஜெமினி கணேசனின் புகைப்படம் நன்றாக உள்ளது. அநேகமாக அவர் தான் பழனிச்சாமியாக இருக்கவேண்டும் என யூகிக்க முடிகிறது.
விஜயின் வசீகரமும், அவரது துள்ளலான நடனமும், தமனின் இசையும் மட்டுமே பொங்கல் கொண்டாட்டத்திற்குரிய படமாக வாரிசைத் தாங்கிப் பிடிக்கின்றன.