ஒரு சிறுவனின் செல்ல நாய் துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்டு இறக்கிறது. அச்சிறுவன் இணையத்தில் ஒரு துப்பறிவாளரைத் தேடி, நாயைக் கொன்றவனைக் கண்டுபிடிக்கச் சொல்லி தன் சேமிப்பான என்னூத்தி சொச்சம் ரூபாயைத் தனியார் துப்பறிவாளரிடம் தருகிறான். அந்த வழக்கு, துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனை எங்கெல்லாம் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் கதை.
முகமூடி படத்தின் ஹேங் ஓவர் முழுவதுமாக இயக்குநர் மிஷ்கினுக்கு விலகியதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நாயகனும் சூப்பர் ஹீரோ. சகலகலா வல்லவன். தொழிற்முறை (!?) கொலைக்காரர்கள் எனச் சொல்லப்படுகிறவர்கள், நாயகனைச் சைனீஸ் ரெஸ்டாரன்ட்டிற்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்து, கத்தியை அவர் மீது வீசிக் கொல்ல முனைகின்றனர். அனைவரையும் அசால்ட்டாக அலட்டிக் கொள்ளாமல் தெறிக்க விடுகிறார் (நாயகன் சீனர்களைத் துவம்சம் செய்யும் அக்காட்சி பக்தாஸைப் பரவசப்படுத்தும் என்பதில் நோ டவுட்). ஆர்தர் கானன் டாயலுக்கு கிரெடிட் கொடுத்திருந்தாலும், இது முற்றிலும் மிஷ்கினின் வழக்கமான பாணியைக் கொண்ட திரைக்கதை. காவல்துறையினரால் சூழப்பட்டதும், சாமுராய் வீரர்களைப் போல் தற்கொலை செய்து கொள்ளும் தமிழ் பேசும் நபரை மிஷ்கின் படங்களில் மட்டுமே காண இயலும். ஏனெனில் மிஷ்கினின் உலகம் மிகப் பிரத்தியேகமானது. அவரது கதாபாத்திரங்களும் அப்படியே!
படையப்பா படத்தின் க்ளைமேக்ஸில், காருக்குள் அமர்ந்திருக்கும் அப்பாஸ்க்கு கே.எஸ்.ரவிக்குமார் கொடுத்த ரோலை, மிஷ்கின் பிரசன்னாவிற்குக் கொடுத்துள்ளார். ஆனால், படத்தில் மிஷ்கின் ஊடுருவாத ஒரே பாத்திரம் என்றால் அது பிரசன்னா மட்டுந்தான். ஆனால் நாயகனை வியப்புடன் நோக்க மட்டும் என பிரசன்னாவை உபயோகப்படுத்தியுள்ளதை ஏற்பதற்குச் சிரமமாக உள்ளது.
நகைச்சுவை எனும் பெயரில், ஒரு காட்சியில் மிஷ்கின் எல்லை தாண்டியுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஓர் அறையில் ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் வேளையில், வெளியில் காவலாக நிற்கும் ஒருவன் தலையைக் குட்டி விட்டு, நாயகன் அவ்வறைக்குள் நுழைவது அநாகரீகத்தின் அருவருப்பின் உச்சம். இரண்டு பக்கமும் காவல் துறை அதிகாரிகள் சூழும் பொழுது, ஆண்ட்ரியா மிகச் சுலபமாய் அங்கிருந்து தப்பிக்கிறார் என்பது பார்வையாளர்களின் காதில் பூந்தொட்டி மாட்டும் செயல். காவல்துறையினர் மட்டும் கவனக்குறைவாக இருந்தனர் என்று காட்சி இருந்திருந்தால் கூட ஓகே, அவ்விடத்தில் சூப்பர் ஹீரோவான கணியன் பூங்குன்றனும் இருக்கிறார். திடீர் திடீரென காலில் வெந்நீர் ஊற்றியது போல் ஓடும் மிஷ்கினின் நாயகன், கண் முன் நழுவும் நபரைப் பிடிக்காமல், ‘போய் வா மகளே!’ என வழியனுப்புவது திரைக்கதையின் மிகப் பெரிய ஓட்டை.
கால்களுக்கு கேமிரா ஆங்கிள் வைப்பது, மஞ்சள் சேலை பெண்ணின் நடனம் என மிஷ்கின் சிலதைத் தவிர்த்து சமரசங்கள் செய்திருந்தாலும், அவரது பாத்திரங்களை ஒரு காட்சியிலாவது ஜோம்பிகளாகக் காட்டியே தீருவேன் என்ற பிடிவாதமாக உள்ளார் போலும். விஷால் யார் முகத்தையும் பார்த்துப் பேசுவதில்லை (போக்கிரி ஹீரோ விஜய் ஹேவ் சேம் சிண்ட்ரோம்). பரபரப்பாக ‘பிளான் எ ட்ரிப்’ பிசினஸ் நடக்கிறது; ஒரு மனிதர் சிவப்பு ‘சோஃபா’வுடன் வருகிறார்; உடனே கடையை மூடிட்டு டைனிங் டேபிளில் அமர்ந்து வில்லனின் குழு உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்குகிறது (இந்தக் காட்சி ஏதேனும் குறியீடாக இருந்தால் தயவு செய்து யாரேனும் விளக்கினால் புண்ணியமாக இருக்கும்).
அரோல் கரோலியின் ஒலிப்பதிவும், கார்த்திக் வெங்கட்ராமின் ஒளிப்பதிவும் படத்தில் மாயம் செய்கிறது. ‘அவன் இவன்’, ‘பாண்டி நாடு’ படங்களைத் தொடர்ந்து இயக்குநரின் நாயகனாகப் பரிணமித்து ரசிக்க வைத்துள்ளார் விஷால். பிரதான வில்லனான வினயும் அசத்தி உள்ளார். அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக இது இருக்கும். நாயகன் நல்லவன் என்பதால் அவனது எல்லாக் கிறுக்குத்தனங்களையும் பொறுத்துக் கொண்டு ரசிக்கும் வழக்கமான கதாநாயகி தான் என்றாலும், பிக்பாக்கெட் தேவதையாகக் கவருகிறார் அனு இம்மானுவேல்.
மிஷ்கினின் படங்களில் மிகச் சிறந்த பாத்திரமைப்பு எனக் கொண்டாடப்பட்ட கதாபாத்திரங்களைக் கவனமாகத் துப்பறிவாளனில் கோர்த்துள்ளார். பிசாசில் இருந்து நாயகியையும், அஞ்சாதேவில் இருந்து வில்லனையும், சித்திரம் பேசுதடியில் இருந்து கடுகடுவென இருக்கும் நாயகனையும் உருவிக் கோர்த்துள்ளதைச் சொல்லலாம். ஆனால் பாண்டியராஜனுக்கும் ராதாரவிக்கும் மிஷ்கினின் முந்தைய படங்களில் கிடைத்த பொன்னான வாய்ப்பு, இப்படத்தில் பாக்கியராஜ்க்குக் கிடைக்காதது அவரின் துரதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும். ஆனால் அவர் ஏற்ற கதாபாத்திரமோ கைதட்டல்களைப் பெறுகிறது. அது தான் மிஷ்கின் மேஜிக்! படத்தில் இரண்டு முறை அது நிகழ்கிறது. பிற உயிர்களைக் காவு வாங்குவதில் குற்றவுணர்ச்சி இல்லாத இரண்டு ஜீவன்கள், தங்கள் இறுதி சுவாசத்திற்கு முன் காட்டும் மனிதம் தான் துப்பறிவாளனின் வெற்றி. அப்புள்ளியில் தான், ஜஸ்ட் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதில் இருந்து துப்பறிவாளன் தனக்கான விசேஷ இடத்தை நோக்கி நகர்கிறது.