Shadow

துக்ளக் தர்பார் விமர்சனம்

tughlaq durbar review

அமாவாசைகளால் நிரம்பியது அரசியல்களம். சிங்கம் என்றழைக்கப்படும் சிங்காரவேலன் அப்படியொரு நபர். எதிர்பாராத விதமாக அவருக்குத் தலையில் அடிபட, சிங்கத்துக்குள் இருந்து ஒரு நல்ல மனம் படைத்த ஆளுமை பெளர்ணமி போல் உருவாகிறான். சிங்கத்துக்குள் இருக்கும் பெளர்ணமி மக்களுக்கு நல்லது செய்யப் பார்க்க, அமாவாசையோ மக்களை வஞ்சித்துச் சம்பாதிக்கப் பார்க்கிறான். துக்ளக் தர்பார் போல், சிங்கத்திற்குள் இருக்கும் ஆளுமைகள் சிங்கத்தைத் தன்வயப்படுத்த அவனை ஒரு வழி செய்கின்றனர். சிங்கத்தை எந்த ஆளுமை வசப்படுத்தியது என்பதே படத்தின் கதை.

கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் மங்களமாக பகவதி பெருமாள் நடித்துள்ளார். தன்னிடத்தை நேற்று வந்தவன் பிடித்து விடுவான் என்ற பதற்றத்திலேயே இருக்கும் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். சிங்காரவேலனின் நண்பன் வாசுவாகக் கருணாகரன் நடித்துள்ளார். உற்ற துணையாக இருக்கும் நண்பன் கதாபாத்திரத்தில், ஏத்தி விடுதல், இடித்துரைத்தல் என விஜய் சேதுபதியின் நிழலாக வருகிறார் படத்தில்.

விஜய் சேதுபதியின் தங்கையாக மஞ்சிமா மோகன் வருகிறார். பெற்றோரின் புகைப்படத்தைச் சோகமாகப் பார்ப்பது மட்டுமே படத்தில் அவருக்கான வேலை. விஜய் சேதுபதி ஜோடியாக, சேட்டு வீட்டுப் பெண் காமாக்‌ஷியாக வருகிறார் ராஷி கண்ணா. அரசியலில் முன்னேறத் துடிக்கும் சிங்கத்திற்கு, அவன் வாழ்வில் பெண்கள் இரண்டாம் பட்சம்தான். அதனால் தான் அரசியல் லாபத்திற்காகத் தங்கையையே, சிங்கத்தால் கடத்த முடிகிறது.

விஜய் சேதுபதி. கொஞ்சமும் வளைந்து கொடுக்காத அவரது உடற்மொழி சற்றும் கதாபாத்திரத்திற்குப் பொருந்தவில்லை. நிஜத்தில், அதிகாரத்திற்கு முன் நன்றாக வளைந்து கொடுக்கும் அரசியல்வாதிகளைப் பார்த்துப் பழகியவர்களுக்கு, திரையில் நடிப்பிற்காக குனியவே கஷ்டப்படும் விஜய் சேதுபதியை, அக்கதாபாத்திரத்தில் பொருத்திப் பார்க்கக் கஷ்டமாக உள்ளது. பார்த்திபன் முன் அவர் காட்டும் பணிவு உண்மை போலவும் இல்லாமல், நடிப்பு போலவும் இல்லாமல், ஏனோ தானோ என்று அவசரத்திற்கு அள்ளித் தெளித்த கோலம் போல் பட்டும்படாமலும் இருக்கிறது. அரசியல் முன்னேற்றத்திற்கு எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாத்திரம் என்ற பிம்பம் எழுவதற்கு பதில், விஜய் சேதுபதியின் மெத்தனமே முன்னிற்கிறது. ஏற்ற இறக்க வசனங்கள் மூலம் தப்பித்துக் கொள்ளும் விஜய் சேதுபதியின் சாமர்த்தியம் கூட இப்படத்தில் கைக்கொடுக்கவில்லை. வழக்கமான பார்த்திபன் போல், வழக்கமான விஜய் சேதுபதியைத் திரையில் காண முடிந்திருந்தால் கூட, மணிவண்ணனின் அமைதிப்படை படம் தந்த அனுபவத்தில் அரைக்கால் வீதத்தையாவது அளித்திருக்கும் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளின் துக்ளக் தர்பார்.