2016 இல் வெளியான உறியடி மிக ஃப்ரெஷான அரசியல் படமாக ரசிகர்களைக் கவர்ந்தது. பிரித்தாளும் அரசியல்வாதிகள் Vs ஒற்றுமையான மாணவர்கள் என்பதாகப் படம் மறக்கவியலாததொரு அனுபவத்தை அளித்தது. இப்படமும் அப்படியே மனதில் தங்கும். போபால் விஷ வாயு கசிவைக் கண் முன் கொண்டு வந்து மிகப் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளார். மக்களின் உயிரை மயிறுக்குச் சமானமாக நினைக்கும் கொழுத்த தொழிலதிபர்தான் படத்தின் வில்லன். மக்கள் ஏன் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகின்றனர், மக்களுக்கான அரசாங்கம் எப்படி தொழிலதிபருக்காகச் சேவகம் செய்கிறது என்ற குரூரமான யதார்த்தத்தையும் படம் சித்தரிக்கிறது.
படம் தொட்டுள்ள களத்தின் தீவிரம் தாங்கமுடியாததாய் உள்ளது. ஆனால், முதற்பாகம் போல் திரைக்கதை அவ்வளவு இன்டென்சாக இல்லை. காரணம், முதற்படத்தில் விஷத்தைக் கக்கும் அரசியல்வாதிகள், கண்ணுக்குத் தெரியாமல் நம் அருகிலேயே உள்ளவர்களாக இருந்தனர். இப்படத்தில், திட்டவட்டமாக, அரசியலில் நேரடியாக ஈடுபட்டுள்ள கட்சியின் தலைவர்கள் தான், பாக்சினோ நிறுவன முதலாளியின் கைக்கூலிகள் எனத் தெரிகிறது. தங்களுக்கு நிகழ்ந்த மிக பெரும் பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் போராடுகின்றனர். ஒரு கட்டத்தில், தேர்தலில் நிற்கப் போராட்டக்காரர்கள் முடிவெடுக்கிறார்கள்.
செங்கதிர்மலையில் நிகழும் விஷ வாயு கசிவில் 255 பேர் இறந்து விடுகிறார்கள். அதன் குறியீடாகத் தேர்தலில், 255 பேர் போட்டியிடுகின்றனர். 110 பேரின் விண்ணப்பம் மறுக்கப்படுகிறது. மீதம் உள்ளவர்களும், ஒருவரை ஆதரிக்கும் வகையில், கடைசி நாளன்று வாபஸ் வாங்கிக் கொள்கின்றனர். அந்த ஒருவர் நாயகனான லெனின் விஜய். அவரது குறிக்கோள், யூ.கே.வில் பதுங்கிக் கொண்ட ராஜ்பிரகாஷை இந்தியாவிற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் நிறுத்துவது தான். வழக்கம் போல் சட்டம் தன் கடமையைச் செய்ய, லெனின் விஜயும் தனது வழமையான அணுகுமுறையைக் கையிலெடுக்கிறார்.
MIC – மெத்தைல் ஐசோ-சையனைட். இந்தப் படுபயங்கர விஷவாயு தான் போபாலில், சுமார் 3500 மேற்பட்டோரை பலி வாங்கி, 5 லட்சம் மக்களைப் பலவிதங்களிலும் பாதித்தது. படத்தில், ஒரு சிறுமியின் கண்ணில் இருந்து ரத்தம் வழிந்ததற்கான தடம் தெரியும். ஒரு தாய், கதறக் கதற அழும் தன் கைக்குழந்தையை பீரோக்குள் வைத்துப் பூட்டி தன் குழந்தையைக் காப்பாற்ற முயல்வார். கடவுளே! எத்தனை கொடுமை!! MIC-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, என்ன மருந்தினை அளிக்கவேண்டும் என்று கூடச் சொல்ல மறுக்கிறது பாக்சினோ நிறுவனம். அப்படிச் சொன்னால் குற்றம் நிகழ்ந்தது உண்மையென ஒத்துக் கொள்ள வேண்டிவந்துவிடுமாம். நான்சென்ஸ்!
35 வருடங்களுக்கு முன் நடந்த மிக மோசமான கோர விபத்தை, மன்னிக்க விபத்து எனச் சொல்லுவது மிகப் பெரும் கயமைத்தனம். ஒருவரின் பணத்தாசைக்காக நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட படுகொலைகள் அது. அதன் தாக்கம் இன்றளவும் நீள்கிறது. அதை அரசாங்கம் மறந்து, பட்டும் புத்தி வராமல், தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மக்கள் பக்கம் நில்லாமல், எதிர்தரப்பில் நிற்கிறது. அதை விடக் கொடுமை, அரச பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டு 13 பேரைச் சுட்டுக் கொல்லவும் செய்கிறது அரசாங்கம்.
லெனின் விஜய் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றுவிடுகிறார். எல்லாவற்றையும் இழந்துவிடும் மனிதன் என்ன செய்வானோ அதைச் செய்கிறார். அக்னிக் குஞ்சாய் ரெளத்திரத்தைக் காட்டுகிறார். துரு பிடித்த பைப்பில் இருந்து லீக்காகிச் சொட்டும் தண்ணீர்த் துளிகள், பார்வையாளர்களின் உயிரை உலுக்கும் என்று எழுதினால் அது மிகையாகத் தெரியலாம். ஆனால், கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை அதை செய்கிறது.
இப்படத்தைத் தயாரித்த 2D என்டர்டெயின்மென்ட்க்கு வாழ்த்துகள்.