Shadow

வான் மூன்று விமர்சனம்

வான் மூன்று. கவித்துவமான தலைப்பு. படத்தின் தலைப்பே கதையை சொல்கிறது.  காதலில் தோல்வியுற்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒரு யுவன் யுவதி பார்க்கும் ஒரு வானம்,  40 வருட இல்லற வாழ்க்கையை இனிமையாய் வாழ்ந்து கழித்து வயோதிகத்தை வரவேற்க்கும் தம்பதிகளில் மனைவிக்கு இதய வால்வில் அடைப்பு, அறுவை சிகிச்சைக்கு மகனிடம் இருந்து பண உதவி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் ஏக்க பெருமூச்சுடன் இருக்கும் கணவன், இந்த இணை பார்க்கும் இரண்டாம் வானம், காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து தங்கள் இளமையை இனிப்போடு களிக்க விரும்பிய இணைக்கு குழந்தை வந்துவிட்டதோ என்று பயம், பரிசோதிக்க வந்த இடத்தில் மூளை பாதிப்பு என்று தெரிந்து பயம் கூட, இவர்கள் பார்ப்பது மூன்றாம் வானம்.

இவை படத்தின் ஆரம்பக் காட்சிகள். இந்த முதல் பத்தியை படிக்கும் போதே அடுத்த என்ன நடந்திருக்கும் என்று கணித்திருப்பீர்கள்.  படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் இறுதிக் காட்சி இதுதான் என்று கணித்துவிட்டால் அது ஆகப்பெரிய குறை ஒன்றும் இல்லை. ஆனால் அந்த ஆரம்பப்புள்ளி முடிவுப்புள்ளி இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இடங்களை என்ன மாதிரியான கதையைக் கொண்டு,  காட்சிகளைக் கொண்டு கடத்துகிறார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது, அத்திரைப்படத்திற்கான  மதிப்பீடு.

அடிப்படையில் மூன்று கதைகளும் உயிரோடு தொடர்பு கொண்டு இருந்தாலும் கூட, மூன்று கதைகளிலுமே உயிர்ப்பான காட்சிகள் ஒன்று கூட இல்லாமல் போனது மூன்று வானுக்குமான கறை.

கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள் இவைகளைப் பார்க்கும் போது எல்லாவற்றிலுமே பட்ஜெட் என்பது தலையாய தடைக்கல்லாய் இருந்திருக்குமோ, மூன்று மருத்துவமனைகள், ரோடுகள் இவைகளுக்குள் மட்டுமே காட்சிகள் நடக்க வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு காட்சிகள் எழுதத் துவங்கியிருப்பார்களோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.

காதல் தோல்வி தவிர்த்து மற்ற இரண்டு கதைகளுமே உயிருக்கு உயிரானவர்களை இழப்பது தொடர்பான வலியைப் பேசும் கதைகள்.  ஆனால் அந்த இரு தம்பதிகளின் பிணைப்பும் பாசமும் எப்படிப்பட்டது என்பதற்கான காட்சிகள் ஏதுமின்றி அவை வசனங்களில் கடப்பதாலோ என்னவோ அந்த இழப்பின் வலியை நம்மால் உணரவே முடியவில்லை.

காதல் தோல்வி ஜோடிக்கு ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி இணை,  முதிர்ந்து கனிந்த காதலுக்கு டெல்லி கணேஷ், லீலா சாம்சன் இணை,  இளம் கணவன் மனைவிக்கு வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் இணை. இந்த மூன்று இணைகளில் அதிகமாக நம்மை ஈர்ப்பது சீனியர்ஸ் அன்பு தான். லீலா சாம்சன் சஞ்சு சாம்சன் போல் தடுமாறாமல் அடித்து ஆடுகிறார்.  உணர்வுகளை உடல்மொழியில் படுக்கையில் படுத்தவாறே அழகாக கொண்டு வருகிறார்.  டெல்லி கணேஷ் நன்றாக நடித்திருக்கிறார் என்பது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதற்கு இணையானது.  இந்த இணையின் இன்னுமொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் அவர்கள் இருவரின் குரலிலும் இளையோடும் அந்த முதுமையின் தொய்வு. லீலாவின் குரலில் சற்றே கம்பீரம் தொனித்தாலும் அதையும் ரசிக்க முடிகிறது.

இவர்களுக்கு அடுத்ததாக ஸ்கோர் செய்வது வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம் இணை தான்.  தனக்கு மீள முடியாத நோய் இருக்கிறது என்பதை கேட்கும் அந்த நொடியில் அபிராமி வெங்கடாசலத்தின் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் அத்தனை வெம்மை, அதே வெம்மை உடற்கழிவுகள் உடை நனைத்து வெளியேறும் போதும்.  வினோத் கிஷன் அபிராமியின் அப்பாவை சந்திக்கும் இடத்திலும் டெல்லி கணேஷுடன் உரையாடும் இடத்திலும் இயல்பாகத் தெரிகிறார்.

நன்றாக நடிப்போம் என்பதை ஏற்கனவே நிருபித்துவிட்ட அம்மு அபிராமிக்கும் ஆதித்யாவிற்கு இங்கு நடிப்பதற்கு பெரிதும் வாய்ப்பில்லாத கதாபாத்திரம். கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறார்கள்.

சார்லஸ் தாமஸின் ஒளிப்பதிவிலும், R2bros –ன் இசையிலும் குறையில்லை.  வினோத் சென்னியப்பன் தயாரித்திருக்கிறார்.  ஏ.எம்.ஆர் முருகேஷ் இயக்கி இருக்கிறார்.

”மனைவிங்குறவ சில கடவுளுக்கே கிடைக்காத வரம் “ – வான் மூன்று- வின் ஒற்றை நிலா

“ 25 வயசுல வர்றது இல்ல; 65 வயசுல எது ஞாபகம்  இருக்கோ அதுதான் காதல்” –   வான் மூன்றின் ஒற்றை நட்சத்திரம்.

இவை தவிர்த்து மூன்று வானும் வெறுமையாய் இருக்கின்றன.  வெறுமையான மேகங்கள் அற்ற வானம் நீலம் பாய்ச்சி வெகு அழகாய் இருக்கும்.  அந்த அழகு இந்த மூன்று வானில் ஒன்றில் கூட இல்லாதது தான் இந்த வானங்களின் கறை.