32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“வதந்தி 2: உண்மையைத் தேடி” – சசிகுமார்

Dinesh R சேலம் Published: 01/08/2026 3 நிமிட வாசிப்பு Updated: 04/08/2026 OTT
எழுத்து அளவு:

ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி இணை தயாரித்துள்ளனர். குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீண்டுவரும் உணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்ட பரபரப்பான மர்மக் கதையாக உருவாகியுள்ள வதந்தி சீசன் 2, ஆகஸ்ட் 7 அன்று வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸில் சசிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யஷ்வந்த், அனகா மாருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அமேஸான் ப்ரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்தியேகமாக வதந்தி ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. இத்தொடரின் ட்ரெய்லர் இன்று வெளியானது.

மதுரையின் செழுமையான கலாச்சாரப் பின்னணியில், பாரம்பரியமும் புலனாய்வும், ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணியில் கதை நகர்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் நடைபெறும் இடத்தில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்படுவது, நேர்மையும் விடாமுயற்சியும் கொண்ட காவல் அதிகாரியான SI மூசா ரஸாவை, ‘மணி’ என்ற மர்மமான கைதியைப் பற்றி விசாரணையைத் தொடங்குகிறார். ஆரம்பத்தில் சாதாரண கொலை வழக்காகத் தோன்றும் இந்த விசாரணை, பின்னர் பொதுமக்களின் பார்வை, ஊடக பரபரப்பு, அரசியல் மற்றும் மனித பலவீனங்கள் ஆகியவற்றுடன் மோதும் சிக்கலான பயணமாக மாறுகிறது. மூசா உண்மையைத் தேடி ஆழமாகச் செல்லும் போது, புதைக்கப்பட்டிருந்த பல ரகசியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்படுகின்றன. குற்றவுணர்வு, ரகசியங்கள், வதந்திகள் மற்றும் மீட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தப் பரபரப்பான கதை, உண்மை என்பது முதலில் தோன்றுவது போல எளிதானதல்ல என்பதை உணர்த்துகிறது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், “வதந்தி சீரிஸின் மையக் கருத்து எப்போதும் நாம் எதை நம்புகிறோம், எத்தகைய சங்கடமான உண்மைகளை நாம் புறக்கணிக்கிறோம் என்பதைக் கேள்விக்குட்படுத்துவதாகவே இருந்துள்ளது. முதல் சீசனுக்குக் கிடைத்த ரசிகர்களின் அன்பும் விமர்சகர்களின் பாராட்டும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதுவே இந்த அடுத்த அத்தியாயத்தை உருவாக்க வழிவகுத்தது. இரண்டாவது சீசனில், ஒரு குற்றத்தைக் கண்டுபிடிப்பதைத் தாண்டி, அதிகாரம், மௌனம் மற்றும் ஆழமாக வேரூன்றிய அமைப்புகள் நீதியைப் பற்றிய நமது பார்வையை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை ஆராயும் மர்மக் கதையை உருவாக்க விரும்பினேன். மதுரையைக் கதைக்களமாகத் தேர்வு செய்தது, கலாச்சார வளமும் உணர்ச்சிப் பூர்வமான சூழலையும் கதைக்கு வழங்கியது. இந்த மர்மப் பயணத்தை ரசிப்பதோடு, தொடர் முடிந்த பிறகும் அது எழுப்பும் கேள்விகளை பார்வையாளர்கள் சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

M.சசிகுமார், “மூசா ரஸா கதாபாத்திரத்தில் என்னை மிகவும் ஈர்த்தது அவரது அசைக்க முடியாத நேர்மையே! உண்மையின் அடிப்படையில் அமைந்த நீதியே உண்மையான நீதி என்று நம்பும் மனிதர் அவர். அதற்காகத் தனிப்பட்ட இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், உண்மையைத் தேடுவதை அவர் நிறுத்தமாட்டார். காவல்துறை சீருடையின் பின்னால் இருக்கும் மனிதனை—அவரது அமைதியான மன உறுதி, பலவீனங்கள் மற்றும் அவரது நம்பிக்கைகளை சோதிக்கும் ஒழுக்கப் போராட்டங்கள ஆராய்வதே எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. விசாரணையின் ஒவ்வொரு கட்டமும் அவரைக் கடினமான முடிவுகளை எடுக்க வைக்கிறது. அதனால் இது ஒரு மர்மக் கதையாக மட்டுமல்ல, ஆழமான உணர்ச்சிப் பயணமாகவும் மாறியுள்ளது. மூசா ரஸாவின் பயணத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிணைந்து, அவருடன் சேர்ந்து இந்த மர்மத்தை அவிழ்த்து, இறுதி உண்மை வெளிப்பட்ட பிறகும் அந்தக் கதை அவர்களுடன் நீடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.