
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரலாற்றில் வைரமுத்து நிகழ்த்தியிருப்பது யாரும் எட்டியிராத சாதனை. இனியும் யாரும் எட்டமுடியாத சாதனை. வைகறை மேகங்களில் வெளிப்பட்ட சொல்லாட்சி புதுப்புது பிரவாகமெடுத்து பாடல்கள் வழியே இன்று வரையிலும் நின்று ஆட்சி செய்கின்றன.
‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’-இல் அடியெடுத்து வைத்த வைரமுத்துவின் சந்தப்பயணம் எப்படிப் பார்க்கினும் மலைக்கவே வைக்கிறது. சங்க இலக்கியங்களின் உள்ளடக்கங்களைப் பாடல்களில் புகுத்திய வல்லமையை எப்படித்தான் மனிதர் வகுத்தாரோ! ‘ஆயிரம் நிலவே வா’ படத்தில், ‘அந்தரங்கம் யாவுமே’ எனத் துவங்கும் பாடலில், ”பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிந்தேன், ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிந்தேன்” என ஒரு குறுங்கவிதையின் குறும்பு அவ்வரிகளில் கொப்பளிக்கும்.
தத்துவப் பாடல்களில் வைரமுத்து கொடி நாட்டவில்லை என்ற விமர்சனத்தை வைரமுத்து காலத்திய சினிமாக்களின் வணிகத்தேவை. மற்றும் ரசனை மாற்றம் ஆகியவற்றோடு ஒப்பிட்டு அணுகவேண்டும். இருந்தும் கிடைத்த வாய்ப்புகளில் சில வரிகளை அள்ளித் தந்துள்ளார். ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் ‘கனவு காணும் வாழ்க்கையாவும்’ என்பவர், ‘உடம்பு என்பது உண்மையில் என்ன? கனவுகள் வாங்கும் பை தானே!” என்பார். மூத்தோர் கூறிய கருத்தென்றாலும் அதைச் சீராக அடுக்கியிருப்பார் இந்தப் பாட்டில்.
மணிரத்னத்திற்கு ‘இதயக்கோயில்’ படத்தில் வைரமுத்து எழுதிய முதல்பாட்டில் சோகம் போட்டுத்தாக்கும். ராகதேவன் இளையராஜா சோககீதத்தில் மெளனம் படைப்பார். வைரமுத்து அந்தப் பாட்டில் மெளனம் உடைப்பார். ‘நான் பாடும் மெளனராகம் கேட்கவில்லையா?’ மெளனமொழி யாருக்கு கேட்கும்? கேட்காது தான். ஆனால் காதலிக்குக் கேட்கும். அதற்குத்தான் விரக்தியான வினா! “கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன், வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்” என்ற வரிகள் காதல் தோல்வியாளர்களின் நிரந்தர முகாரி.
மண் சார்ந்த பாடல்கள் என்றால் ராஜாவும் முத்துவும் கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கி விடுகிறார்கள். ‘’ரத்தினமே முத்தம் வைக்கவா? அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா?” என்ற ‘முதல் மரியாதை’ படத்தில், ‘அந்த நிலாவத்தான் கையில் புடிச்சேன்’ பாடலில் சந்தத்தை மதித்து வெடித்துப் பொங்கும். வைரமுத்து வரிகள் திரும்பத் திரும்ப ரசிக்க வைக்கும்! வைரமுத்துவிற்கு முதல் தேசிய விருது இந்தப்பாடலுக்குத் தான்.
‘கொடியிலே மல்லிகைப் பூ’ எனத் துவங்கும் பாடலில் நான் அடிக்கடி ரசிக்கும் வரிகள்,
“மனசு தடுமாறும்.. அது
நினைச்சா நெறம் மாறும்..
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்
நித்தம் நித்தம் ஒன் நினைப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்”
‘கடலோரக் கவிதைகள்’ படத்தின் பிரதான கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கச்சிதமாக பாட்டில் வடித்த விதம் அடடா!
‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில், ‘கட்டிக்கரும்பே கண்ணா’ பாட்டில், ”சிப்பிக்குள் முத்து வந்தாலும்- அது சிப்பிக்குச் சொந்தம் ஆகாது” என்ற வரிகள் சந்த இலக்கியம் கொண்டது. ”நதியோடு போனால் கரையுண்டு விதியோடு போனால் கரை ஏது?” எனும் வரிகள் வைரமுத்து தந்தது.
மகள் பிறந்ததும் மனைவி இறந்தாள் எனும் விசயத்தை தந்தை மகளுக்குச் சொல்கிறார். “ஆம் மகளே நீ கண் திறந்தாய்.. அவள் கண் மறைந்தாள். என் வானத்தில் விடிவெள்ளி எழுந்தது.. வெண்ணிலவு விழுந்தது”. இந்த வரிகளில் கண்கள் அகல மறுத்தன. ‘படம் அன்புள்ள அப்பா’, சங்கர் கணேஷ் இசையில் உருவான தரமான பாடலிது.
”கஞ்சியில்லை என்பதால் காதல் என்ன மாறுமா?
மெத்தையில்லை என்பதால் முத்தம் என்ன கசக்குமா?”
சத்திய வார்த்தை அன்றோ?
‘பாட்டி சொல்லத் தட்டாதே’ படத்தில், ‘வெத்தல மடிச்சு கொடுக்க ஆசையா?’ என்ற பாடலில் இடம் பெற்ற சரணவரிகள் இவை.
‘சிகரம்’ படத்தில் எஸ்பிபி இசையமைத்துப் பாடிய, ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே, வானம் விட்டு வாராயோ’ எனத் துவங்கும் பாடல்வரிகள் வைரமுத்துவின் உச்சம் என்பேன்.
“பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரிந்து விட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீயிருந்தால்
சொல்லிக் கொள்ள வாழ்க்கையில்லை”
என்ற முதல் சரணத்தில் அடியேன் சரணாகதி அடைந்துவிட்டேன். அதே படத்தில் ‘அகரம் இப்போ சிகரம் ஆச்சு’ என்ற தன்னம்பிக்கை பாடலில் சில நம்பிக்கை வரிகள்,
“தலைசாய்க்க இடமா இல்லை
தலைகோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை
இளைப்பாறு பரவாயில்லை”
எல்லாத் துயருக்கும் ஓர் முடிவுரை உண்டுதானே!
‘ஏரி நீரில் நீந்தும் ஈரமான முல்லையே
மீன்கள் செய்த புண்ணியம் ஆண்கள் செய்யவில்லையே”
என்ற ‘அமராவதி’ படப்பாட்டில் வரும் வரிகள் இவை. லயத்துடன் ரசனை.
ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி வீட்டிற்குச் சென்ற சிலர் பிரபுவை எங்கே எனக் கேட்டிருக்கிறார்கள். “அவன் உடலை இளைக்க வைக்க குதிரை சவாரி போயிருக்கான்” என்று சொன்னார் சிவாஜி. உடனே, “உடம்பு இளைச்சுடுச்சா?” என்று வந்தவர்கள் கேட்டதுக்கு, ”ஆமா ஒடம்பு இளைச்சிடுச்சு குதிரைக்கு” என்று சிவாஜி சொல்ல, ‘அன்னை இல்லம்’ எங்கும் சிரிப்பலை. இந்தச் சம்பவத்தை ‘டூயட்’ பட்த்தில் இடம் பெற்றுள்ள கத்திரிக்கா பாட்டில் வைரமுத்து சேர்த்து விதம் நகை கொள்ள வைக்கும்.
‘தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு’ என்ற பாட்டு ‘டூயட்’ பட்த்திற்குப் பொருந்துவதைப் போலவே வைரமுத்துவிற்கும் பொருந்தும்.
ஏ.ஆர். ரகுமான் வந்த பின் வைரமுத்துவின் தமிழ் மேலும் வலுபெற்றது எனலாம். குட்டிக்குட்டி கவிதைகளைப் பாடலுக்குள் புகுத்தி அசத்தினார். ஓசை, ஒரே சீரான நடை என்பதை மாற்றி புதுதமிழ் விருந்து கிடைத்தது. இளையராஜா வைரமுத்து கூட்டணி வெண்ணிலவுக்கு ஒப்பானதென்றால், ஏ.ஆர்.ரகுமான் வைரமுத்து கூட்டணியும் வெண்ணிலவின் வீரியம் கொண்டவை தான். ‘ரோஜா’, ‘கிழக்குச் சீமையிலே’ துவங்கி ‘எந்திரன்’ வரை புகுந்து விளையாண்டார்கள். ‘மின்சாரக் கனவு’ படத்தில் இடம்பெறும் ‘அன்பென்ற மழையிலே’ எனத் துவங்கும் ஏசுபாடல், எதேச்சையாக வைரமுத்து சொல்லச் சொல்ல ரகுமான் பாடிப்பாடி கம்போஸ் செய்ததாம். கிறிஸ்துவப் பாடல்களில், ”கேளுங்கள் தரப்படும்” என்ற பழைய பாடலுக்குள் பின் இந்தப் பாடல் தான் அதிக கவனம் பெற்ற பாடல். ‘போர் கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ் மைந்தன் தோன்றினானே!’ உள்பட அந்தப் பாடல் வரிகள் அனைத்துமே சிலுவைக்கீரிடம் தான்.
‘சோனியா சோனியா’ பாடலில், “தட்டாமல் போனால் தங்கம் இல்லை, முட்டாமல் போனால் மோகம் இல்லை” என்று ஆணும்,
“காமத்தின் வாதத்தில் நியாயமில்லை
கன்னத்தின் காயங்கள் காதல் இல்லை” என்று பெண்ணும்,
சைவம் அசைவம் பற்றிப் பேசுவது சுவையான ரகம்.
ஆயிரம் பாடல்களை வாசித்துவிட்டு பிடித்தவற்றை எல்லாம் அடுக்குவது மிகவும் கடினம். 1200 பக்கங்கள் கொண்ட இந்தப் பாடல் நூல்,வருங்கால பாடலாசிரியர்களுக்கு பாடநூல்.
இயக்குநர் விவரிக்கும் பாடலுக்கான சூழலை மிக அழகாகப் பாடல் வரிகளில் விஸ்தரித்து வசீகரிக்கிறார் வைரமுத்து. பொதுவாக பல பாடல்களில் முதல் சரணத்திற்கும் இரண்டாம் சரணத்திற்குமான தொடர்ச்சி மிஸ் ஆகும். வைரமுத்து பாடல்களில் அதைப் பார்க்கவே முடியாது. கன்டென்டுக்குள் தான் வரிகள் விளையாடும். சங்க இலக்கியம், ராமாயணம், சித்தர் பாடல்கள், சைவ, வைணவ திருமுறைகள் என அனைத்தையும் உள்வாங்கி திரைப்பாடலுக்குள் தேர்ந்த சொற்கள் மூலமாக உலவ விட்ட திறம் பேராச்சரியம். எப்போதும் ட்ரெண்டில் இருப்பதிலும் வைரமுத்து சுகருக்கு நிகர். அறிவியல் தகவலும் அவர் பாட்டுக்குள் அருவியாய் வரும்.
20 நாட்கள் எடுத்துக் கொண்டு இந்த நூலை வாசித்து முடித்த போது இரண்டு விஷயங்கள் தோன்றியது. இளையராஜா, வைரமுத்து கூட்டணி இன்னும் நெடுங்காலம் நீடித்திருக்க வேண்டும். நாளைய வருங்காலம் கூட வைரமுத்துவின் தமிழைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
களங்கம் வந்தாலென்ன பாரு
அதுக்கும் நிலான்னு தான் பேரு
வைரமுத்து நிலா.
– ஜெகன் கவிராஜ்