
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பொழுது, சில படங்கள் பயங்கர ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு படமிது. மிகக் குறைவான பட்ஜெட், அறிமுக இயக்குநர் என்பதெல்லாம் மீறிப் படத்தின் முதல் ஃப்ரேமிலிருந்தே படத்தில் தெரியும் நேட்டிவிட்டி ரசிக்க வைக்கிறது.
வீட்டுக்கோ, ஊருக்கோ, எவருக்குமோ அடங்காத காலிப்பயல் முனியசாமி. சகோதரர்களான சன்னாசியும், வேலுவும் சொந்த சித்தப்பாவையே குத்திச் சாய்க்கும் சண்டியர்கள். அவர்களின் தங்கை தவமணிக்கு முனியசாமியை நிச்சயம் செய்கின்றனர். கல்யாணம் நின்று விட, முனியசாமிக்கும் சண்டியர்களான சகோதரர்களுக்கும் முட்டிக் கொள்கிறது. அதன் விளைவு மிகக் கொடூரமானதாய் இருக்கிறது.
மேலே சொல்லப்பட்ட ஒரு வரிக் கதைக்கருவைப் பார்த்தால் வன்முறைப்பகுதி என்ற பெயர் சரியானதாகப்படும். ஆனால், படத்தின் மிகப் பெரிய பலவீனமே அதன் தலைப்புத்தான். படத்தின் கன்டென்ட்டையும் கருவையும் சிதைக்கும் கொடுமையான வன்முறையைத் தலைப்பு இப்படத்திற்குச் செய்துள்ளது.
படம் மனிதர்களை நெருக்கமாக உணர்த்துகிறது. கிராமத்து மனிதர்களின் சலம்பல்; கேலி, கிண்டல், கோபம், வசை, வக்கணை முதலிய பேச்சுகள் என ரசிக்கப் படத்தில் ஏராளமாய் உள்ளது. ஊரே பெண் கொடுக்கும் நாயகனுக்கு, வேலம்மாள் எனும் பெண்மணி கண்ணீர் சிந்திச் சாமர்த்தியமாகப் பெண் பேசி முடிக்கும் லாகவம் அட்டகாசம். கதாநாயகனின் நண்பனும் சித்தப்பாவுமான சிவராமன், ‘கதாநாயகி படிச்ச பொண்ணுடா’ என ஏத்தி விடுவதும், ஆனால் அங்கே கதாநாயகி வீட்டிலோ, பாட்டியின் பேச்சும் செய்கையும் கலகலப்புக்கு உத்திரவாதமளிக்கிறது. படத்தின் முதற்பாதியின் கலகலப்புக்கு எளிய தோரணையான கிராமத்து மனிதர்களின் பேச்சு உதவுகிறது.
அனைவருமே புதிய மனிதர்கள். ஆனால் எவருமே அந்நியமாகத் தெரியவில்லை. முனியசாமியாக மணிகண்டனும், சகோதரர்கள் சன்னாசி, வேலுவாக NSK.J.மனோகராவும், ராஜாவும், நாயகி தவமணியாக ரஃபியா ஜாஃபரும் நடித்துள்ளனர். கதாநாயகனின் அம்மா சின்னத்தாயாக திண்டுக்கல் தனம், நாயகியின் அம்மா ‘உசிலை’ பாண்டியம்மாளும், சிவராமன் போன்ற கதாபாத்திரங்கள் அத்தனை பேருமே பிரமாதமாக நடித்துள்ளனர். கிராமத்தில் இருந்தே மனிதர்களைப் பிடித்து, அவர்களிடம் யதார்த்தமான நடிப்பை வாங்கியுள்ள இளம் இயக்குநர் நாகா எனும் நாகராஜ் ஆச்சரியப்படுத்துகிறார்.
முதல் பாதி தந்த தாக்கம் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். முதல் பாதியில் தெரிந்த மனிதர்களின் அசல் தன்மை, இரண்டாம் பாதியில் இல்லாதது காரணமாக இருக்கலாம். உடனிருக்கும் மனிதர்களின் வஞ்சம் சினிமாத்தனமான ட்விஸ்ட்டாகத் தனித்துத் தெரிகிறது. படத்தை வன்முறையில் முடித்துவிட்டு, அதன் பின் பெயர் போடும்பொழுது, கிளைக்கதையாக வரும் காவல்துறை அத்தியாயம், ‘அட!’ போட வைக்கிறது. எந்தவித அனுபவமும் இல்லாமல், யாரிடமும் பணிபுரியாமல், இப்படியொரு படம் எடுக்க, சினிமா எனும் ஆர்ட் ஃபார்மின் மீதுள்ள காதலே காரணம் என்றாகிறது. நல்ல பட்ஜெட்டும், மக்களுக்கு அறிமுகமான நடிகர்களும் கிடைத்தால், மக்கள் கொண்டாடும் படத்தை நாகா எடுப்பார் எனும் நம்பிக்கை எழுகிறது.