தெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்?
ஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை.
ஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. ‘நேரத்துக்கு ஷூட்டிங் போவது’ முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வைப்பதோடு, அந்த சீனைத் தனதாக்கிக் கொள்கிறார் சிம்பு. உடலளவில் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் சிம்பு இருக்கலாம் என சில ஃப்ரேமில் யோசனை போவதைத் தடுக்க முடியவில்லை.
கேத்ரின் தெரசாவை சிம்புக்கு ஜோடியாகவே பொருத்திப் பார்க்க முடியவில்லை. ஆனால் கேத்ரின் தெரசாவை மஹத்துக்கு ஜோடி என்கின்றனர். வழக்கமான கதாநாயகியாக, நாயகனுடன் சண்டை போடவும், காதலிக்க மட்டும் மேகா ஆகாஷ். ஹிப்ஹாப் தமிழாவின் இசையிலும், கோபி அமர்நாதின் ஒளிப்பதிவிலும் பாடல்கள் எல்லாம் வண்ணமயமாக உள்ளன. ‘வாங்க மச்சான் வாங்க’ என்ற பாடல் பார்க்கவும் கேட்கவும் ரசனையாக உள்ளது.
அகலிகை, இந்திரன், கெளதம ரிஷி என்று சிம்பு, யோகி பாபு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா மாறி மாறிப் போடும் கட்டில் டிராமா நகைச்சுவைக்குப் பதில் கடியைக் கிளப்புகிறது. படத்தின் நீளத்தை அதிகரிக்க மட்டுமே அக்காட்சி பயன்படுகிறது. தெலுங்கு தேசத்தில், இந்திரன் – அகலிகை – கெளதம ரிஷி கதை கொஞ்சமேனும் பார்வையாளர்களுக்குப் பரீட்சயமாய் இருக்கும். ஆனால் இங்கு? அந்தக் கதை தெரியாமல், இந்தக் காட்சியைப் பொருத்திப் பார்ப்பது மிகச் சிரமம். அப்படிக் கதை தெரிந்தாலுமே கூட அந்தக் காட்சி அறுவையாகத்தான் இருக்கிறது.
நாயகனின் அத்தையாக ரம்யாகிருஷ்ணன், மாமாவாக பிரபு, தாத்தாவாக நாசர், அப்பாவாக சுமன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளாது. ஆனால், ஸ்க்ரீனில் அத்தனை பேரும் ஃபேட் அவுட் (fade out) போல் தான் வந்து செல்கின்றனர். சிம்பு மட்டுந்தான் படம் நெடுகேவும். விடிவி கணேஷ், ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன் என பலர் இருந்தும், சுந்தர்.சி-இன் வழக்கமான கலகலப்பு படத்தில் மிஸ்ஸிங். சுந்தர்.சி படமாகவும் இல்லாமல், சிம்பு படமாகவும் இல்லாமல், தெலுங்கு படத்தின் ரீமேக் போலவும் இல்லாமல் உருமாறியுள்ளது படம். குடும்ப ஒன்றுகூடலை மையப்படுத்திய படமென்பதும் ஆறுதலளிக்கும் சங்கதி. போர் அடிக்காமல், மன உளைச்சலை ஏதும் ஏற்படுத்தாமல், ஜாலியாய்ச் செல்லும் மிதமான நகைச்சுவை படம்.