Shadow

சகா விமர்சனம்

Movie review - Sagaa

சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ்.

சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை.

ஷபீரின் இசையில், ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆரோஹி. ஸ்டைலிஷான மேக்கிங்கால் ஃப்ரேம்கள் கவரும் வண்ணம் இருந்தாலும், கனெக்ட்டிங் டாட்ஸ் மிஸ் ஆவதால், படம் கொஞ்சம் அந்நியமாகவே இருக்கிறது.

சரண் அவரது ஒயிலான தலைமுடியோடு மனதில் பதிகிறார். சரணுக்குக் கிட்டத்தட்ட மாஸ் ஹீரோ வேடம் என்றே சொல்லவேண்டும். அவரது உயிர் நண்பராக பகோடா பாண்டியும், சிறையில் அறிமுகமாகும் நண்பராக பசங்க கிஷோரும் நடித்துள்ளனர். பசங்க படத்தின் வில்லனான ஸ்ரீராமும் இப்படத்தில் உண்டு. இவர்களுடன் வில்லனாக பாண்டியராஜன் மகன் ப்ரித்வி நடித்துள்ளார்.

சிறையில் இருந்து தப்பிக்கும் பசங்களைத் தேடும் காவல்துறை அதிகாரியாக சாய் தீனா மிரட்டுகிறார். அவரது முரட்டு உருவமும், அவர் காட்டும் பாவனைகளும், அவரது ஈரமில்லாச் சுபாவமும், இப்படியொரு அதிகாரி சீர்திருத்த பள்ளியில் இருந்து விடக்கூடாதென மனம் பதைபதைக்கிறது. கிஷோரின் காதலை இடைசொருகலாய் வைக்காமல், நட்பை இன்னும் அழகாய் ஆழமாய்க் காட்டியிருக்கலாம். கிஷோரின் காதலி பூஜாவாக வரும் நீரஜா பாத்திரமும் மனதில் பதியவில்லை. ஜென்னி அக்காவாக வரும் காயத்ரி கிருஷ்ணாவின் பாத்திரம் நன்றாக இருந்தாலும், அந்தக் கிளைக்கதை க்ளைமேக்ஸ் முன் வருவதால் அவ்வளவு அழுத்தமாக மனதில் பதியவில்லை. இந்தளவு நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்குமளவு ப்ரித்வியின் முகம் பொருந்தவில்லை.

சரணின் ராசிக்கு, யாரேனும் ஓர் உற்ற நபர் கிடைத்துக் கொண்டே உள்ளனர் என்பதுதான் படத்தின் ஒரே ஆறுதல்.