Shadow

வரலாறு முக்கியம் விமர்சனம்

கேரளப் பெண்ணைக் காதலித்து மணம் முடிப்பதை வரலாறென்றும், அது பதியப்படுவது முக்கியமென்றும் கருதி ஒரு படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ராஜன்.

யமுனா, ஜமுனா என்ற கேரளத்துச் சகோதரிகள், கார்த்திக்கின் தெருவிற்குக் குடி வருகின்றனர். தங்கை ஜமுனா கார்த்திக்கைக் காதலிக்க, கார்த்திக்கோ ஜமுனாவை விட அழகாக இருப்பதாக நினைக்கும் யமுனாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். அக்கேரளத்துப் பெண்களின் அப்பாவிற்கு, மகள்களை துபாய் வாழ் மணமகனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஆசை. அவரது எதிர்ப்பை மீறி, கார்த்திக் தன் காதலில் எப்படி வாகை சூடுகிறான் என்பதே படத்தின் கதை.

நாயகனை யூ-ட்யூபராகக் காட்டினாலும், வேலை வெட்டியில்லாதவர் கணக்கிலேயே அவரது தந்தை கே.எஸ்.ரவிக்குமார் போல் வைக்க வேண்டியுள்ளது. அழகான பெண்ணைக் கண்டதும் காதல், பின் அவள் ஒத்துக் கொள்ளும்வரை இடைவிடாது துரத்திக் கொண்டே இருப்பதென இயக்குநர் ராஜேஷின் எஸ்.எம்.எஸ். ஹேங்ஓவரில் இருந்து வெளிவராமல், இக்கதைக்கு ஓகே சொல்லியுள்ளார் ஜீவா.

காஷ்மீரா, பிரக்யா என இரண்டு கதாநாயகிகளும் நன்றாக நடித்திருந்தாலும், நாயகனால் காதலிக்கப்பட மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் தந்தையாக மலையாள நடிகர் சித்திக் நடித்துள்ளார். அவரது நடிப்புக்குத் தீனி போடுமளவு காட்சிகள் இல்லாவிட்டாலும், புது வீட்டிற்குக் குடியேறியதும் அவரது மனைவியுடன் பேசும் வசனங்களுக்கு சிரிப்பொலி எழுகிறது திரையரங்கில். ஆங்காங்கே சில வசன்ங்கள் இப்படிக் கிச்சுகிச்சு மூட்டினாலும், ரொமான்ட்டிக் காமெடி படமாகச் சோபிக்கவில்லை.

முழுப் படத்தினை ஓரளவேனும் காப்பாற்றுவது விடிவி கணேஷ்தான். ஜீவா நன்றாக நடித்திருந்தாலும், காட்சிகளிலோ, திரைக்கதையிலோ புதுமை இல்லாததால், அவரது நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகிவிடுகிறது. சுந்தர். சி பாணி க்ளைமேக்ஸ் போல், திருமண மண்டபத்தில் நடக்கும் கலாட்டா ரசிக்க வைக்கிறது.