Shadow

வாஸ்கோடகாமா விமர்சனம்

 

வாஸ்கோடகாமா என்பது சிறைச்சாலையின் பெயர். நல்லது செய்பவர்களையோ, கெட்டது நடப்பதைத் தடுப்பவர்களையோ கைது செய்து சிறையில் தள்ளிவிடும் அதிசய யுகத்து சிறைச்சாலை அது. நல்லவர்கள் மிகவும் அருகிவிட்ட கலியுகத்தின் பிந்தைய காலமாம். சிறைக்குள் ஏதேனும் அடிதடியில் ஈடுபட்டு எவரையேனும் காயப்படுத்தினாலோ, கொலை செய்தாலோ விடுதலை செய்து விடுவார்கள்.

அநியாயங்கள் மிகுந்து கிடக்கும் உலகில், கண் முன் கெட்டதைக் கண்டால் பொங்கியெழும் நாயகன் வாசுதேவன் பல சிக்கல்களை எதிர்கொள்கிறான். நல்லதைத் தட்டிக் கேட்டால் சிறையில் அடைத்துவிடுவார்கள். ஒவ்வொரு முறையும் கைதாகும்போது, அவரது அண்ணன் மகாதேவன் பணம் கொடுத்து மீட்கிறார். அந்த அண்ணனின் சுண்டு விரலில் காயம் ஏற்பட, நரக (Naraka Multispeciality Hospital) மருத்துவமனைக்குச் செல்கிறார். இதயத்தில் பிரச்சனை என ஐ.சி.யூ.வில் சேர்த்து அனுப்பி வைத்துவிடுகின்றனர். அறமற்ற மருத்துவமனைக்கான நகைச்சுவை சித்தரிப்பாம். இடைவேளையின் பொழுது, இறந்த மகாதேவன் மாறுவேடத்தில் வருகிறார். எங்கிருந்து வந்தார், ஏன் வந்தார், எதற்கு வந்தார், வந்தது மகாதேவன் தானா என்பதைப் பார்வையாளர்களுக்கு முடுவுக்கு விட்டுவிடுகின்றனர். படத்தில் பலதும் இப்படியாகக் காண்ணாமூச்சி விளையாடுகிறது.

வாசுதேவனைக் கெட்டவனென நினைத்து தன் மகளைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார் ஆனந்த்ராஜ். வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் என ஏமாற்றும் அபுபக்கர் ஏஜென்சி வைத்திருக்கார் ஆனந்த்ராஜ். தனக்கு மருமகனாக வரப் போகிறவரும் கடைந்தெடுத்த கெட்டவனாக இருக்கவேண்டும் என நினைக்கிறார். ஆனால் விதி நாயகனை நல்லவனென அடையாளம் காட்டிவிட, அவர் வாஸ்கோடகாமாவில் சிறைப்படுகிறார்.

இப்படி ஒரு வரிக்கதையாகச் சொல்லிப் பார்க்கக் கேட்க நன்றாக சுவாரசியமாக இருந்தாலும், ஒரே ஒரு காட்சியைக் கூட ரசிக்கும்படி எடுத்துவிடக் கூடாதென ஒவ்வொரு சட்டகத்திலும் மெனக்கெட்டுள்ளனர். ஃபேன்டசி என முடிவான பின், அந்த உலகத்துக்கான, யுகத்துக்கான விதிகளைத் தெளிவாகக் கட்டமைக்கவேண்டும். ஆனால் திரைக்கதை எந்த அக்கறையும் இன்றி பார்வையாளர்களை ஒரு வழி பண்ணி விடுகிறது. சுவாரசியமான கருவை வைத்துக் கொண்டு ஒப்பேற்றக் கூடக் குறைந்தபட்சமான திரைக்கதை ஞானம் அவசியமாகிறது. இதை ஒரு எக்ஸ்பீரிமென்டல் படமாக எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் RGK. 2K கிட்ஸ்க்கு நிச்சயம் தனது படம் பிடிக்குமென்ற அவரது நம்பிக்கை பலிக்கட்டும்.

காவல்துறையினரைக் கிட்டிப்புள் விளையாட்டில் வெல்கிறார் வாசுதேவனாக நடித்துள்ள நகுல். நாயகனுக்குரிய ஒரே ஒரு காட்சி படத்திலேயே அது மட்டுந்தான். அதையும் நகைச்சுவைக் காட்சியாகப் பாவித்துள்ளார் இயக்குநர். ஆனால் அதையும் நகைச்சுவையாக எடுக்காமல் ரொம்பவே கடுப்பேற்றியுள்ளார். படத்தில் வில்லன் கோவர்தனாக வரும் வம்சி கிருஷ்ணாவின் கதாபாத்திரம் அளவிற்குக் கூட நாயகனின் பாத்திரத்தை வடிவமைக்கவில்லை இயக்குநர். நாயகனே பரவாயில்லை என்று சொல்லுமளவிற்கு நாயகி அர்த்தனா பினுவை ஒரு கெளரவத் தோற்றம் அளவுக்குக் கூடப் பயன்படுத்தவில்லை. படத்தில் ஒரு அதி பயங்கரமான ட்விஸ்ட் உள்ளது. ஸ்பாய்லர் பிடிக்காதவர்கள் அடுத்த வரியைப் படிக்கவேண்டாம். படத்தின் நாயகன் நகுல் என அனைவரையும் நம்ப வைத்துவிட்டு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்க்கு அந்தப் பெருமையைத் தந்துள்ளார் இயக்குநர். இந்த விஷயம் நகுலுக்கே தெரியாத என்பதுதான் இயக்குநரின் சாமர்த்தியம்.