ஐந்து நண்பர்கள் ட்ரெக்கிங் போகக் காப்புக்காட்டுக்குள் செல்கின்றனர். உடன் வந்த அந்த ஊரைச் சேர்ந்த வனக்காப்பாளர் பேச்சை மீறி, தடை செய்யப்பட்ட பகுதிகளை ஆராயும் ஆர்வத்துடன் எல்லை மீறுகின்றனர். அவர்கள் மாயமான் காட்டின் அமானுஷ்யத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
பேய்ப்படங்களை நகைச்சுவையாக்கியும், ஒரு டெம்ப்ளட்டிற்குள் பழிவாங்கும் கதையாகச் சுருக்கியும் வைத்துவிட்டனர் கோலிவுட்டினர். ஹோலிவுட்டும் தேவைக்கு அதிகமான பேய்ப்படங்கள் எடுத்ததன் காரணமாகப் புதிதாய் வரும் பேய்த் திரைப்படங்களில் எந்த சிலிர்ப்பையும் உணராமல் தேமோவென அமர்ந்திருக்கின்றனர் பார்வையாளர்கள். பேச்சி இத்தகைய வகைமையில் இருந்து விலகி, ஒரு சீரியஸான அமானுஷ்ய படத்திற்கு உத்திரவாதம் அளிக்க முயன்று உள்ளது.
பேச்சி என்ற சூனியக்காரியை, ஓர் அச்சுறுத்தும் பொம்மையில் ஆவாஹனம் செய்து, அப்பொம்மையை மரத்தில் ஆணியாலடித்து விடுகின்றனர். கொல்லி மலையின் அரண்மனைக்காட்டிற்குச் சுற்றுலா வரும் ஓர் இணை, தெரியாமல் மரத்தில் இருந்து ஆணியை எடுத்துவிட, சாகாவரம் பெற்ற சூனியக்காரியான பேச்சியின் கட்டுப்பாட்டிற்குள் அக்காடு செல்கிறது.
ஆணி அடிக்கப்பட்ட பின், பேச்சியின் சக்தி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் செல்லுபடியாகுமெனச் சொல்கின்றனர். அந்த எல்லையைத் தடை செய்யப்பட்ட பகுதியாகப் பாவித்து உள்ளூர் மக்கள், அப்பக்கம் போகவே அஞ்சுகின்றனர். ஆணி எடுக்கப்பட்ட பின்பும், சத்தியத்திற்குக் கட்டுபட்டது போல் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே அதகளம் செய்கிறார் பேச்சி.
ஆட்டுக்குட்டியை கழுகு தூக்குவது போல் அசால்ட்டாய் பலி வாங்குகிறது பேச்சி. எனினும், படத்தின் சுவாரசியம் என்பது சிக்கியவர்களின் மனநிலையைக் குழப்பி அச்சத்தை ஏற்படுத்தி, அதன் பின்பே அவர்களை இலகுவான இரையாக்குவதுதான். கதாபாத்திரங்களின் மனநிலை எப்படி, எதனால் குலைகிறது என்பதிலேயே இப்படம் தனித்துத் தெரிகிறது.
மனித சக்திக்கு மீறிய அமானுஷ்யங்களினால் மனிதன் அலைக்கழிக்கப்பட்டாலும், என்னத்தையாவது செய்து அதிலிருந்து மீண்டுவிடுவான். எண்பது வருடங்களுக்கு முன் அப்படித்தான் பேச்சியைச் சாமர்த்தியமாக முடக்குகின்றனர். இந்தப் பாகம் பேச்சியின் கோலூன்றி பலியிடும் comeback-ஐ மட்டுமே சொல்கிறது. ‘பேச்சி 2’ இல் மனிதர்கள் உஷாராகிவிடுவார்கள் என நம்புவோமாக!
தனக்கு எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்தில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நெடுமாறன் கவனிக்க வைக்கிறார். படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் இவரே. கதாபாத்திரங்கள் மனம் கலங்கியிருக்க, பின்னணியில் நிழலாகத் தெரியும் பேச்சியின் நிழல் உருவத்தில் சலசலக்கும் பேச்சியின் உடையும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு கச்சிதமாக உடையினை வடிவமைத்துள்ளார். தான் என்ன செய்யவேண்டுமென பிறர் சொல்வதை வெறுக்கும் கதாபாத்திரத்தில் காயத்ரி சங்கர் நடித்துள்ளார். அந்நண்பர்கள் குழுவை ஒருங்கிணைக்கும் நபராகவும், காயத்ரியின் காதலராகவும் தேவ் ராம்நாத் நடித்துள்ளார். படத்தின் நாயகனாக, வனக்காப்பாளர் பாத்திரத்தில் நடித்துக்கும் பாலசரவணன் நடித்துள்ளார். காயத்ரி ஷங்கர், தேவ் ராம்நாத் போன்ற அறிமுகமான முகங்கள் இருந்தாலும், படத்திற்குள் பார்வையாளர்களைக் கட்டி வைப்பது பாலசரவணன்தான். அவரது வழக்கமான தொனியையோ, நடிப்பையோ கொண்டு வந்துவிடாமல் படத்திற்கு என்ன தேவையோ அப்படி உருமாறியுள்ளார்.
மலைக்காடு எனும் ஈர்ப்பிற்குத் தீனி போட்டுள்ளார் ஒளிப்பதிவாளர் பார்த்திபன். அமானுஷ்யத்தைத் தக்கவைக்கும் ராஜேஷ் முருகேசன் வழங்கியுள்ளார். படத்தின் அமானுஷ்யத்திற்கு மிக முக்கிய காரணம் கலை இயக்குநர் குமார் கங்கப்பனின் கைவண்ணமே. திரைக்கதையில் தவிர்க்க வேண்டியவற்றில் இருக்கும் இயக்குநர் B. ராமச்சந்திரனின் தெளிவு நம்பிக்கை அளிக்கிறது.