சென்னை மீது ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்ற தகவலால் பதற்றத்துக்கு உள்ளாகின்றனர் மக்கள். கடலுக்குள் சென்று தப்பிக்கலாம் என குமரனின் துடுப்புப்படகில் சிலர் ஏறிக் கொள்கின்றனர். கரையில் இருந்து 12 மைல் தொலைவு கடலுக்குள் சென்று விட்டால், ஆங்கிலேயரின் ரோந்து படகு தொல்லையில் இருந்தும், வானில் இருந்து குண்டு வீசப்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்து விடலாம் என்பது அவர்கள் நம்பிக்கை.
அத்துடுப்புப்படகில் நூலகர் முத்தையா, மயிலாப்பூர்வாசி நாராயணன், அவரது மகள் லட்சுமி, பாலக்காட்டு முகமது ராஜா, விஜயவாடா விஜயா, அவரது மகன் மகேஷ், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட லால் சேட்டு, துடுப்புப்படகுக்காரர் குமரன், குமரனின் பாட்டி முத்துமாரி ஆகியோர் உள்ளனர். பாதி வழியில் இர்வின் எனும் வெள்ளைக்காரரும் அப்படகில் அழையாத வேண்டா விருந்தாளியாகச் சேர்ந்து கொள்கிறார். இவர்களுடன் படகிற்குள் ஒரு எலி, படகிற்கு வெளியே ஒரு சுறா.
கதை நிகழும் காலம், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமாகும். 1943 இல் நடக்கும் கதையில், கள்ளச்சாராயம், மணல் திருட்டு, ஏரியில் வீடு என்று கதாபாத்திரங்கள் பேசியே ஓய்கின்றனர். ஒன்பது கதாபாத்திரங்களும், தங்களின் நம்பிக்கையைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கதைக்கருவினை ஒட்டிக் கொஞ்சமே கொஞ்சம் தான் பேசுகிறார்கள். இடையில் காதல் போல் ஓர் அத்தியாயத்தையும் ஓட்டுகிறார் சிம்புதேவன். யார் யாருக்கு அடிமை என்ற தத்துவ விசாரம், துடுப்புப்படகுகாரரிடம் தொடங்கி மயிலாப்பூர், ஜார்ஜ் கோட்டை வழியாக லண்டன் மஹாராஜாவிடம் போய் முடிகிறது.
இரண்டாம் பாதியில் சர்வைவல் த்ரில்லராகப் பயணிக்க முயற்சி செய்யும் படம், முடியும் பொழுது, உலகம் முழுவதும் நகரங்களில் இருந்து விரட்டியடிக்கப்படும் பூர்வகுடிகள் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. படத்திற்கென ஒரு மையப்புள்ளி இல்லாமல் நடுக்கடலில் தவிக்கிறது துடுப்புப்படகு. படத்தின் முடிவு ரசிக்க வைத்தாலும், அது இயல்பாக எட்டப்படாமல் தொபக்கடீரெனக் குதித்தாற்போல் உள்ளது.
பரந்து விரிந்த கடல், அதிலொரு ஒற்றைப்படகு, கூட்டமாகப் பறக்கும் பறவைகள் என மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, நெய்தலின் அழகை மிக அழகாகத் திரையில் கொண்டு வந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். கதாபாத்திரங்கள் அதிகம் என்பதால், எந்தவொரு பாத்திரமும் தனித்து மனதில் நிற்கவில்லை. விதிவிலக்காக ஒருவரை மட்டும் குறிப்பிடலாம். யோகிபாபுவால் லூசுக்கிழவி என அழைக்கப்படும் குலப்புளி லீலாவைத்தான் படத்தின் நாயகி என்றே சொல்லவேண்டும். குறைவாகப் பேசி நிறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறார். எலி முதல் படகிலுள்ள அனைத்து உயிரும் பசியார வேண்டுமென உளமார நினைக்கிறார். அற்புதமான க்ளைமேக்ஸும் அவரில் இருந்தே தொடங்குகிறது. BOAT கரை சேருவது ‘கிழவி’ என விளிக்கப்படும் சாமான்யருள் மறைந்திருக்கும் காருண்யத்தாலே அன்றி, கதாபாத்திரங்களிடம் கொப்பளிக்கும் வெளிப்படையான மேதாவிலாசத்தினால் அல்ல.