Shadow

கப்பா வெற்றி – இளமை, த்ரில், வரலாறு

Washington-Sundar

இந்திய அணி, கப்பாவில் அடைந்த வெற்றியை வெறும் புள்ளிவிவரங்களால் சொல்லி விட முடியாது. உணர்வுகளால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும். 325 ரன்களை ஒரு டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், அதுவும் இலக்கை சேஸ் செய்யும் போட்டியில், கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், நாதன் லயன் என்ற மிகச் சிறந்த கூட்டணிக்கு எதிராக ஆடி ஜெயிக்கும் போது கொடுக்கும் உணர்வுகளை வெறும் வார்த்தைகள் சொல்லிவிடுமா என்ன?

நால்வரும் ஐசிசி தர வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இருக்கிறார்கள். அதில் பாட் கம்மின்சும், ஹேசல்வுட்டும், முதல் மற்றும் 4ஆம் இடங்களில் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவின் முண்ணனி பந்து வீச்சாளர்களோ காயம் காரணமாக வெளியே இருக்கிறார்கள். ஆஸி பந்து வீச்சாளர்களின் ஒட்டுமொத்த டெஸ்ட் அனுபவம் 250க்கும் மேல் என்றால், இந்திய பந்து வீச்சாளர்களின் அனுபவமே வெறும் 7 போட்டிகள்தான். ஆடிய வீரர்களில் ஒப்பீட்டளவில் அனுபவம் வாய்ந்த வீரரான சிராஜின் தர வரிசையே 46 ஆடிய போட்டிகள் 3 என்றால் பார்த்துக் கொள்ளலாம்.

ஆஸியைப் பொறுத்த வரை, தோல்வியை விட, யாரிடம் தோற்றார்கள் என்பதுதான் கூடுதல் வலி. அதுவும், ‘கப்பா எங்கள் கோட்டை’ என்று மார்தட்டிய பின்பு, அங்கேயே தோற்றது மிகப் பெரும் வலி!

இந்தத் தொடர் முழுக்கவே எல்லாருடைய பங்களிப்பும் இருந்தது என்றாலும், கடைசிப் போட்டியில் அது இன்னும் சிறப்பாக இருந்தது.

முதல் இன்னிங்சில், சுமார் 150 ரன்கள் முன்னிலை பெறுவோம் என்று மிதப்பில் இருந்த ஆஸியின் கனவில் மண்ணைப் போட்டது முதல் அடி. அதற்குக் காரணமாய் இருந்து, அந்த அடியின் வீரியத்தைக் கூட்டியது, எந்த முண்ணனி வீரர்களும் இல்லை, மாறாக நெட் பவுலராக வந்த வாஷிங்டன் சுந்தரும், ஸ்ரதுல் தாக்கூரும் என்ற உண்மைதான்.

ஆஸி அணியினர், புஜாராவிற்கும், ரோகித் சர்மாவிற்கும், ரகானேவிற்கும் திட்டம் போட்டிருக்கக் கூடும். ஆனால் அவர்களின் பார்வைக்குள்ளேயே இல்லாத சுந்தரும், தாக்கூரும் பேட்டிங்கில் சாதித்தது மனரீதியாக ஆஸியை கீழேயும், இந்தியாவை மேலேயும் வர வைத்தது!

அங்கு ஆரம்பித்த மைண்ட் கேம், கடைசியில் இந்தியா வெற்றி பெறும் வரை தொடர்ந்தது. இத்தனைக்கும் ஆஸியின் இரண்டாம் இன்னிங்சின் ஆரம்பம் மிகச் சிறப்பாகவே இருந்தது. 90க்கு அருகில்தான் முதல் விக்கெட்டே போனது. இப்போது யோசித்தால், இரண்டாவது இன்னிங்சில் இன்னும் கொஞ்சம் நிதானம் காட்டியிருக்கலாமோ என்று கூட அவர்கள் நொந்து கொள்ளக் கூடும். ஏனெனில், ஓட்ட விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சில விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அதுவே இந்தியாவிற்கு, ஒட்டு மொத்த இலக்காக 329ஐக் கொடுத்தது.

வழமையான ஆஸ்த்ரேலியா அணியின் பாணியிலேயே சென்று அதிலேயே அவர்களை வீழ்த்தியதுதான், இந்த வெற்றியின் சிறப்பம்சம்.

கடைசி நாளின் முன்பு, கிரிக்கெட் ரசிகர்களின் கருத்து மட்டுமல்ல, வல்லுநர்களின் ஆலோசனையும் கூட இந்தியா இந்தப் போட்டியை சமன் செய்தாலே போதும் என்பதுதான். அதிரடிக்கு முயற்சி செய்து விக்கெட்டுகளை இழப்பதை விட, சமன் செய்தாலே கோப்பையை அள்ளி விடலாம் என்பது மிகப் பாதுகாப்பான முடிவும் கூட.

நம்முடைய பாதுகாப்பு வட்டத்தைத் தாண்டி, நாம் எடுக்கும் முயற்சிகள்தான் நம்முடைய திறமையை உலகுக்கு பறைசாற்றுகின்றன என்பது அங்கே நிரூபணமானது.

ஆஸி அணியினர் உட்பட அனைவரும் இந்தியா சமன் செய்ய விளையாடும் என்று நினைத்திருக்க, இந்தியா வெற்றிக்காக விளையாட ஆரம்பித்தது. இந்தியாவின் திட்டம், முதலில் தோல்வியிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி நகர்த்த்துவது.

மதிய இடைவேளையின் போது அவர்கள் எடுத்திருந்த ரன்கள், 38 ஓவர்களில் 83 ரன்கள் மட்டுமே! அதாவது 2.2 ஓட்டவிகிதம்தான். அடுத்த 10 ஓவர்களில் இந்தியா சேர்த்த ஓட்டங்கள் 49. உணவு இடைவேளையில் 90 பந்துகளில் 8 ஓட்டங்களை மட்டும் எடுத்திருந்த புஜாரா, தேநீர் இடைவேளையில் 33 பந்துகளில் 18 ரன்களை எடுத்திருந்தார். சுப்மன் கில் 29 பந்துகளில் 27 ரன்களைச் சேர்த்தார்.

இந்திய அணியினர் கொஞ்சம் வேகமாக ரன்களைச் சேர்ப்பதை உணர்ந்த ஆஸி அணி, இப்போதுதான் பாடி அட்டாக் முறையில் பந்து வீச ஆரம்பித்திருந்தனர். அதைத் தொடர்ச்சியாக புஜாரா தடுத்தாலும், மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த சுப்மன் கில்லின் விக்கெட் விழுந்திருந்தது.

அடுத்து வந்த ரகானேயும் கொஞ்சம் வேகமாக ஆட ஆஸி அணியினர் பதட்டத்தை உணர ஆரம்பித்தனர். இந்தியா வெற்றிக்காக ஆடுகிறது என்பதை உணர்ந்தவர்கள் இன்னும் மூர்க்கமாக பாடி லைனில் வீச ஆரம்பித்தார்கள். நாதன் லயனின் பந்தை எதிர் கொள்வது மிகக் கடினமாக இல்லாவிடினும், திடீரென சில பந்துகள் மிகக் கன்னாபின்னாவென்று சுழன்று சென்றது அந்தப் பதட்டத்தை அதிகமாக்கியது.

ரகானே அவுட் ஆன போது, இந்திய அணி இன்னும் 43 ஓவர்களை எதிர் கொள்ள வேண்டும். சுமார் 160 ரன்கள் எடுக்க வேண்டும். ஏறக்குறைய 4 ரன்ரேட். அடுத்து உடனே ஒரு விக்கெட் போனால், மொத்த பதட்டமும் இந்தியாவுக்கு வந்து விடும் என்று உணர்ந்த புஜாராவும், பண்ட்டும், கவனமாக ஆடினாலும், ரன்களும் மெல்ல மெல்ல சேர்ந்து கொண்டேதான் வந்தது.

புஜாரா அவுட் ஆன சமயத்திலும் கூட, இன்னும் 20 ஓவர்கள் பாக்கி இருந்தது. ஆஸிக்கு புது பந்து கிடைத்திருந்தது. கம்மின்ஸ், ஓவொரு முறையும் விக்கெட் எடுக்கிறார் என்ற நிலையில் பண்ட் ஆடிய ஆட்டம் அவருடைய ஒட்டு மொத்த கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு ஆட்டமாக அமைந்தது. அவரேனும் அதிரடி பேட்ஸ்மேன் என்று ஆஸி அணியினர் மனதைச் சமாதானப் படுத்திக் கொள்ளலாம். ஆனால் சத்தமில்லாமல், சுந்தர் ஆடிய ஆட்டம் ரியல் மாஸ்.

எந்த கம்மின்ஸ் பயமுறுத்திக் கொண்டிருந்தாரோ அவருடைய ஓவரிலேயே 11 ரன்களும், அதைத் தொடர்ந்து லயன் ஓவரில், 15 ரன்களும் குவித்த போது இந்தியா வெற்றிக்கு அருகில் வந்திருந்தது. ஆஸி அணியினருக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு.

இந்திய அணி முழுக்க டிராவை நோக்கி விளையாடியிருந்தால், ஆஸி அணியினர் கடும் மூர்க்கமாக விக்கெட்டை எடுக்க பந்து வீசியிருப்பார்கள். ஆனால், ரன்கள் சேரச் சேர, அதிரடியாக வீசுவதா அல்லது நெகடிவ் லைனில், பாடி அட்டாக்கில் ரன்களை கட்டுப் படுத்துவதா என்று ஒவ்வொரு முறையும் ஆஸியைக் குழப்பத்திலேயே வைத்திருந்தனர் இந்திய அணியினர்.

இந்திய வீரர்கள் ஆடிய ஆட்டமும் அப்போது ஏற்பட்ட உணர்ச்சிகளும் எந்த த்ரில் படமும் கொடுக்காது என்றால், வெற்றி பெற்ற தருணம், பல சென்டிமென்ட் படங்களுக்குச் சமம்.

இந்த வெற்றி, 32 வருடங்களாக கப்பாவில் ஆஸ்திரேலியா தோல்வியையேச் சந்திக்கவில்லை என்ற வரலாற்றை மட்டும் மாற்றி எழுதவில்லை! ஆஸ்திரேலியா அணியை, அதன் பாணியிலேயே சென்று யாரும் வெற்றி கொள்ள முடியும் என்றும் காட்டியிருக்கிறது.

கத்துக்குட்டி அணி என்று சொல்லியவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் இந்திய அணியினர். வாழ்த்துகள்.

நரேஷ் குமார் நாகராஜன்