Shadow

“இது போலோரு வெற்றியுண்டோ!” – கலக்கிய இந்திய அணி

Historic-win

இந்திய அணியின் மிகச் சிறந்த வெற்றி ஏதுவெனக் கேட்டால் தயங்காமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாலாவது போட்டியின் வெற்றியைத் தாராளமாகச் சுட்டிக்காட்டலாம். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன், பெரும்பான்மையான முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுநர்கள், Arm Chair experts எனப்படும் சமூக வலைத்தள விஞ்ஞானிகளும் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும், அதுவும் சுலபமாக மிகப் பெரிய வித்தியாசத்தில் வெல்லும் என்று கணித்திருந்தனர்.

அதற்கேற்ப முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் நன்றாக விளையாடி முன்னிலையில் இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி பரிதாபமாகத் தோற்றது.

தன் குழந்தை பிறப்பிற்கான விடுமுறையில் கோலி இந்தியா திரும்பி விட, இரண்டாவது டெஸ்டில் ரஹானே தலைமையில் களம் கண்ட இந்தியா அணி அபார வெற்றியைப் பெற்று தொடரைச் சமன் செய்தது.

மூணாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா பெரும்பான்மையான நேரம் ஆதிக்கம் செலுத்தினாலும் கடைசி நாளில் இந்தியா அணி புஜாரா, பண்ட், விஹாரி, அஸ்வின் தடுப்பாட்டத்தில் போட்டியை டிராவில் முடித்தது.

ஏற்கனவே காயம் காரணமாக முதல் டெஸ்டுக்கு பிறகு சமியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த உமேஷ் யாதவும் தொடரிலிருந்து விலகிய நிலையில் இந்தியா அணியின் பௌலிங் யூனிட்டுக்கு அடுத்த அதிர்ச்சியாக ஜடேஜா, அஸ்வின், பும்ராவும் மூணாவது போட்டியில் அடைந்த காயம் காரணமாக நாலாவது டெஸ்டில் விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தத் தொடரில் அறிமுகமான சைனி, சிராஜ், இதற்கு முன் ஒரு டெஸ்டில் மட்டும் விளையாடிய சர்துல் தாகூர், இந்தப் போட்டியில் புதிதாகக் களமிறங்கிய சுந்தர், நடராஜனை நம்பியே இந்திய அணி களமிறங்கியது.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கி 369 ரன்கள் குவித்தது. நடராஜன், சுந்தர், சர்துல் தலா மூன்று விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பண்ட் வெளியேற 186-6 என்ற தள்ளாட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது, மீதமிருந்த வீரர்களில் யாரும் 2 டெஸ்ட் போட்டிக்கு மேல் விளையாடாதவர்கள், மேலும் பந்து வீச்சாளர்கள் அதனால் சீக்கரம் ஆல்- அவுட் பண்ணி நல்ல லீட் எடுத்திடலாம் என்ற ஆஸ்திரேலியா வீரர்களின் நம்பிக்கையைச் சுந்தரும், சர்துல் தாகூரும் தகர்த்தனர். இருவரும் அரை சதம் அடித்ததோடு ஏழாவது விக்கெட்டுக்கு இருவரும் 123 ரன்கள் சேர்த்தனர் . இந்திய அணி 336 ரன்னுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

33 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

சைனி போட்டியினிடையே காயமடைந்தாலும் சிராஜின் 5 விக்கெட்டும், தாகூரின் 4 விக்கெட்டும் ஆஸ்திரேலியாவை 298க்கு ஆட்டமிழக்கச் செய்ய போதுமானதாக இருந்தது.

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 4 ரன் எடுத்த நிலையில் மழை குறுக்கிட ஆட்டம் நாலாவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிந்தது.

33 ஆண்டுகளில் கப்பாவில் (Gabba) ஆஸ்திரேலியா தோற்றதில்லை, தன் முதல் ஆஸ்திரேலியப் பயணத்தை 1947இல் தொடங்கிய இந்திய அணி இதுவரை கப்பாவில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையில் வெற்றி பெற இந்தியாவுக்கு 325 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு 10 விக்கெட்டும் தேவைப்பட விறுவிறுப்பான கடைசி நாள் தொடங்கியது.

ரோகித் சர்மா 7 ரன்னில் வெளியேறினாலும், கில்லும், புஜாராவும் மேலும் விக்கெட் விழாத வண்ணம் கவனத்தோடு ஆடினார்கள். 91 ரன்னில் கில் ஆட்டமிழக்க, அந்த நிலையில் இந்தியாவுக்கு வெற்றிக்கு 196 ரன்கள் தேவைப்பட்டது, நாளோடு மினிமம் ஓவர் 52 ஓவர் இருந்தது . 20/20 காலத்தில் இது சுலபமான இலக்காகத் தெரிந்தாலும், டெஸ்ட் போட்டியில் அதுவும் கடைசி நாளில் அத்தனை சுலபமான இலக்கு கிடையாது என்பதை நீண்ட நாளாக டெஸ்ட் போட்டிகளைக் கவனிப்பவர்களுக்குப் புரியும். எப்படியேனும் தட்டுத் தடுமாறி டிரா பண்ணாலும் போதும், கப் நமக்குத் தான் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில், களம் புகுந்த கேப்டன் ரஹானே, நாங்கள் டிரா பண்ண வரலை என்பதை தன் ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தினார். அதிரடியாக ஆடி 22 பந்தில் 24 ரன்கள் குவிந்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்து பண்ட் முதலில் தடுப்பட்டாத்தில் கவனம் செலுத்தினாலும், நிலை பெற்ற பின் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். இந்நிலையில் 56 ரன் குவித்திருந்த புஜாரா ஆட்டமிழக்க இந்திய அணி 228/4 என்ற நிலையிலிருந்தது.

வெற்றிக்கு 100 ரன்னும் 20 ஓவரும் மிதமிருந்த நிலையில் வெற்றி, தோல்வி, டிரா என அனைத்தும் வாய்ப்பிருந்தது. அடுத்து வந்த மயாங்க் அகர்வால் 9 ரன்னில் வெளியேற, 2014 அடிலாய்ட் டெஸ்டின் ஞாபகத்தில் வந்து போனது.

2014 அடிலாய்ட் டெஸ்டில் இதே போல் ஒரு இமாலய இலக்கை வெற்றிக்கு அருகில் வந்து இந்திய அணி தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆனால் அடுத்து வந்த சுந்தர், பண்ட்டோடு சேர்ந்து அதிரடியாக ஆடி வெற்றியின் வழியில் இந்திய அணியைத் தள்ளினார்.

வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்றிருந்த நிலையில் சுந்தர் வெளியேற, பின் வந்த தாகூர் 2 ரன்னில் வெளியேறினாலும் பண்ட் பௌண்டரி அடித்து இந்திய அணிக்கு வரலாற்று வெற்றியைத் தேடித் தந்தார்.

இந்தியாவின் First choice opener-ராக சுபம்கில் இல்லை, இந்தியாவின் First Choice wicket keeper-ராக ரிஷப்பண்ட் இல்லை, இந்தியா முதலில் அறிவித்த Test Squadயில் சுந்தர், நடராஜன், சர்துல் தாகூர் இல்லை , ஆனால் இவர்களெல்லாம் சேர்ந்து இந்தியாவை இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பது தான் இந்தப் போட்டியின் சிறப்பம்சம்.

கடந்த ஆஸ்திரேலியப் பயணத்தின் போதும் டெஸ்ட் தொடரை 2 -1 என்ற கணக்கில் வென்றிருந்தது இந்திய அணி. இந்த முறையும் அதே வித்தியாசத்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதற்கும் இதற்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால்,போன முறை சில முதன்மை வீரர்கள் இல்லாத ஆஸ்திரேலியா அணியை இந்தியா வென்று இருந்தது. இந்த முறை முதன்மை வீரர்கள் பலர் இல்லாத இந்திய அணி பலமான ஆஸ்திரேலியா அணியை வென்று சாதனை படைத்துள்ளது.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்