
இயக்குநர் ஸ்டான்லி டாங்கின் ‘தி மித் (2005)’, ‘குங்ஃபூ யோகா (2017)’ ஆகிய படங்களில், ஜாக்கிசான் தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் தோன்றிக் கலகலப்பாகச் சாகசம் செய்திருப்பார். கங்குவா நாயகி திஷா பட்டானியுடனும், சோனி சூத்-உடனும் இணைந்து குங்ஃபூ யோகா படத்தில் நடித்திருப்பார். அப்படங்களின் தொடர்ச்சியாக, ‘எ லெஜெண்ட் (தி மித் 2)’-வாக வெளியாகியுள்ளது. தமிழில், விஜயபுரி வீரன் என மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர்.
பனிப்பாறையில் ஒரு பழங்கால மரகதப் பதக்கம் கிடைக்கிறது. அப்பதக்கம் கிடைத்தது முதல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ராம் அவர்களுக்கு, விநோதமான கனவுகள் வருகின்றன. அக்கனவுகளில், விஜயபுரி வீரனான வீராங்கனின் வாழ்க்கை பற்றியும், மரகதப் பதக்கம் பற்றியும், அவரது காதலி பற்றியும் தெரிய வருகிறது. அக்கனவு அவரைக் கபாடபுரம் மறைத்து வைக்கும் பொக்கிஷத்திற்கு இட்டுச் செல்கிறது.
AI தொழில்நுட்பத்தின் உதவியால், வீராங்கன் கதாபாத்திரத்தில் 27 வயது வீரனாகத் தோன்றுகிறார் ஜாக்கிசான். மிக லிமிடெட் உணர்ச்சிகள்தான் அவர் முகத்தில் தோன்றுகிற போதும், இளமைச் செழிப்பை முகத்தில் நன்றாக முகத்தில் கொண்டு வந்துள்ளனர். இளம் வயது ஜாக்கி சானின் காதலி பெயர் பூங்குழலி. ஹான் சாம்ராஜ்யம், பேராசிரியர் ஃபாங், வாங் ஜிங் என்றே உபயோகப்படுத்தியிருக்கலாம். வீராங்கனின் நண்பன் பெயர் சுந்தரா, தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் உதவியாள் பெயர் மனோஜ், மனோஜின் காதலி பெயர் சிம், பொக்கிஷத்தை மறைத்து வைப்பவரின் பெயர் அஜபதி. AI ஜாக்கிசான், ‘சுந்தரா’ என அலறும்போது, கார்டூன் சேனல் பார்க்கிறோமோ என்ற மயக்கத்தைத் தருகிறது.
மிகவும் சுமாரான திரைக்கதை என்பதால் லெஜெண்டின் வீரமோ, காதலோ, நட்போ, சாகசமோ எடுபடாமல் போய்விடுகிறது. AI-இன் சாத்தியக்கூறுகளை மட்டுமே படத்தில் வியக்க முடிகிறது.